புகழ் பாடும் இடமாக பேரவையை மாற்றிவிட்டனர்: மதுரை பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவை புகழ் பாடும் இடமாக சட்டப்பேரவையை அதிமுகவினர் மாற்றிவிட்டனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “ஜெயலலிதாவைப் புகழ்ந்து, பாராட்டி, ஆராதனை செய்யும் இடமாக சட்டப்பேரவையை அதிமுக மாற்றியுள்ளது. குறிப்பாக பேரவைத் தலைவராக இருக்கும் தனபால் அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 15 நாட்கள் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றோம். அதில் 6 நாட்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். கூட்டத் தொடரின் முதல்நாள் சென்னை மவுலிவாக்கம் விபத்து பற்றி பேச அனுமதிக்காததால், எங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்தோம். நாங்கள் போன பிறகு, அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஓடுகாலிகள் என்று பேசியுள்ளார். மறுநாள் கூட்டத்தில், அமைச்சரின் பேச்சு சரிதானா என்று கேட்டபோது, அது ஒன்றும் தவறான வார்த்தை இல்லை என்று பேரவைத் தலைவர் சொல்கிறார்.

இதேபோல வறட்சி, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு கேட்டபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. இப் போது எங்களை மக்கள் பிரச் சினைகளைப் பற்றிக்கூட பேச அனுமதிப்பதில்லை.

என் மீது வழக்கு

சட்டப்பேரவையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்த துடன், எதற்காக வெளி நடப்பு செய்தோம் என்று மக்களுக்கு தெரிவிப்பதற்காக செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தேன். உடனே முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நான் பேசியதாக என் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டப்பேரவை விதியின்படி, சட்டப்பேரவை அரங்கம், அதன் தாழ்வாரம் எல்லாம் பேரவைத் தலைவரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள். அங்கு வந்து யாரையும் போலீஸார் கைது செய்யவும் முடியாது, அங்கு நடந்த ஒரு பிரச்சினையை நீதிமன்றமும் வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியே எடுத்துக்கொண்டாலும், நாங்கள் ஜெயலலிதாவைப் போல பயந்து வாய்தா மேல் வாய்தா வாங்க மாட்டோம்.

அறிவிப்பு ஆட்சிதான்

இதுவரை நடந்த 25 மானிய கோரிக்கைகளின்போது, அத்தனை அமைச்சர்களும் சேர்ந்து மொத்தம் 264 அறிவிப்புகளை வெளியிட்டனர். அந்த அறிவிப்புகளில் இடம்பெற்றிருந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.664 கோடிதான். ஆனால், முதல்வரோ 110 விதியின் கீழ் வெறும் 18 அறிக்கைகளில் 92 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.20,831 கோடி.

இவ்வாறு கடந்த 2011 முதல் இதுவரையில் 200 அறிவிப்புகள் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. இதில் 50 சதவீதம் அல்ல; 25 சதவீதம் அல்ல; 1 சதவீத திட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை.

சட்டம் - ஒழுங்கு நிலைமை

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூலை 31-ம் தேதி வரையில் தமிழகத்தில் நடந்துள்ள கொலைகள் மட்டும் 3,525. கொள்ளைச் சம்பவங்கள் 1,352. சங்கிலி பறிப்பு கள் 11,120, வழிப்பறி சம்பவங்கள் 1,023.

வருகிற 6-ம் தேதி சட்டப்பேரவையில் போலீஸ் மானியக் கோரிக்கை நடைபெறுகிறது. அப்போது எனது கேள்விக்கு முதல்வர் பதில் அளிப்பார் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். அவ்வாறு அவர் பதில் சொன்னால், அன்றைய தினமே திருவல்லிக்கேணியில் நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் அவருக்கு நன்றி தெரிவிப்பேன். அப்படி பதில் சொல்லவில்லை என்றால் இதே கேள்வியை மீண்டும் எழுப்புவேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

59 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்