‘மக்களே மது அருந்தாதீர்கள்..’- காந்தி பிறந்த நாளில் டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதம்

By வி.தேவதாசன்

`மக்களே மது அருந்தாதீர்கள்…!’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வரும் அக்டோபர் 2-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் மக்களிடையே அதிகரித்து வரும் மதுப் பழக்கம் காரணமாக, தனி மனித ஒழுக்கத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. குடிகார கணவனின் கொடுமை தாங்க முடியாமல், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

தமிழ்நாட்டில் நடைபெறும் பல சாலை விபத்துகளுக்கும், அதனால் ஏற்படும் மரணங்களுக்கும் மது போதை என்பது முக்கிய காரணமாக உள்ளது. கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

இந்த சூழலில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு உண்ணாவிரதப் போராட்டம் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் தமிழ் நாட்டில் தினமும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு தங்கள் கைகளால் மது பாட்டில்களை எடுத்துக் கொடுக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் இந்தப் போராட்டத்தின் சிறப்புக்கு காரணம்.

‘‘படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத காரணத்தாலேயே சுமார் 35 ஆயிரம் இளைஞர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் அவர்களிலேயே சுமார் 60 சதவீதம் பேர் இப்போது மதுவுக்கு அடிமையாகி விட்டனர் என்பதைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆகவே, மது ஒழிக்கப்பட வேண்டும். அது படிப்படியாகத்தான் முடியும். ஆகவே, தமிழ்நாட்டில் படிப்படி யாக மது விலக்கை அமல்படுத்து வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்’’ என்கிறார் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.தனசேகரன்.

அவர் மேலும் கூறும்போது, “கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முழு மதுவிலக்கு என்பதை இலக்காகக் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டிலும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான தொடக்கமாக தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 4 ஆயிரத்து 35 மதுக் கூடங்களை உடனடியாக மூட வேண்டும். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என உள்ள விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும். எல்லா ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் முதல் நாள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதேபோல் மதுப்பழக்கம் மிகவும் கொடுமையானது. ஆகவே, மது அருந்த வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனினும் எங்கள் போராட்டத்துக்கு காவல் துறை இதுவரை அனுமதி தராததால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினோம். எங்களின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி தரும்படி காவல் துறையினருக்கு நீதிபதி வி.ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

“முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றும் பல ஆயிரம் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடுமே ?” என்று கேட்டதற்கு, “தமிழ்நாடு அரசின் பல துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும்” என்றார் அவர்.

மதுவுக்கு எதிராக மதுபானம் விற்பனை செய்யும் பணியாளர்களே காந்தி பிறந்த நாளில் நடத்தும் உண்ணாவிரதம் என்பது நிச்சயம் காந்தியடிகளுக்கு செலுத்தும் சிறப்பான அஞ்சலியாக இருக்கும் என்பது நிச்சயம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

54 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்