மேகேதாட்டு அணை தொடர்பான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

'கஜா' புயல் பா2திக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயக் கடன், கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும், மேகேதாட்டு அணை தொடர்பான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 2 தீர்மானங்கள் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடங்குதற்கு முன்பு, 'கஜா' புயலால் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1

'கஜா' புயல் பாதிப்புக்கு உடனடியாக உரிய நிவாரணம் - விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து செய்க!

'கஜா' புயல் காரணமாக,  காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களும் இதுவரை காணாத மிகக்கடுமையான பாதிப்புக்குள்ளாகி, 65 பேருக்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் தங்களின் வேளாண்மையைப் பறிகொடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளை எல்லாம் இழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பரிதவித்து நிற்கிறார்கள்.

மேலும், பாசனநீர் பிரச்சினை காரணமாக நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்திற்கு மாறிய பல விவசாயிகள்,  தாங்கள் வளர்த்த அனைத்து தென்னை மரங்களும் புயலால் முறிந்து விழுந்ததன் காரணமாக, தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையோடு இருக்கிறார்கள். அதுபோலவே, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை வளர்த்த விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

வீடுகளை இழந்துள்ள மக்கள் இன்னும் சகஜ நிலைக்குத்  திரும்ப முடியாமல் சங்கடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவில் வீசிய பலத்த புயல் பாதிப்புகளினால்  இழந்த வாழ்க்கையை மீட்டு எடுக்க, நிவாரணங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் தேவையான 'கஜா' புயல்  பேரிடர் நிதி இன்றுவரை மத்திய பாஜக அரசு வழங்காமல் தாமதிக்கிறது.

பேரிடர் நிதியை உரிய காலத்தில் கேட்டுப் பெற முடியாத அதிமுக அரசு, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபடுகிறதே தவிர, 'கஜா' புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை முற்றிலும் கிடப்பில்போட்டு மக்களை தினந்தோறும் போராட்டக் களத்தில் தள்ளியிருக்கிறது.

தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்  புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை முடக்கி வைத்துள்ள அதிமுக அரசுக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

இனியும் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக 'கஜா' பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும், புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்குத்  திரும்பவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்களை தள்ளுபடி செய்யவும் - அவர்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் வழங்கவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 2

மேகேதாட்டு அணை தொடர்பாகத் தந்த அனுமதியை உடனே ரத்து செய்க!

உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பை மீறி, காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, மத்திய பாஜக அரசு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருப்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசு இதுபோன்று அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நேரத்திலேயே மத்திய அரசு அக்கடிதத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியிருக்க வேண்டுமே தவிர, மத்திய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பியிருக்கக் கூடாது. அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி கொடுத்துவிட்டு இன்றைக்கு தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

மத்திய அரசு தற்போது அளித்துள்ள அனுமதி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது என்பது தெரிந்திருந்தும், ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்குத்தானே அனுமதி கொடுத்தோம் என்று மத்திய பாஜக அரசு மிகச் சாதாரணமாகக் கூறி வருவது கவலையளிக்கிறது.

காவிரி ஸ்கீம் அரசிதழில் வெளியிடப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவரையே பொறுப்புத் தலைவராக நியமித்து, கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் மத்திய பாஜக அரசு நடந்துகொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் அடைய விரும்பும் தேர்தல் லாபத்திற்காக மேகேதாட்டு அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பாஜக அரசின் செயல் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் போக்கு என்பதைவிட, தமிழக உரிமைகளைப் பறிக்கும் அடாவடிச் செயல் என்று இந்தக் கூட்டம் கருதுகிறது. ஆகவே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

எக்காரணம் கொண்டும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணிந்து மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதித்து விடக்கூடாது என்றும், காவிரியில் தமிழக உரிமையை பாதுகாத்திடும் நோக்கில் இப்போது கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய பாஜக அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இந்த 2 தீர்மானங்களும் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்