காவிரி விவகாரம்; மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர் துரோகம்: முத்தரசன் கண்டனம்

By செய்திப்பிரிவு

 காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு மிக, மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவது மிக கடுமையான கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்து ஆறு வார காலத்திற்குள், எவ்வித சாக்குபோக்கும் இன்றி இத்தீர்ப்பைச் செயல்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

மத்திய அரசு காலக்கெடு முடியும் நாளான மார்ச் 29-ம் தேதி வரை மௌனம் காத்துவிட்டு மேலும் மூன்று மாதகாலம் அவகாசம் கேட்டதை நீதிமன்றம் நிராகரித்து மே 3-ம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இன்று மத்திய அரசு மீண்டும் அவகாசம் கோரியுள்ளது. வரைவுத் திட்டம் தயாராக உள்ளது, ஆனால் பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை என மத்திய அரசு கூறியிருப்பது ஏற்க முடியாத காரணமாகும்.

உச்ச நீதிமன்றம் மேலும் அவகாசம் அளிக்கும் விதமாக மே 8-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. இந்நிலையில் 4 டிஎம்சி தண்ணீர் இந்த வாரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இவ்வாண்டும் குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு மிக மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையில், மாநில அரசு விட்டுக் கொடுத்து, மத்திய அரசின் முடிவுகளுக்கு ஏற்ப இசைவாக செயல்பட்டு வருவது மத்திய அரசின் துரோகத்தை விட பெரும் துரோகச் செயலாகும்.

மத்திய, மாநில அரசுகளின் துரோகத் தனத்திலிருந்து காவிரி உரிமையை பாதுகாக்க தமிழக மக்கள் அனைவரும் ஒருமித்த குரல் எழுப்ப முன்வர வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்