நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது வழக்கு; ஊடகங்களை அச்சுறுத்தவும் வாயை கட்டிப்போடவும் முயற்சி: ஊடக ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

தமிழக ஆளுநரை விமர்சித்து கட்டுரை எழுதியதாக நக்கீரன் கோபாலை கைது செய்ததற்கு பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், மூத்த ஊடக பிரதிநிதிகள் ஆகியோர் கடுமையாக கண்டனம் தெரிவித்ததுடன், நக்கீரன் கோபால் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ பப்ளிஷிங் குழுமத்தின் தலைவர் என்.ராம், விகடன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநரும் ஆனந்த விகடன் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமான பி.ஸ்ரீனிவாசன், தினமலர் ஆசிரியர் கே.ராமசுப்பு, மதுரை, கோவை தினமலர் பதிப்பாளர் எல்.ராமசுப்பு, கோவை தினமலர் பதிப்பாளர் எல்.ஆதிமூலம், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் எஸ்.கார்த்திகைச்செல்வன், தினகரன் பதிப்பாளர் ஆர்.எம்.ரமேஷ், ‘தி இந்து’ ஆசிரியர் முகுந்த் பத்மநாபன், நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் எம்.குணசேகரன், டெக்கான் க்ரானிக்கல் ஆசிரியர் பகவான்சிங், டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை ஆசிரியர் அருண்ராம் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 20-22-ல் வெளிவந்த நக்கீரன் வார இதழில் தமிழக ஆளுநரை விமர்சித்து கட்டுரை எழுதியதாக குற்றம்சாட்டி நக்கீரன் இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ஐ கொடூரமாகப் பயன்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதுபோல ஒரு கட்டுரை வெளியிட்ட தற்காக ஒரு ஆசிரியர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ஐ பயன் படுத்தியிருப்பது இதுவரை நடக்காத, கேள்விப்படாத ஒன்றாகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களது பணியை தடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதுதான் இப்பிரிவு பயன்படுத்தப்படும். இப்பிரிவைப் பயன்படுத்தி நக்கீரன் கோபால் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யும்படி ஆளுநர் கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இப்பிரிவை ஊடகத்தின் மீது பயன்படுத்தும் தமிழக அரசின் நோக்கம் மிகவும் கவலைக்குரியதாகும்.

ஊடகத்தை அச்சுறுத்தவும் அவற்றின் வாயைக் கட்டிப் போடவும் எடுக்கப்பட்ட தெளிவான முயற்சிதான் இது. இதை அனுமதித்தால் ஊடகங்களின் பேச்சு சுதந்திரத்துக்கு மரண அடியாக அமையும். நக்கீரன் கோபாலை கைது செய்தவிதம் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகவே உள்ளது.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்ட 13-வது சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் எஸ்.கோபிநாதன், நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப மறுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தைக் காப்பதில் நீதித்துறை காட்டும் அக்கறையையும் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதையும் இந்த செயல் காட்டுகிறது.

எனவே, இப்புகாரின்படி நக்கீரன் கோபால் மீதும் மற்றவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி கோரிக்கை

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில், ‘தி இந்து’ பப்ளிஷிங் குழுமத்தின் தலைவர் என்.ராம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு எந்த வகையிலும் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 1-ம் தேதி ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி உருவாக்கப்பட்டது. ஜூலை 10-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமியைச் சந்தித்த இக்கூட்டணியின் பிரதிநிதிகள், முற்போக்கு மாநிலமான தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் பின்னடைவைச் சந்திக்கக் கூடாது என்பதை வலியுறுத் தினார்கள். அதற்குப் பிறகு கோபால் கைது என்ற சம்பவம் நடந்திருப்பது எங்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கி இருக்கிறது. எனவே, மூத்த பத்திரிகையாளர் கோபால் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தமிழக ஆளுநர் மாளிகை எந்த நிபந்தனையுமில்லாமல் திரும்பப் பெற வேண்டும். நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்பதால் தமிழக காவல் துறையும் நக்கீரன் கோபால் மீதான மேல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்