புதிய தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது: வெங்கய்ய நாயுடு பேச்சு

By செய்திப்பிரிவு

39,000 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரையாற்றினார்.

கோவை மாவட்டம் நீலாம்பூரில் பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கல்வி நிலையங்களுக்கு நான் வருகை தருவதென்பது ஒருவகையில் புனிதப் பயணம் போலத்தான் அமைகிறது. ஒரு கல்வி நிலையத்திற்குச் செல்வதென்பது நமது சமூகத்தின் மிகச் சிறந்த, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய புனிதப் பயணம்தான். பெருமைமிக்க இந்தக் கல்வி நிலையத்திற்கு இன்று நான் வந்திருப்பதும் கூட அத்தகையதொரு தருணம்தான்.

நண்பர்களே, நாம் அனைவருமே  'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற (லால்பகதூர்) சாஸ்திரியின் அறைகூவலைக் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறோம். 1998-ம் ஆண்டில் ஆபரேஷன் சக்தி என்ற இயக்கம் வெற்றி பெற்றதை அடுத்து, நமது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நவீன சமூகத்தில் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த அறைகூவலுடன்  'ஜெய் விஞ்ஞான்' என்ற கோஷத்தையும் இணைத்தார்.

இன்று நமது எதிர்கால தொழில் முனைவோர், வல்லுநர் ஆகியோரின் கண்டுபிடிப்புக்கான உத்வேகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இப்போது இந்த அறைகூவல் 'ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்ஞான், ஜெய் அனுசந்தன்' என்பதாகவே இருக்க வேண்டும். 

ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கும், புதுமையானதொரு கருத்து உருவாக்கத்தில் இருந்து வணிகரீதியான ஒரு பொருளாக உருப்பெறுவதற்கான மதிப்புக் கூட்டலுக்கான சங்கிலியை நாம் வலுப்படுத்த வேண்டியுள்ளது. அறிவுசார் சொத்துரிமை வலுப்பெற்று உள்ள இக்காலத்தில், இளம் நிபுணர்களின் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் தொடங்கும் திறன் ஆகியவை, நமது பொருளாதாரத்தை புதிய உச்சத்தை அடையவும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கினை வகிக்கும்.

அறிவுத் திறன் என்பதுதான், இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக மாறவிருக்கிறது என்பதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியமான பங்கினை வகிக்கவிருக்கிறது. எனவே, இத்தருணத்திற்கு ஏற்றவகையில் இந்தியா விழித்தெழுந்து தனது உயர்கல்வி முறையை உலக அளவில் போட்டியிடும் வலிமையுடையதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.

கல்வி என்பது வேலைக்கானது மட்டுமல்ல; உமியில் இருந்து அரிசியைப் பிரிப்பது போல தனிநபர்கள் அறிவையும் ஞானத்தையும் கொண்டவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதுமாகும். எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் அனைத்து மட்டங்களிலும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியமானதாகும்.

தனது மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதிற்குக் குறைவான இளைஞர்களைக் கொண்டதாக  இந்தியா இப்போது மகத்தான வாய்ப்பை பெற்றுள்ளது. இப்போது நம்மிடம் உழைக்கும் திறன் மிக்க சுமார் 48 கோடி பேர் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 கோடி பேர் இந்தப் பட்டியலில் இணைகின்றனர். எனினும் மக்கள் தொகை அடிப்படையிலான இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு 2040 வரையிலான 20 ஆண்டு கால அவகாசம் மட்டுமே நம்மிடம் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வியறிவு பெற்ற மாபெரும் இளைஞர் சக்தி நம்மிடம் இருக்கும் நிலையில், அவர்களின் செயல் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அறிவு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான மையமாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டியதே இன்றைய தேவையாகும். ஒருகாலத்தில் இந்தியா விஸ்வகுரு (உலகத்தின் ஆசான்) என்று அழைக்கப்பட்டு வந்ததையும் உலகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 27 சதவீதத்தை நமது நாடு அளித்து வந்ததையும் தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உலகத்தின் முன்னோடி பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியாவின் நிலையை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நமது உயர்கல்வி நிறுவனங்களை கற்பித்தலுக்கான உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களாக மாற்றியமைப்பதோடு, நமது உற்பத்தி துறைகளை பெருமளவிற்கு விரிவுபடுத்த வேண்டிய தேவையும் நமக்குள்ளது.

அதே நேரத்தில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தனித்திறனுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, புதுமையான தொழில்முனைவை ஊக்குவிப்பது ஆகியவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நமது இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மாறுவதற்கு அனுமதிக்காமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாறுவதற்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தர வேண்டியதும் அவசியமாகும்.

நமது இளம் தொழில் முனைவர்கள் படிப்படியாக மற்றவர்களுக்கு வேலை வழங்குபவர்களாக மாறிக் கொண்டிருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய தொழில் முனைவுகளின் மூலம் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு சமூகமாக இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது.

புதிய தொழில் முனைவில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழில் முனைவுகள் குறித்த தங்களது கொள்கைகளை தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் உருவாக்கியுள்ளதை அறிந்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 39,000 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருக்கிறது.

இத்தகைய புதிய தொழில்களில்  44% இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியதொரு விஷயமாகும். புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய தொழில்முனைவிற்கான கலாச்சாரம் என்பது பெரிய நகரங்களுடன் நின்றுவிடவில்லை; அது சிறிய நகரங்களிலும் செழித்து வருகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

உலகத்தின் முதலீட்டாளர்களும் கூட நமது புதிய தொழில் முனைவுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். மாற்று முதலீட்டு நிதிகளின் மூலம் இத்தகைய புதிய தொழில் முனைவுகளுக்கு வந்துள்ள தொகை ரூ. 80,000 கோடியை எட்டியுள்ளது. நமது தொழில்முனைவர்களின் தாங்கு சக்தியையும் வர்த்தகத்தின் நிலை சக்தியையுமே இது எடுத்துக் காட்டுகிறது.

இன்று இந்த கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் இளம் மாணவர்கள், புதிய கண்டுபிடிப்பு முனைவர்கள், புதிய தொழில் முனைவர்கள் இந்த நிலையத்தின் பெருமையை மேலும் வளர்க்க உதவுவார்கள் என்றும் நம்புகிறேன்''.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்