திருத்துறைப்பூண்டியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மகனுக்கு துணையாக சென்ற தந்தை கேரளாவில் திடீர் மரணம்; மற்றொரு மாணவியின் தந்தை மதுரையில் மாரடைப்பால் உயிரிழந்தார்

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வுக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு மகனுடன் சென்றிருந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் தேர்வு எழுதினார். அவரது குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் பெருகவாழ்ந்தானில் உள்ள அரசு கிளை நூலகத்தில் நூலகராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி மகாதேவி. மாற்றுத்திறனாளியான இவர், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார்.

இவர்களது மகன் கஸ்தூரி மகாலிங்கம்(17), திருச்சி வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். மகள் ஐஸ்வர்யாதேவி(13) குரவப்புலம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் கூத்தம்பாடி நாளந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்வு எழுதுவதற்காக கஸ்தூரி மகாலிங்கம், தந்தை கிருஷ்ணசாமியுடன் நேற்று முன்தினம் எர்ணாகுளம் புறப்பட்டார்.

அன்று இரவு அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு மையத்துக்கு சென்றிருந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தந்தை இறந்தது தெரியாமல்....

இதுகுறித்து விளக்குடியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, தந்தை இறந்தது தெரியாமல் மகன் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த அவர் தந்தையை காணாமல் தேடியுள்ளார். ‘எங்கே என் அப்பா?’ என்று கேட்டுள்ளார். அங்கிருந்த கேரளாவை சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள், போலீஸார் அவரை சமாதானப்படுத்தி, கிருஷ்ணசாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை இறந்த தகவல் அறிந்ததும் கஸ்தூரி மகாலிங்கம் கதறி அழுதுள்ளார்.

அதிகாரிகள் கேரளா பயணம்

கிருஷ்ணசாமி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருவாரூர் தனி வட்டாட்சியர் இன்னாசிராஜ், கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோர் எர்ணாகுளம் சென்றுள்ளனர். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்ததும், கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.

குடும்பத்தினருக்கு ஆறுதல்

07ty_tvr1(2)neet death திருவாரூர் மாவட்டம் விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டில் அவரது மனைவி பாரதி மகாதேவி, மகள் ஐஸ்வர்யா தேவி ஆகியோருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏக்கள் தமிமுன்அன்சாரி, ஆடலரசன், திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர்.100 

மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன், திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் அரசியல் கட்சியினர் விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி பாரதி மகாதேவி, மகள் ஐஸ்வர்யா தேவி ஆகியோருக்கு ஆறுதல் கூறினர்.

தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த ஆண்டு நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச் சென்ற தந்தையை இழந்துவிட்டோம். இதற்கு மத்திய அரசின் நிர்வாகக் கோளாறுதான் காரணம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்” என்றார்.

தமிழக முதல்வர் ஆறுதல்

தமிழக முதல்வர் பழனிசாமி, கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். உடலை கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும், அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.

இதேபோல, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பாரதி மகாதேவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.

மேலும், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர், பாரதி மகாதேவியை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததுடன், மகன் கஸ்தூரி மகாலிங்கத்தையும், கிருஷ்ணசாமியின் உடலையும் பாதுகாப்பாக விரைந்து அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டுக்குச் சென்று பாரதி மகாதேவிக்கு ஆறுதல் கூறினார். அப்போது கஸ்தூரி மகாலிங்கத்தின் மேல் படிப்பு செலவை தமிழக அரசு ஏற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கிருஷ்ணசாமி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விளக்குடியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாணவியின் தந்தை மரணம்

மற்றொரு சம்பவத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியின் தந்தை திடீரென மாரடைப்பால் காலமானார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன்- நர்மதா ஆகியோரது மகள் தேவி ஐஸ்வர்யா(17). இவர் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நேற்று நீட் தேர்வு எழுதினார். இதற்காக மகளுடன் கண்ணன் பஸ்ஸில் நேற்று மதுரை சென்றார். தேர்வு எழுதிவிட்டு வந்த மகளிடம் தேர்வு எப்படி எழுதினாய் எனக் கண்ணன் கேட்டுள்ளார். அதற்கு மிகவும் கடினமாக இருந்தது என மகள் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட கண்ணன், சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் கண்ணன் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சிங்கம்புணரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்