சென்னையில் 30-ம் தேதி நடக்கவுள்ள கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் வரும் 30-ம் தேதி கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டம் நடக்கிறது. அதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'கலைஞரின் புகழுக்கு வணக்கம்' என்ற பெயரில் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த 17-ம் தேதி திருச்சியில் 'கருத்துரிமை காத்தவர் கலைஞர்' என்ற தலைப்பில் ஊடகத் துறையினரும், 19-ம் தேதி மதுரையில் ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்' என்ற தலைப்பில் இலக்கியத் துறையினரும் பங்கேற்ற கூட்டம் நடந்தது. நாளை (ஆக. 25) கோவையில் 'மறக்க முடியுமா கலைஞரை' என்ற தலைப்பில் கலைத் துறையினர்,  26-ம் தேதி நெல்லையில் 'அரசியல் ஆளுமை கலைஞர்' என்ற தலைப்பில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவுள்ளது.

நிறைவாக வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். கடந்த 8-ம் தேதி ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், வரும் 30-ம் தேதி நடக்கவுள்ள அஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்