ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து; ரூ.4 லட்சம் கோடி கடன்: தேர்தல் ஆணையத்துக்கு சவால்விடும் பெரம்பூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர்

By செய்திப்பிரிவு

பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நகைப்புக்காக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து என பொய்க்கணக்கைத் தாக்கல் செய்து வேட்பாளராக நிற்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை விளக்கவே தாம் ஒவ்வொரு முறையும் இப்படி போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் பிரபலமான கட்சி ஜனதா தளம். அதன் தமிழக தலைவராக இருந்தவர் நெல்லை ஜெபமணி. நேர்மையாளர், காந்தியவாதி. அவரது மகன் நெல்லை மோகன்ராஜ். இவர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

சமீபத்தில் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மோகன்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைக்கப்படும் வேட்பாளர் சொத்து, கடன் குறித்த விவரங்களுக்கான படிவத்தில் தனது சொத்து ரூ. 1 லட்சத்து 76,000 கோடி என்றும், கடன் ரூ. 4 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் வேட்பமனு பரிசீலனை முடிந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது வேட்பமனுவின் அஃபிடவிட் தற்போது வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது முகநூலில் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மோகன்ராஜ் கூறியிருப்பதாவது:

''பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். படிவம் 26 அளிக்க வேண்டும். ரூ.1 லட்சத்து 76000 கோடி கோடநாட்டில் 600 ஏக்கர் எஸ்டேட், கோபாலபுரத்தில் 6 வீடுகள் உள்ளன. போயாஸ் தோட்டத்தில் பெரிய பங்களா உள்ளது. 4 லட்சம் கோடி கடன் உள்ளது என பதிவு செய்துள்ளேன்.

இது அப்பட்டமான பொய். இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் அதற்குப் பின்னணி உள்ளது.  2014-ல் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிற்கிறார். ஸ்ரீவத்சவா என்கிற இன்கம்டாக்ஸ் கமிஷனர் கார்த்தி சிதம்பரம் நிறைய பொய் சொல்லியிருக்கிறார் என அஃபிடவிட் தாக்கல் செய்தார்.

அப்போது அந்த வழக்கை நான் கவனித்தேன். பொய்யான அஃபிடவிட் தாக்கல் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை என்பதை அறிந்து, ஏன் இந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டு கடிதம் எழுதினேன். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தேன். அது விசாரணைக்கு வரவே இல்லை.

அதன் பின்னர் தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் பொய்யான அஃபிடவிட் தாக்கல் செய்தால் 6 மாதம் சிறை தண்டனை என்ற தண்டனையை ரத்து செய்துவிட்டோம் என்று பதில் அனுப்பி வேண்டுமானால் நீங்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர்.

அதனால்தான் கிண்டலுக்கு கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இப்போது சொன்னதுபோல் 1 லட்சத்து 76,000 கோடி சொத்து உள்ளதாக முன்பு அஃபிடவிட் தாக்கல் செய்தேன். அதற்கு முன் 2009-ல் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இதேபோன்றுத்தான் அஃபிடவிட் தாக்கல் செய்தேன்.

அப்போது வடநாட்டிலிருந்து பிரபல ஆங்கில நாளிதழ் என்னை பேட்டி கண்டது. நீங்கள் தான் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் என்ன செய்யப்போகிறீர்கள் எனக்கேட்டார்கள். சோனியா தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்று அபிடவிட்டில் பதிவு செய்துள்ளார், தயாநிதி மாறன் சொந்தமாக வீடு இல்லை என அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இருவருக்கும் உதவலாம் என நினைக்கிறேன் என்று தெரிவித்தேன்.

அந்த ஆங்கில நாளேட்டிடம், போலித் தகவலுடன் அஃபிடவிட் தாக்கல் செய்த தகவலையும் தெரிவித்தேன். முடிந்தால் இவ ர்மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்கிற தலைப்பில் செய்தி வெளியானது. அதனால் எனது போராட்டம் அப்போதே ஆரம்பித்துவிட்டது.

அதனால் அஃபிடவிட்டில் என்னவேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கொலை செய்தேன், கொள்ளை அடித்தேன் என்று பதிவு செய்யலாம். பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் இன்னாருடையது இவர் மீது இன்ன நடவடிக்கை எடுத்தோம் என எப்போதாவது தகவல் வந்துள்ளதா? ஆகவே அதெல்லாம் வெறும் நடவடிக்கைத்தான்.

6 மாத தண்டனை ரத்து என்பதை எப்படி மாற்றினீர்கள். படிவம் 26- ஐ எதற்காக அளிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். என்ன வேண்டுமானாலும் தப்பாக பதிவு செய்யலாம் தண்டனை இல்லை என்றால் எதற்காக அந்த படிவத்தை அளித்து தகவலைச் சேர்க்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவதை உணர்த்துவதற்காகத்தான் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து என அஃபிடவிட் தாக்கல் செய்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஜெபமணி மோகன்ராஜின் பொய்யான நகைப்புக்குரிய அஃபிடவிட் ஏற்கப்பட்டு பெரம்பூர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக, இவருக்கு பச்சை மிளகாய் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

48 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்