வாக்குச்சாவடிகளில் தங்குவதற்கு வசதிகள் இருக்கின்றனவா?- ஒவ்வொரு தேர்தலிலும் பெண் ஊழியர்கள் பரிதாபம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வாக்குச்சாவடி மையங்களில் பெண் அலுவலர்கள், ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் ஒவ்வொரு தேர்தலிலும் பெண் ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் வாக்களிக்க 67,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் அரசு பள்ளிகளில் அமைக்கப்படுவதுதான் வழக்கம்.

இந்த மையங்களுக்கு தலைமை அதிகாரி உட்பட வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முதல் நாளான 17-ம் தேதியே வர வேண்டும். அவர்கள் அன்று இரவும், மறுநாள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் வந்து பெற்றுக்கொள்ளும் வரையிலும் வாக்குச்சாவடி மையங்களில் தங்க வேண்டும்.

ஆனால், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் பெரும்பாலான பள்ளிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்கள் தங்குவதற்கும், கழிப்பிடம் செல்வதற்கும் போதிய வசதிகள் இருப்பதில்லை. இதனால் பெண் ஊழியர்கள் தேர்தல் பணி என்றாலே ஓட்டம் பிடிக்கின்றனர்.

ஆனால் தேர்தல் பணி ஒதுக்கிய பிறகு அதில் இருந்து விடுவிக்க மாட்டார்கள் என்பதால் பெண் ஊழியர்கள் விருப்பமில்லாமல் தேர்தல் பணிக்குச் செல்கின்றனர். அதனால், வாக்குச்சாவடி மையங்களில் பெண் அதிகாரிகள், பெண் ஊழியர்கள் தங்கிப் பணிபுரிய அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்துதர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பெண் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தலுக்கு முதல் நாள் வாக்குச்சாவடிக்கு சென்றதும் அங்குள்ள அடிப்படை வசதிகள், வாக்குப்பதிவு நடத்தத் தேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

வாக்குச்சாவடி மையத்துக்கு சரியான நேரத்தில் செல்லாவிட்டாலும், ஒழுங்காகப் பணிபுரியாவிட்டாலும் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். நேரத்துக்கு சாப்பாடு, தேநீர்கூட கிடைக்காது. கேட்டால், ஒரு நாள்தானே, சமாளித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறார்கள்.

சில நேரங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே வசிக்கும் வீடுகளில் இருக்கும் பெண்கள் பரிதாபப்பட்டு தங்கள் வீடுகளில் குளிக்க அனுமதிப்பார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு இருப்பதால் அடுத்த நாளும் தங்கும் சூழ்நிலை உள்ளது. அதனால், பெண்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 secs ago

இந்தியா

12 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

30 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

56 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்