தீவிரவாதிகளின் புகலிடம் எது? ஜெயலலிதா பதில் கூறுவாரா?- கருணாநிதி கேள்வி

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சியின் போது ”தீவிரவாதிகளின் புகலிடம் தமிழ்நாடு” என்று புகார் எழுப்பிய ஜெயலலிதா இப்போது என்ன கூறுகிறார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே தமிழகத்தின் ஏடுகளில் வெளி வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கும் முக்கிய செய்தியில், மாநிலத்தில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட ஒரு குழுவே சதித் திட்டம் வகுத்துள்ளது என்று தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது என்பதாகவும், இதையடுத்து அவர்களின் தேடுதல் வேட்டையில் சென்னையில் பதுங்கியிருந்த அருண் செல்வராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகவும், தமிழகத்தின் முக்கிய இடங்களைக் குண்டு வைத்துத் தகர்த்து மாநிலத்தையே நிலைகுலையச் செய்திடும் நாச வேலைக்கான திட்டத்தை தீவிரவாதிகள் வைத்துள்ளனர் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் அத்துமீறி நுழைந்து அழிவு வேலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருவதும் அம்பலமாகியுள்ளது. இந்த ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம், தமிழகத்திற்கு அனுப்பிய உளவாளிகள் தொடர்ந்து கைதான வண்ணம் உள்ளனர்.

சதித் திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராசனிடம் விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறும்போது, மும்பையை அடுத்து,சென்னையில் ஒரு மிகப் பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையொட்டி தமிழகக் கடலோரப் பகுதிகள் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பு வளையத்தை முறியடித்திட, பாகிஸ்தானின் சதி வேலைகள் தொடங்கி விட்டன. அதில் ஒரு கட்டமாக ராணுவக் கட்டமைப்புகளின் புகைப்படங்கள் மற்றும் எந்த வழியாக வந்து அவற்றின் மீது எப்படித் தாக்குதல் நடத்துவது வசதியாக இருக்கும் என்பன போன்ற தகவல்களை வரைபடம் மூலம் திரட்டி, இணையதளம் வாயிலாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துhதரக அதிகாரிகளுக்கு அருண் செல்வராசன் அனுப்பியிருக்கிறார். மேலும் உளவுக் கும்பலைச் சேர்ந்த 4 அல்லது 5 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளதாகவும், அதுபற்றித் தொடர்ந்து அருண் செல்வராசனிடம்விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணை நடத்திய அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்தத் தீவிரவாதி யாரோ ஒரு அரசியல் வாதியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றும் செய்தி வந்திருக்கிறபடியால், யார் அந்த அரசியல் வாதி என்பதையும் வெளியிட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்ற தீவிரவாதிகள் கைது செய்யப்படுவது இது தான் முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் தமீம் அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமிர் சுபைர் சித்திக், சாஜி என்பவர் மூலமாக அன்சாரியைப் பயன்படுத்தி தமிழகத்தில் உளவு பார்க்க அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி, தனது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக்ஆகியோருடன் கைது செய்யப்பட்ட செய்தியும் வெளி வந்தது. ஜாகிர் உசேனும் இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக் துhண்டுதலின் பேரில் அமெரிக்கத் துhதரகம், மற்றும் சில முக்கிய கட்டிடங்களை படம் பிடித்து அனுப்பியதாகக் கூறியதை அடுத்து, பாகிஸ்தான் துhதரக அதிகாரி சித்திக், அந்த நாட்டுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் - செயல்பாடுகள் ஆகியவை பற்றித் தொடர்ந்து வெளி வரும் செய்திகள் பெரும் பீதியை உருவாக்கித் தமிழக மக்களை உறைய வைத்துள்ளன.

தி.மு.கழக அரசு பதவியில் இருந்த போது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அண்டை மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் வளர்ந்து வந்த நக்சலைட்டு தீவிரவாத செயல்களைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதச் செயல்கள் தமிழகத்தில் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளத் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்தது. தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்; நக்சலைட் பயிற்சி முகாம்கள் தடுக்கப்பட்டன; அவர்கள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்களும், உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

1992ஆம் ஆண்டு முதல் கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் 15 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய நக்சலைட்டு தலைவர் சுந்தரமூர்த்தி கைது செய்யப்பட்டார். மேலும் 1980ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த முக்கிய நக்சலைட்டு தலைவரான நொண்டி பழனி என்பவரும் 19-1-2007 அன்று கழக ஆட்சியில் கைது செய்யப்பட்டார்.தி.மு. கழக அரசு அவ்வப்போது காவல் துறையினருக்கு தக்கஆலோசனைகள் வழங்கி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்,அமைதியைப் பராமரிக்கவும் தீவிரவாதச் செயல்கள் வேரூன்றாமல் கண்காணிக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. அப்படியிருந்தும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா 21.04.2008 வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்புப் பற்றியும் குறை கூறியிருந்தார். குறிப்பாக, “தீவிரவாதிகளின் புகலிடம் தமிழ்நாடு” என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தீவிரவாதிகளின் நட மாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக் கூடிய அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய் விட்டது” என்றெல்லாம் அறிக்கை விட்டவர், இப்போது எங்கே போனார்? என்ன சொல்லப் போகிறார்?

2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மதுரை - திருமங்கலம் அருகே பா.ஜ.க. வின் மூத்தத் தலைவர், அத்வானி அவர்கள் ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில் ஓடைப் பாலத்தின் அடியில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதும்அ.தி.மு.க. ஆட்சியிலே தான்!கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒரு பெண்மணி இறந்து போனார். அதற்குக் காரணமானவர்கள் யார் என்று இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டன அறிக்கை விடுத்த போதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கொடநாட்டில் இருந்தவாறே எனக்கு மட்டும் பதில் கூறி அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டுக் காட்டியிருந்தார். அதற்கும் நான் 14-2-1998 அன்று கோவை வெடி குண்டுச் சம்பவம் நடந்த மறு நாளே முதலமைச்சராக இருந்த நான் கோவைக்குச் சென்றது பற்றியும், மருத்துவ மனையிலே இருந்தவர்களைச் சந்தித்தது பற்றியும், நிவாரண நிதி அளித்தது பற்றியும் தெளிவாகப் பதிலளித்தேன். ஆனால் ஜெயலலிதா கோவைக் குண்டு வெடிப்பு நடந்த போது, “குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா?” என்று கேள்வி கேட்டவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த பின்னரும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் கூறப் போகிறார்?

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்