‘‘பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி பறக்கட்டும்’’ - வைகோ

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும் நாளன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி தமிழர்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (திங்கள்கிழமை) வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

“காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப் பறித்து, கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு மன்னிக்க முடியாத துரோகத்தை மத்திய அரசு செய்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்குவதற்கு அழிவுத்திட்டங்களை செயற்படுத்த முனைந்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணலில் தடுப்பு அணைக் கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு மறைமுக அனுமதி வழங்கி, காவிரியில் சொட்டு நீர் கூட கிடைக்காமல் செய்வதற்கு சதித்திட்டம் வகுத்திருக்கிறது.

காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப்படிம எரிவாயு போன்ற திட்டங்களை செயற்படுத்த, பன்னாட்டு அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 57,500 ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற, தமிழக அரசு 2017 ஜூலை 19 ஆம் தேதி அரசாணை பிறப்பித்து இருக்கின்றது.

மக்களின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம், காவிரி டெல்டாவில் ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகளை அமைக்கும் பணிகளை தொடருகிறது.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு எரிவாயு எடுத்துச் செல்ல கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விளைநிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல முடியாது என்று மத்திய அரசு மறுத்து வருகிறது.

தென்மாவட்டங்களின் நீராதாராமான முல்லைப்பெரியாறு அணைக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், தேனி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும், அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் என்ற பெயரில் அழிவுத் திட்டத்தை செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது.

தூத்துக்குடி மக்களின் வாழ்வை சூறையாடிய ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்திற்கு மோடி அரசின் அறிவுறுத்தலின்படி அதிமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்த மத்திய அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கி வரும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் அரசு நிர்வாகத்தை ஆட்டிப் படைப்பதை ஜனநாயக சக்திகள் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

நாட்டின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி கும்பல் கொட்டம் அடிப்பதற்கும், சிறுபான்மை இஸ்லாமியர், கிருத்துவ மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்துவதற்கும் மோடி அரசின் பின்புல ஆதரவுதான் காரணம் ஆகும். பத்திரிகை, ஊடகங்களை மிரட்டுவதும், கருத்து உரிமைக்கு எதிராக செயல்பட்டு, அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதிப்பதும் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்.

பாசிசப் போக்குடன் தமிழ்நாட்டிற்கு எதிராக வஞ்சகம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வரும்போது, ஒட்டுமொத்த தமிழகமே அணி திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

ஏப்ரல் 12 அன்று தமிழகம் வரும்போது, பிரதமர் மோடிக்கு எதிரா கருப்பு கொடி காட்ட வேண்டும். தமிழர் இல்லம் தோறும் கருப்புக்கொடிகள் பறக்கட்டும். அலுவலகங்களில் பணிபுரிவோர், ஆலைத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கருப்புப்பட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையை பாதுகாக்க, காவிரியில் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை மீட்க தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணரும் வகையில் கருப்புக்கொடி அறப்போரை வெற்றி அடைய செய்திட வேண்டும்”

என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்