இளைய தலைமுறையினரிடம் வன்மத்தை விதைக்கும் ‘பப்ஜி’ வகையிலான இணையதள விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்: உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்

By சி.பிரதாப்

இளைய தலைமுறையினரை வசியப்படுத்தி வன்மத்தை விதைக்கும் ‘பப்ஜி’ வகையிலான இணையதள விளையாட்டுகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தென்கொரியாவின் ‘கொசுசன் டாகாமி’ எழுதிய ‘பேட்டில் ராய்லி’என்ற நாவலைத் தழுவி பப்ஜி(PUBG-Player Unknown BattleGround) என்ற இணையதளவிளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 நபர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்படுவார்கள். அந்தத் தீவில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி கடைசிவரை யார் உயிருடன் உள்ளனரோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.

2017-ம் ஆண்டு அறிமுகமான பப்ஜி இப்போது உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள விளையாட்டாகத் திகழ்கிறது.

இந்தியாவில் வெளியான 7 மாதத்தில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு மாறியுள்ளனர். முழுவதும் ரத்தம் தெறிக்கும்படி அமைந்துள்ள பப்ஜியை பள்ளி, கல்லூரி மாணவர்களில் 80 சதவீதம் பேர் விளையாடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதை விளையாடும் பெரும்பாலான நபர்கள் போதைப்பழக்கத்துக்கு நிகராக அடிமையாகிவிடுகின்றனர்.

பப்ஜி ரசிக்கும்படி இருந்தாலும் வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை ஆகிய தவறான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளதால் தடை செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து குஜராத்மாநிலத்தில் பப்ஜி தடை செய்யப்பட்டது. அதேபோல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பப்ஜியை தடை செய்ய வேண்டும் என நிபுணர்கள் கோரியுள்ளனர்.

ஸ்லோ பாய்சன்

இதுகுறித்து உளவியல் நிபுணர் அபிலாஷா கூறும்போது, ‘‘பப்ஜி ஸ்லோ பாய்சன் போன்றது. விளையாடுபவர்களை எளிதில் தன் வசப்படுத்திவிடும். விளையாடத் தொடங்கினால் வெளியே வர குறைந்தது 2 மணி நேரமாகும். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் வசதி இருப்பதால் இரவு, பகல் பாராமல் உறங்காமல் விளையாடுகின்றனர். இதனால் மூளையின் சீரான இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டு உடல்ரீதியாக, மனரீதியாக பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.

மனதில் இருக்கும் கோபம்,வன்மத்தை எளிதில் வெளியே கடத்துகிறது. தொடர்ந்து விளையாடுவதால் சகிப்புத்தன்மை, விட்டுத் தரும் மனப்பான்மையைக் குறைத்துவிடுகிறது. உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல் தனிமையை நாடுகின்றனர்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு

இதைத்தவிர்க்க பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் தருவதை பெற்றோர் நிறுத்த வேண்டும். இதன் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனினும், இந்த விளையாட்டை தடை செய்வதே நிரந்தரத் தீர்வாக அமையும்’’ என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, ‘‘விளையாடுபவர்கள் மனதில் வன்மத்தை விதைக்கும். இதன்மூலம் இளம்வயதில் தவறான மனநிலையை மாணவர்கள் வடிவமைத்துக் கொள்வார்கள். ‘பேட்டில் ராய்லி’ நாவலைத் தழுவி எடுத்த சினிமாவை மாணவர்கள் பார்க்க அனுமதியில்லை. ஆனால், பப்ஜியை வயது வித்தியாசமின்றி விளையாடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவதால் உணர்வுரீதியாக தூண்டப்படுகின்றனர்.

இதன் தாக்கம் 10 ஆண்டுகளுக்கு பின் சமூகத்தில் குற்றங்களாக எதிரொலிக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை, தீமை இரண்டும் சரிசமமாக உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும், அதன் தாக்கங்களைக் கட்டுப்படுத்த முடியுமா என தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

சிறந்த கல்வி அவசியம்

அதற்கேற்ப பாடத்திட்டத்தை யும் வடிமைக்க வேண்டும். சாதக,பாதகங்களை அலசும் அறிவை கல்வியே தந்துவிட்டால் தவறானவழிகளுக்கு மாணவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய இணைய விளையாட்டுகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நம்நாட்டிலும் அவை தடை செய்யப்பட வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாச காந்தி கூறும்போது, ‘‘மாணவர்கள் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் தவறான பாதைக்கு செல்லக்கூடும். பொழுதுப்போக்குக்காக மட்டுமே இன்று 80 சதவீத மாணவர்கள் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

ஆக்கப்பூர்வமானவற்றை விட ஆபாசங்களே இணையத்தில் அதிகம் வலம் வருகின்றன. மாணவர்கள் படித்து முடிக்கும்வரை ஸ்மார்ட்போன் தரக்கூடாது. தொடர்பு கொள்ள சாதாரண செல்போன் தந்தால் போதும். வளர்ந்த நாடுகள்கூட 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கத் திட்டமிடுகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகள் மாணவர்களை பாழ்படுத்தும் பப்ஜி உட்பட தவறான ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்