சேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை: இஸ்ரோ சாட்டிலைட் உதவியுடன் 2 ஆண்டுகளுக்குப் பின் துப்பு துலங்கியது

By செய்திப்பிரிவு

சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம,் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், இஸ்ரோசாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்டது.

சேலத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4-15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் பணப்பெட்டி கொண்டு வரப்பட்டது. பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரயில் பெட்டியின் மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

சிபிசிஐடியின் தடயவியல் போலீஸார் பெட்டியை அங்குலம் அங்குலமாக சோதித்தனர். பெட்டியின் மேற்கூரை சதுரமாக கத்தரிக்கப்பட்டு ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டப்பட்டு அதன் வழியாக ஆட்கள் நுழைந்து பணப்பெட்டிகளில் சிலவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.

மொத்தம் ஆயிரம் ரூபாய், ஐந்நூறு ரூபாய் அடங்கிய பழைய நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிபிசிஐடி போலீஸார் சேலத்திலிருந்து சென்னை வரும் 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர். சேலத்தில் பணம் ஏற்றப்படுவதற்கு முன்னரே ரயில் பெட்டியின் மேற்கூரையை துண்டித்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பணம் ஏற்றிய போது சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர் முருகேசன், பார்சல் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள், போர்ட்டர்கள் என 34 ஊழியர்களிடம் சிபிசிஐடி தனிப்படையினர் விசாரணை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.

ரயில் பெட்டியில் பாதுகாப்பாக வந்த டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸாரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். ரயில் வரும் வழியெங்கும் உள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்ந்தனர். ஆனாலும் துப்பு துலக்க முடியவில்லை. மின்சார ரயிலாக இருந்தாலும் சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்பட்டது ஆய்வில் தெரிய வநதது.

மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையை பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது. ஆகவே டீசல் எஞ்சின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என போலீஸார் சந்தேகித்தனர்.

பணம் கொள்ளையடிக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழக்க நடவடிக்கையால் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கொள்ளையடித்தவர்கள் அவற்றை புதிய நோட்டுகளாக மாற்றியிருக்க வேண்டும் என கருதப்பட்டது.

இந்நிலையில் கொள்ளையர்கள் பற்றிய ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் ஓராண்டு ஓடியது. சிபிசிஐடியில் அதிகாரிகள் மாறினர். அம்ரேஷ் புஜாரி புதிய ஏடிஜிபியாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவரது உத்தரவில் இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்தது. சிபிசிஐடி போலீஸார் புது யுக்தி தோன்றியது.

அதன்படி இஸ்ரோ உதவியை நாடினர் . இஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து உதவி கோரினர். குறிப்பிட்ட நாள் நேரம் குறித்து தகவல் கொடுத்து அதற்கான படங்களை கேட்டனர். இதன் மூலம் ரயில் குறிப்பாக எந்த இடத்தில் பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டது, எந்த இடத்தில் பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது, எதில் கொண்டுபோகப்பட்டது என்பன உள்ளிட்ட துல்லியமான படங்களை பெற முடியும்.

இஸ்ரோ உதவியுடன் செயற்கை கோள் படம் கிடைத்தவுடன் போலீஸாருக்கு குறிப்பிட்ட இடத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற துப்பு கிடைத்தது. அதன் பின்னர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களை சேகரித்தனர். இதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட எண்கள் கிடைத்தன. அவைகளை ஆராய்ந்தபோது அவை மத்திய பிரதேசம், பிஹார் மாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்தது.

அவர்களில் பலரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் விஞ்ஞான பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வில் துப்பு துலங்கியுள்ளது. இனி நடக்கும் விசாரணையில் கொள்ளையர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்