தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் பலி

By செய்திப்பிரிவு

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். இதனால், அப்பகுதியே வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.

போலீஸ் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு காரணமாக பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதை மிஸ் பண்ணாதீங்க:

கலவர பூமியானது தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்; தடியடி - கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

தூத்துக்குடியில் போராடும் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு: மார்க்சிஸ்ட் கண்டனம்

விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை: அவிநாசியில் சோகம்

ஜடேஜா மனைவியின் கன்னத்தில் அறைந்த போலீஸ்

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்