ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுபாவை படிக்கவைக்க வினோதினி அறக்கட்டளை முடிவு

By டி.எல்.சஞ்சீவி குமார்

சீர்காழியில் ஆசிட் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக ‘வினோதினி அறக்கட்டளை’ அறிவித்துள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சுபா என்பவருக்கும் அவரது உறவினரான தங்கபாண்டியன் என்பவருக்கும் காதல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், சனிக்கிழமை இரவு சுபாவின் முகத்தில் ஆசிட் ஊற்றினார். படுகாயம் அடைந்த சுபா, சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “சுபாவுக்கு 15 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து இல்லை. அவர் மீது ஊற்றப்பட்டது வீரியம் குறைந்த ஆசிட் அல்லது தின்னராக இருக்கலாம்” என்றனர்.

இதற்கிடையே, ஆசிட் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட வினோதினி அறக்கட்டளை நிர்வாகிகள், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று சுபா மற்றும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். ‘வினோதினி அறக்கட்டளை’ நிர்வாகியான ரமேஷ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சுபாவுக்கு நெற்றி, கீழ் உதடு, மார்பு, கால் ஆகிய பகுதிகள் வெந்துள்ளன. வீரியம் குறைவான ரசாயன திரவம் என்று கூறப்பட்டாலும் அவரால் வலியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இந்த விஷயத்தை வெளியே சொல்லத் தயங்கிய சுபாவின் பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கவில்லை. ஒருநாள் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள்தான் சேர்த்துள்ளனர்.

பிளஸ் 2 வரை படித்துள்ள சுபா, வசதியின்மை காரணமாக வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக கூறினார். அவருக்கு காதல் அல்லது திருமணம் எதிலும் ஆர்வம் இல்லை என்றும் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சுபாவுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உதவத் தயாராக இருக்கிறோம். சிகிச்சைக்குப் பிறகு அவரது படிப்புக்கான பொறுப்பை முழுமையாக வினோதினி அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். மேலும், சுபாவை இந்த நிலைக்கு ஆளாக்கியவருக்கு தண்டனை வாங்கித்தரவும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு ரமேஷ் கூறினார்.

நடந்தது என்ன?

சீர்காழி தாடாளன் கோயில் காமராஜ் நகரைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சுபா (20). இவரை சீர்காழி அருகேயுள்ள பனமங்களம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் (27) என்பவர் காதலித்து வந்தாராம். இவரை பெண் கேட்டுச் சென்றபோது, வீரமணி குடும்பத்தினர் அவருக்குப் பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், சனிக்கிழமை இரவு சுபாவின் முகத்தில் கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதில் சுபாவின் இடது கண், உதடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.

அறக்கட்டளை தொடங்கியது எப்படி?

காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, ஒருதலைக்காதல் விவகாரத்தால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானார். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்கு ஆயிரக்கணக்கானோர் நிதி உதவி அளித்தனர். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த நிதியைக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் ‘வினோதினி அறக்கட்டளை’.

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வினோதினியின் நினைவு நாளன்று அறக்கட்டளை சார்பில் காரைக்காலில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கான உதவிகளை வினோதினி அறக்கட்டளை செய்துவருகிறது. காரைக்கால் சுற்றுவட்டார கிராமப் பெண்களுக்கு சணல் பை தயாரிப்பது குறித்த 15 நாட்கள் பயிற்சியும் அளித்துவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்