12 ரயில் நிலையங்களில் இருக்கும் தடுப்பு சுவர்கள் பயணிகளுக்கு பாதுகாப்பானதா?- ஆய்வறிக்கை தயாரிக்கிறது தெற்கு ரயில்வே

By கி.ஜெயப்பிரகாஷ்

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அடிப் படைத்  தேவையாகவும், உரிமையாகவும்  இருக்கிறது. இந்த வரிசையில் அடுத்த அடிப்படை வசதியாக போக்குவரத்து வசதி உருவெடுத்துள்ளது.

சென்னை போன்ற இடங்களில் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து முக்கியமான ஒன்றாகிவிட்டது.

சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விரைவு ரயில்களும், புறநகர் பகுதிகளுக்கு 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

மின்சார ரயில்கள் காலதாமத மாக வருவது, குறைவான ரயில்கள் இயக்கம், கூட்ட நெரிசலில் திணறிபயணம் செய்வது எல்லாம் வாடிக் கையாகிவிட்டது. இதையெல்லாம் சகித்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு, ஒரு கட்டத்துக்கு மேல் பயணமே மரணமாகி விடுவது வேதனை அளிக்கிறது.

தொலைநோக்கு திட்டம் அவசியம்

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி நடந்த கோர விபத்தில் இளைஞர்கள் 4 பேர் இறந்த சம்பவம், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, படி பயணமே முழுக்கக் காரணம் என எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

மணிக்கணக்கில் ரயிலுக்காக ரயில் நிலையங்களுக்கு போதிய அளவில் ரயில் சேவை வழங்கு வதும், பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு ரயில்வே துறைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. கூட்ட நெரிசலை கையாள அடுத்தடுத்து தொலைநோக்கு திட்டங்களையும் வகுக்க வேண்டி யது அவசியமாகும்.

இதற்கிடையே, சென்னையில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் ஆங்காங்கே உள்ள மின்சார ரயில் நிலையங்களில் இருக்கும் பயணிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முக்கிய வளைவுப்  பகுதிகளில் நீண்ட தூரத்துக்கு தடுப்புச் சுவர் அமைக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு கமிட்டி உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை ரயில் கோட்டத்தில் பரங்கிமலை, பூங்கா, வேப்பம்பட்டு, திருநின்றவூர், பட்டாபிராம், செவ்வாபேட்டை, புட்லூர், ஏகாட்டூர், செஞ்சிபனம் பாக்கம், மணவூர், மோசூர், புளியமங்கலம் ஆகிய 12 ரயில் நிலையங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தவிர்க்க முடியாத சூழல்

இதில், பெரும்பாலும் விரைவு ரயில்கள் அல்லது மின்சார விரைவு ரயில்கள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்படும். ஆனால், தவிர்க்க முடியாத சில நேரங்களில் மட்டுமே மெதுவாக செல்லக்கூடிய மின்சார ரயில்கள் இந்த விரைவுப் பாதையில் இயக்கப்படும். அப்படி, தவிர்க்க முடியாத சூழலில் பரங்கிமலையில் இயக்கியபோது, கூட்ட நெரிசலில் படியில் பயணம் செய்து தடுப்பு சுவரில் மோதி 4 பேர் இறந்துள்ளனர்.

இதனால், ரயில் நிலையங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் இப்போது பயணிகளுக்கு பாதுகாப்பானதா? அல் லது மாற்றங்கள் வேண்டுமா? என ஆய்வு அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரிக்கிறது.

தடுப்பு சுவரில் மாற்றம்...?

இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘விரைவு ரயில்கள் அந்த வழியாகச் செல்லும்போது நடைமேடைகளில் இருக்கும் பயணிகள் விரைவு ரயில்களில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வுப்படி, பயணிகள் படிகளில் தொங்கினாலும் விபத்து ஏற்படாத அளவுக்கு போதிய அளவில் இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போதைய நிலை வேறு. படிகளில் தொங்கும் பயணிகள் அந்த அளவைத்  தாண்டி இருக்கும் வகையில் தோள்களில் பைகளை மாட்டிக் கொண்டு செல்கின்றனர். இதுதான் விபத் துக்கு முக்கிய காரணமாகி விடுகிறது.

பாதுகாப்பான பயணம்

எனவே, பயணிகள் படியில் பயணம் செய்வதை தவிர்ப்பதோடு, பைகளை மாட்டிக் கொண்டு படியில் செல்வதையாவது கட்டாயம் தவிர்க்க வேண்டும். உயிரைத்  தவிர, வேறு எதுவும் பெரிதல்ல. எனவே, எந்த அவசர நேரத்திலும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் பெட்டிகள் இணைப்பு, ரயில்களின் சேவை அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், பரங்கிமலை சம்பவத்துக்குப் பிறகு, பிற ரயில் நிலையங்களிலும் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களிலும் ஆய்வு செய்யவுள்ளோம். ஆய்வு முடிவுக்குப் பிறகு இந்தச் சுவர்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு தேவைதானா?, சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்பது குறித்து இறுதியாக முடிவெடுக்க வுள்ளோம். மேலும் தானியங்கி கதவுகள் கொண்ட மின்சார ரயில்களை முன்னோட்டமாக கொண்டு வந்து இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

ரயில் சேவை அதிகரிக்க வேண்டும்

இதுதொடர்பாக திருநின்றவூர் ரயில் பயணிகள் பொது நலச்சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் கூறும்போது, ‘‘தேவையற்ற இடங்களில் இருக்கும் சுவர்களை நீக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட நெரிசலைத்  தவிர்க்கும் வகையில் 5 அல்லது 3 நிமிடங்கள் இடைவெளியில் மின்சார ரயில்களை தொடர்ந்து இருக்க வேண்டும். மேலும், சென் னையில் மாற்று போக்குவரத்தாக வந்துள்ள மெட்ரோ ரயில்களில் அதிக அளவில் பயணம் செய்ய கட்டணத்தை கணிசமாகக் குறைக்க வேண்டும்.

இலவசங்கள் வழங்கி வரும் தமிழக அரசு இதுபோன்ற ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தால்,  அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலை யங்களில் நடை மேம்பாலங்களை அமைக்க வேண்டும். இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமுறையை மீறு பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

37 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

35 mins ago

சினிமா

53 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

47 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்