7 தமிழர் விடுதலைக்காக நாளை மனித சங்கிலிப் போராட்டம்: பாமக கை கோக்கும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

7 தமிழர் விடுதலைக்காக நாளை நடைபெறவிருக்கும் மனித சங்கிலிப் போராட்டத்தில் பாமக கை கோக்கும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் நாளை 9-ம் தேதி சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதில் சட்ட ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எந்தச் சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது.

அதனடிப்படையில் தான் தமிழக அமைச்சரவையும் 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 181 நாட்களாகி விட்ட நிலையில், அதன் மீது இன்று வரை ஆளுநர் மாளிகை முடிவெடுக்காததன் பின்னணிக் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

7 தமிழர் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் பாமக முயன்று வருகிறது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் நான் நேரில் வலியுறூத்தியுள்ளேன். அதிமுகவுடனான கூட்டணிக்கான 10 கோரிக்கைகளில்  ஒன்றாக 7 தமிழர்கள் விடுதலையும் சேர்க்கப்பட்டுள்ளது.

வண்டலூர் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தியதுடன், அதற்கான மனுவையும் அளித்தேன்.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பாமக மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் தென்படத் தொடங்கியுள்ளன. வெகுவிரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பாமக நம்புகிறது. 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பாமக தொடர்ந்து பாடுபடும்; வெற்றி பெறும்.

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட இருப்பது குறித்தும், அப்போராட்டத்தில் பாமக கலந்து கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் என்னை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அப்போதே அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மனித சங்கிலிப் போராட்டத்திற்கு பாமக ஆதரவை தெரிவித்திருந்தேன்.

அதன்படி, சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய தமிழக நகரங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மாலை நடைபெறவுள்ள மனித சங்கிலியில் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கைக்கோர்ப்பார்கள்" என, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்