மோடி அரசின் படுதோல்விகளை மூடி மறைக்கும் பட்ஜெட்: முத்தரசன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

மோடி அரசின் மூன்றாண்டு கால படுதோல்விகளை மூடி மறைக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சர் ஈடுபட்டிருப்பதை பட்ஜெட் அம்பலப்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாஜகவின் மோடி தலைமையிலான மத்திய அரசு 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால் தற்போதைய அரசு தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட்டை பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர்.

குறிப்பாக பொது சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்ட பின்னர் சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்தனர். இந்த பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கும் திசைவழியில் நிதிநிலை அறிக்கையின் அணுகுமுறை அமையவில்லை. பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ள வேளாண்மைத் துறை, கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவம், போன்றவைகளுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் மறுவாழ்வுக்கு, மத்திய அரசிடம் கோரிய இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் நிதியமைச்சர் கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ள ரயில்பாதைகள் இருவழிப்பாதைகளாக மேம்படுத்த வேண்டும், புதிய ரயில்பாதைகள் அமைக்கபட வேண்டும் என்ற கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாநில அரசுகளுடன் இணைந்து கல்வித் தரத்தை உயர்த்துவதாக கூறும் மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க முன்வரவில்லை. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ள விவசாயிகளின் கடன் சுமையை குறைத்திட எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. 2022 வரை பொறுத்திருங்கள் என கால அவகாசம் கோரியுள்ளது.

கடந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் கோடி, தற்போது ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான கிசான் கார்டு மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கும் விரிவுபடுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் உயர்ந்துள்ள விலைவாசியை கருத்தில் கெண்டால் உயர்த்தப்பட்ட பயிர்கடன் தொகை பொருளாற்றது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தொழிலாளர் நலனை பாதிக்கும் சட்டத் திருத்தங்களையும், சமூக பாதுகாப்பு வளையத்தையும் உடைத்து நொறுக்கும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும் எதிர்த்து தலைநகர் டெல்லியில் நவம்பர் மாதம் மூன்று நாட்கள் திரண்டு போராடிய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு, 4 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு கட்டணம் இல்லா மின்சார இணைப்பு போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்த வருமான பிரிவினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் நிதி ஓதுக்கீட்டு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வருவாய் ஆதாரங்கள் பற்றி பட்ஜெட் வாய் திறக்கவில்லை.

மொத்தத்தில் மோடி அரசின் மூன்றாண்டு கால படுதோல்விகளை மூடி மறைக்கும் அரிதாரப்பூச்சு வேலையில் மத்திய நிதியமைச்சர் ஈடுபட்டிருப்பதை 2018-2019 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

39 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்