3-வது அணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்: கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்த பிறகு சந்திரசேகர ராவ் தகவல்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மு.க.ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என அவர் தெரிவித்தார்.

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சென்னை வந்த சந்திரசேகர ராவ், கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன்பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அவரை ஸ்டாலின், அவரது மனைவி துர்கா உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர்.

அதன்பிறகு ஸ்டாலினுடன் தற்போதைய அரசியல் சூழல், 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சந்திரசேகர ராவ் தீவிர ஆலோசனை நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சந்திரசேகர ராவுடன் தெலங்கானா மாநில நிதி அமைச்சர் ராஜேந்தர், எம்.பி., கேசவ ராவ் உட்பட 9 பேர் கொண்ட குழுவினர் வந்திருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் சந்திரசேகர ராவ் கூறியதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினோம். மத்திய, மாநில உறவுகள், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினோம். தொடர்ந்து ஆலோசிப்போம்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கி, சிறப்பான பணியை மேற்கொள்ளவில்லை. மாநில அரசுகள் கூடுதல் நிதி, அதிகாரம் பெறவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.

புத்தகம் தந்த கருணாநிதி

கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் சந்தித்தேன். அவர் வணக்கம் தெரிவித்து, புத்தகத்தை பரிசாக அளித்தார். எங்கள் மாநிலத்தில் வரும் 10-ம் தேதி நடக்கவுள்ள விவசாயிகள் நலத்திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

நாங்கள் 3-வது அணியா, 4-வது அணியா என்பது முக்கியம் இல்லை. அனைவரும் ஒரு அணியாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 3-வது அணி அமைவது குறித்து தோ்தல் நேரத்தில் தெரிவிப்போம். இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதை நோக்கியே எங்கள் பயணம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து ஸ்டாலின் கூறியதாவது:

மதசார்பின்மையை காப்பாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் உரிமையை பெறுவது, மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பெறுவது, மத்திய அரசின் சர்வாதிகார போக்கு ஆகிய அம்சங்கள் குறித்து ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடத்துள்ளது. இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

மற்ற மாநில முதல்வர்களோடும் சந்திரசேகர ராவ் பேசி வருகிறார். ஏற்கெனவே தமிழகத்தில் எங்களோடு ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சித் தலைவர்களோடு இதுகுறித்து விவாதிக்க உள்ளேன்.

மாநில சுயாட்சி மாநாட்டை திமுக விரைவில் நடத்த வேண்டும் என சந்திரசேகர ராவ் தெரிவித்திருக்கிறார். தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு இருப்பதால், அப்போதுதான் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்