கோவையின் அடையாளமாய் மாறும் ஆதியோகி!

By ஆர்.கிருஷ்ணகுமார்

ஈசனடிபோற்றி, எந்தையடிபோற்றி, தேசனடிபோற்றி,  சிவன் சேவடி போற்றி, நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி, சீரார் பெருந்துறை நந்தேவன் அடிபோற்றி, ஆராத இன்பம் அருளும் மலை போற்றி" என்று அடிமுடி காணாத சிவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

ஈசனின் பிரம்மாண்டத்தை மக்கள் உணர வேண்டுமென்பதற்காக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சையில் 216 அடி உயர கருவறை விமானத்துடன் பெரிய கோயிலைக் கட்டினார் ராஜராஜசோழன். தற்போது  உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிவன் சிலையாகத் திகழ்கிறது 112 அடி உயர ஆதியோகி சிலை.

தீமையை அழிக்கும் கடவுளான சிவனின் பல்வேறு அம்சங்களை வைத்து,  போலேநாத், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், காலபைரவர், ஆதியோகி என்றெல்லாம் அழைக்கிறோம். அது என்ன ஆதியோகி?

ஏறத்தாழ 15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி, தன்னுடைய 7 சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலைய அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை அவர்  வெளிப்படுத்தினார்.

அதேபோல, தனி மனிதனின் உள்நிலை மாற்றத்துக்கான கருவிகளையும்  வழங்கினார் ஆதியோகி.  தனி மனிதனின் மாற்றமே, உலக மாற்றத்துக்கு காரணமாய் அமையும். மனிதன் நல்வாழ்வும், முக்தியும் பெற `உள்நோக்கி பார்ப்பது ஒன்றே வழி` என்பதுதான் ஆதியோகி கூறிய முக்கிய செய்தி. நம்மை உள்நோக்கிக் கொள்வதற்கான தொழில்நுட்பக் கருவிதான் யோகா. அறிவியல்பூர்வமான யோக முறைகள்  மனித நல்வாழ்வுக்கு உதவும்.

“அனைத்து மதங்களுக்கும் முன்தோன்றிய ஆதியோகியாம் சிவன், எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியவர். நம் உடலில் உள்ள 112 சக்கரங்களின் இயக்கத்தை சீரமைப்பவை யோக முறைகள். இதனாலேயே  112 அடி உயரத்தில் கம்பீரமான ஆதியோகி முகத்தை வடிவமைத்தோம்" என்கிறார் ஈஷா யோகா மையத்தின் நிறுவனரும், சத்குரு என்றழைக்கப்படுபவருமான ஜக்கிவாசுதேவ்.

கோவையிலிருந்து ஏறத்தாழ 25 கிலோமீட்டர் தொலைவில், தென்றல் வீசம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். கோவையின் அடையாளங்களில் ஒன்றான இந்த மையத்தில், தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், சந்திர குண்டம்,திருமூர்த்தி உருவம் ஆகியவை சிறப்பு மிக்கவை.

உள்நாட்டவர் மட்டுமின்றி, வெளிநாட்டவர்க்கும் ஆண்டுமுழுவதுமே யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கோவைக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஈஷா யோகா மையத்துக்கு வரத் தவறுவதில்லை. இதற்கெல்லாம் மேலாக, 2017-ல், உலகிலேயே மிகப் பெரிய திருமுகமாக 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை திருமுகம் அமைக்கப்பட்டு, அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஆதியோகி சிலை இடம் பெற்றிருக்கிறது. "ஆதியோகியின் திருமுகத்துக்கு வடிவம்கொடுக்க எனக்கு இரண்டரை ஆண்டுகளாகின. ஆனால்,  ஈஷா மைய தன்னார்வத் தொண்டர்கள் 8 மாதங்களில் இதை உருவாக்கினர்" என்கிறார் ஜக்கிவாசுதேவ்.

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம்,  தனது ‘இன்கிரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தில்  அதிகாரப்பூர்வ சுற்றுலாத் தலமாக ஆதியோகி சிலையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரம்மாண்ட அடையாளம்  இருக்கும். அந்த வகையில், கோவையின் பிரம்மாண்ட அடையாளமாக மாறி வருகிறது 112 அடி ஆதியோகி சிலை.

தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் ஆதியோகி சிலையை தரிசிக்க வருகின்றனர். விடுமுறை நாட்களில் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டிவிடுவதாக தெரிவிக்கின்றனர் ஈஷா மையத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா இங்கு வெகு விமரிசையாய் விடியவிடிய கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டிலிருந்து ஆதியோகி சிலை முன் கொண்டாடப்படும் இந்த விழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். நாட்டின் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் இசை, நடனம், பாடல், மகா ஆரத்தி நிகழ்ச்சிகளுடன், சத்குருவின் தியான நிகழ்வும் உண்டு. மேலும், நவராத்திரி, தைப்பூசம், பொங்கல் உள்ளிட்ட விழாக்களும் கோலாகலமாய் கொண்டாடப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், அமாவாசை, பௌர்ணமி தினத்தன்று ஆதியோகிக்கு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். வழக்கமாக சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார்கள். இந்தப் பட்டியலில் அண்மைக்காலமாக ஈஷா மையமும் இணைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்