ஜெயலலிதாவின் மரணத்துக்கு திமுகதான் காரணம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? - தம்பிதுரைக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா என  திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தான் அவரது மறைவுக்குக் காரணம் என குற்றம் சாட்டினார்.

அதற்கு திமுக அமைப்புச் செயலாளரும் எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி பதிலடி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் நல்லடக்கம் செய்திட இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக முதல்வரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வேண்டுகோள் வைத்தபோதும் கொஞ்சமும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி, 'இடம்தர முடியாது' என்று மறுத்தார்.

என்றாலும், மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின்பேரில், நீதிமன்றம் சென்று, தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டதிலிருந்து தொடர்ந்து, இதுவரையில் இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் நடைபெறாத வகையில் தலைவருக்கு புகழாஞ்சலிக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் மு.க.ஸ்டாலின்.

இதன் மூலமாக திமுகவும் - தலைவர் கருணாநிதியும் தமிழகத்திற்கும் - தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை தமிழக மக்கள் திரும்பி பார்க்கச் செய்தது தலைவர் மு.க.ஸ்டாலினின் பெருமுயற்சி.

அதனைத் தொடர்ந்து, நூறே நாட்களில் தலைவர் கருணாநிதியுடைய திருவுருவச் சிலையினை தத்ரூபமாக, தலைவர் கருணாநிதி நேரில் நிற்பதைப்போன்ற வடிவத்துடன் அமைந்திட அவ்வப்போது சிலை உருவாவதை நேரில் பார்வையிட்டு, அனைவரும் பாராட்டிடும் வண்ணம் ஒரு அற்புதமான சிலையினை வடித்திட பெருமுயற்சி மேற்கொண்டவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகள் காரணமாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தமிழக மக்கள் மனதில் மாபெரும் எழுச்சியையும் - வரவேற்பையும் பெற்று, அதன் காரணமாக திமுக அடைந்து வரும் மாபெரும் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக முன்னணியினர் ஒவ்வொருவரும் - ஒவ்வொரு விதமான உளறல்களை நித்தம் நித்தம் அறிக்கையாகவும், பேட்டியாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, 'அம்மா' என்றும்; 'தாயே' என்றும் நடித்து, அவரை ஏமாற்றிப் பிழைத்து வந்தவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக சார்பில் அவருக்கு ஒரு சிலை அமைத்தனர். ஆனால், அச்சிலை ஜெயலலிதா உருவமாக இல்லாமல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் மாதிரி இருந்ததாக, ஊடகங்கள் - பத்திரிகைகள் - சமூக வலைதளங்கள் கேலி செய்தன.

மேலும், ஒவ்வொரு நாளும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஒவ்வொரு விசித்திரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

75 நாட்களில் அப்போலோ மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டதாக செய்தி உலா வருகிறது.

நிலைமை இப்படியிருக்க, தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர், தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மாநாடுகளில் கூடுவதைப்போல மக்கள் கூட்டம் கூடுகிறது. அண்மையில், திருச்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிலும் - செஞ்சியில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவிலும் மாநாடுகளைப்போல மக்கள் திரண்ட கூட்டத்தை கண்டும் - நாளை (வியாழக்கிழமை) கரூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் வருகைபுரிவதை கண்டு, மிரண்டு, கரூர் தொகுதி அதிமுக எம்.பி. தம்பிதுரை பித்தனைப் போல பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது. தம்பிதுரைக்கு தெம்பும் - திராணியும் இருக்குமேயானால், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், 'ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகதான் காரணம்' என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா?

அவ்வாறு அவர் தாக்கல் செய்தால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் - ஊடகத்தினருக்கு தம்பிதுரை அளித்த பேட்டி குறித்து திமுகவின் சார்பில் குறுக்கு விசாரணை செய்து, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்" என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்