வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து பாமக வன்முறை: 102 அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல்- 2 ஓட்டுநர்களுக்கு காயம், கடைகள் அடைப்பு, போக்குவரத்து பாதிப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு முதல் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் பல பகுதிகளில் 102 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய பகுதிகளின் வழியே வந்த அரசுப் பேருந்துகள் மீது பாமகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மாவட்டம் முழுவதும் 12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. ஜெ.குரு மறைவையடுத்து அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. அரியலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பேருந்துகள் இயக்கப்படாததால் அரியலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், சிகிச்சை முடிந்து வெளியூர் செல்ல வேண்டியவர்கள் அவதிக்குள்ளாகினர். பணிக்குச் செல்ல முடியாமல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர், கும்பகோணம், நாகை

தஞ்சாவூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. கும்பகோணம், சுவாமிமலை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை, ஜெயங்கொண்டம், அரியலூர், நெய்வேலி பகுதிகளுக்கு பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கும்பகோணம் அருகே திருநறையூரில், புளியம்பேட்டையில், சோழபுரத்தில் என 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் உடைந்தன. மதுராந்தகத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் 2 அரசுப் பேருந்துகள், சீர்காழி அருகே எருக்கூரில் மற்றும் மயிலாடுதுறையில் தலா 1 பேருந்து என மாவட்டத்தில் 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. எருக்கூரில் தாக்குதல் சம்பவத்தின்போது பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார்.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட 13 இடங்களில் 20 அரசுப் பேருந்துகள் உட்பட மொத்தம் 22 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கீதமங்கம், செஞ்சி, கிளியனூர், மணக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2 தனியார் பேருந்துகள் உட்பட 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் நேற்று தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 3 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. இதில் ஒரு பேருந்தின் ஓட்டுநர் மோகன்ராஜ் காயமடைந்தார்.

வேலூர் மாவட்டத்தில் 10 பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன.

சேலத்தை அடுத்த பனங்காடு, சிவதாபுரம் பகுதிகளில் 2 அரசுப் பேருந்துகள், மேட்டூர் சுற்று வட்டாரங்களான மேச்சேரியில் 3, கருமலைக்கூடலில் 2, மேட்டூரில் 1, ஆத்தூர் வட்டாரங்களில் பெத்தநாயக்கன் பாளையத்தில் 3, ஆத்தூரில் 2 என மாவட்டத்தில் 13 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் பயணி ஒருவரும், ஒரு ஓட்டுநரும் காயமடைந்தனர்.

தலைவர்கள் இரங்கல்

இதற்கிடையே குரு மரணத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட செய்தியில், “ குரு மறைந்ததைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களில் அவர் முக்கியமானவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாமக மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இன்று இறுதிச் சடங்கு

அவரது இறுதிச் சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காடுவெட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்