நீட் தேர்வில் தோல்வி; மாணவி பிரதீபா தற்கொலை: சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  ‘‘விழுப்புரம் மாவட்டம், பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த, மிகவும் சாதாரணமான கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா என்பவர், மருத்துவராக வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு பொய்த்து போன நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, மேல்சேவூர் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா என்பவர் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால், தற்கொலை செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் கடந்தாண்டு அனிதாவை அநியாயமாக இழந்தோம்.

இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வெழுதிய பிரதீபாவை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோமோ புரியவில்லை.

தமிழ்மொழியில் கேட்கப்பட்டிருந்த நீட் வினாத்தாள் மோசமான பிழைகளுடன் இருந்ததை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டி, அதை ஈடுகட்டும் வகையில் உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும், சிபிஎஸ்இ அலட்சியத்தால் மாணவர்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது, என்று ஆதாரங்களோடு எடுத்து வைத்தும் கூட, மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

தமிழ்மொழி என்றால் மத்திய அரசு தொடர்ந்து காட்டி வரக்கூடிய மாற்றாந்தாய் மனப்பான்மையை நிரூபிப்பதாக இந்த நிகழ்வுகள் எல்லாம் அமைந்திருக்கின்றன. தமிழ் வினாத்தாளில் இருந்த தவறுகளால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு தனியாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் பிரதீபா என்ற மாணவி கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனால், யாரோ செய்த தவறுகளால் தனது கனவு மெய்யாக என்பதால், அந்த மாணவி பிரதீபா தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் ஏற்பட்ட தீவிரமான மன அழுத்தத்தில் அந்த மாணவி இருந்திருக்கிறார். கொடுமையான அந்தத் துயரத்தில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் மீளவில்லை.

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களில் இருக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் வட மாநிலங்களில் இருக்கக்கூடிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில், முதல் 50 ரேங்குகளில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி ஒருவர் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்.

தென் மாநிலங்களில் 8 பேர் மட்டுமே முதல் 50 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள். மீதமுள்ள 42 பேரும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆகவே, நீட் தேர்வின் மூலமாக, தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் மாநில மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வட மாநில மாணவர்கள் பரவலாக, அதிகமான அளவுக்கு இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மாணவர்களின் டாக்டர் கனவுகள் கடந்த இரு ஆண்டுகளாக சிதைந்து போய்க்கொண்டு இருக்கின்றன. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தேர்வெழுதிய 1,14,609 பேரில் 45,336 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தேர்வெழுதிய 69,126 பேர் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று, இதே அவையில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து, கடந்த 01.02.2017 அன்று ஒருமனதாக இரு மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தோம். அந்த மசோதாக்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

அந்த மசோதாக்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்னும் எத்தனை அனிதாக்களை, எத்தனை பிரதீபாக்களை நாம் இழக்கப்போகிறோம்? ஆகவே, நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று நிறைவேற்றிய அந்த மசோதாக்களுக்கு, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற, இந்த அரசு இதுவரை எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன? என்பதை நம்முடைய முதல்வர் அல்லது அந்தத் துறையின் அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற, மத்திய அரசுக்கு தீவிரமான அழுத்தத்தை இந்த அரசு உடனடியாக தந்தாக வேண்டும். எனவே, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்