கோவையில் முதல்தர கிரிக்கெட் மைதானம்!

By செய்திப்பிரிவு

ஐபிஎல், டிஎன்பிஎல், உள்நாட்டு, வெளிநாட்டு அணிகள் மோதும் முதல்தர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட போட்டிகள் அனைத்தையும் விளையாடும் அளவுக்குத் தரமான மைதானங்களை முதல்தர கிரிக்கெட் மைதானம் என்று அழைப்பார்கள்.

கோவையில் நீண்டகாலமாக முதல்தர கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டுமென்ற ரசிகர்களின் நீண்டகால கோரிக்கை இப்போது நிறைவேறத் தொடங்கியுள்ளது. கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரியில் தயாராகி வருகிறது முதல்தர கிரிக்கெட் மைதானம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக ரசிகர்கள் இருப்பது கிரிக்கெட் விளையாட்டுக்குத்தான். உலக அளவில் கால்பந்துப் போட்டி பிரபலம் என்றாலும், நம் நாட்டில் கிரிக்கெட்டுக்குத்தான்  மவுசு அதிகம். கிரிக்கெட் போட்டிகளை நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெருநகரமான கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரபல வீரர்களின் ஆட்டத்தை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா? என்று காத்திருக்கின்றனர்  கோவை ரசிகர்கள்.

சர்வதேசப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக,  ஐ.பி.எல். என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக், டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.  டி.என்.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்களும் விளையாடுகின்றனர்.

இதுபோன்ற இரண்டாம் தர கிரிக்கெட் போட்டிகளாவது கோவையில் நடத்தப்படுமா? என்று எதிர்பார்க்கின்றனர் கோவை ரசிகர்கள். டி.என்.பி.எல். போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகின்றன. இதேபோல, கோவையிலும் இப்போட்டி நடக்குமாஎன்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கச்  செயலர் எஸ்.கௌதமன் கூறும்போது, “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை,  அறிவியல் கல்லூரி மைதானத்தில் முதல்தர கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் மைதானம், நடுவில் பிட்ச், பயிற்சி மேற்கொள்ளும் வலை மற்றும் மைதானத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த உடன், முதல்கட்டமாக டி.என்.பி.எல். போட்டி நடைபெறும். அதில்,  விளையாடும் இந்திய அணி வீரர்களின் ஆட்டத்தை, கோவை ரசிகர்கள் நேரில் பார்த்து மகிழலாம்.தற்போது எந்தவகையான போட்டி என்றாலும்,  உலக கோப்பை போட்டிக்குப் பிறகே நடைபெறும். அதற்குள் இந்த மைதானத்தின் பணிகள் நிறைவடைந்துவிடும். முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறும்போது, “முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்கும் வீரர்களால்தான்,  சர்வதேச போட்டிகளில் எளிதாக நுழையமுடியும். இந்திய அணியின் எதிர்காலமாக விளங்கும் கிரிக்கெட் வீரர்களை, கிரிக்கெட் ஆர்வலர்களும், ரசிகர்களும் முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கு,  இவ்வகை போட்டி உதவும்.

குறிப்பாக, தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விளையாடும் வீரர்கள், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20  போட்டிகளில் இடம் பிடிக்க முடியும். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் அசத்தி வரும் இளம் வீரர்களின் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பும் கோவை ரசிகர்களுக்கு கிடைக்கும்.

கோவை வீரர்களான ஜெகதீசன், கௌசிக் ஆகியோர் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். ஹரிநிஷாந்த், மோகன் பிரசாத், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாடி வருகின்றனர்.ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஹரிநிஷாந்த், ஜெகதீஷ், சுஜய், கௌசிக், அபிநவ், மோகன் பிரசாத், கௌதம் தாமரைக் கண்ணன், ஷாஜகான், மிதுன் உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் விளையாடி வருகின்றனர். உள்ளூர் வீரர்களான இவர்கள்,  சொந்த மைதானத்தில் விளையாடி முதல்தர போட்டியில் சாதித்து, சர்வதேச போட்டியில் நுழைய இப்போட்டி வழிவகுக்கும்” என்றனர் நம்பிக்கையுடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

இந்தியா

46 mins ago

வர்த்தக உலகம்

54 mins ago

ஆன்மிகம்

12 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்