மின்வெட்டுப் பிரச்சினையில் மக்களை ஏமாற்றும் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

மின்னுற்பத்தியை அதிகரித்து, மின்வெட்டை போக்குவதற்கு பதிலாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் ஜெயலலிதா அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததையடுத்து சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.

பல மாவட்டங்களில் நாள் தோறும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் மின்நிலைமை குறித்து கடந்த மே மாதம் 27 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றியதில் பெருமிதம் அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலம் என்று 3 ஆண்டுகள் சிரமப்பட்டு ஜெயலலிதா உருவாக்கி வைத்த மாயை மூன்றே மாதங்களில் கலைந்து போயிருக்கிறது. தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்ற உண்மையும் இப்போது அம்பலமாகியிருக்கிறது.

மின்வெட்டு நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த சில நாட்களிலேயே பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டது. இதை நான் சுட்டிக்காட்டியபோது, முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாதித்தார்.

ஆனால், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதைப் போல இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. கடந்த 18ஆம் தேதி 360 மெகாவாட் அளவுக்கும், 19ஆம் தேதி 340 மெகாவாட் அளவுக்கும் 20ஆம் தேதி 940 மெகாவாட் அளவுக்கும், 21ஆம் தேதி 1190 மெகாவாட் அளவுக்கும், 22 ஆம் தேதி 966 மெகாவாட் அளவுக்கும் மின்வெட்டு செய்யப்பட்டதாக தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் ஆகவும், மின் உற்பத்தி 8500 மெகாவாட் ஆகவும் இருந்தது. அதன்பின் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியதால் 1800 மெகாவாட், தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் வல்லூர் மின் திட்டத்தின் இரு பிரிவுகள் உற்பத்தியைத் தொடங்கியதால் 750 மெகாவாட் என மொத்தம் 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கிறது.

அதேநேரத்தில் தமிழகத்தின் மின் தேவை 14,500 மெகாவாட் ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கிட்டத்தட்ட அதே அளவுக்கு மின் தேவையும் உயர்ந்திருப்பதால் தமிழகத்தின் மின்பற்றாக்குறை குறையாமல் அதே அளவிலேயே இருந்து வருகிறது. இந்த இடைவெளியை குறைத்து மின்வெட்டை போக்க வேண்டுமானால், புதிய அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தான் ஒரே வழியாகும். ஆனால், அதை செய்யாமல், ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை நம்பி தமிழகம் மின்வெட்டே இல்லாத மாநிலம் என்பது போன்ற பொய்யானத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் அரசு தீவிரம் காட்டுகிறது.

இதன்மூலம் மின்வெட்டு விவகாரத்தில் மக்களை மட்டுமின்றி தன்னைத் தானே தமிழக அரசு ஏமாற்றிக் கொள்கிறது என்பது தான் உண்மை.

மழை காரணமாக மின்தேவை குறைந்துள்ள நிலையிலேயே ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்வெட்டு செய்யப்படும் நிலையில், மின்தேவை உயரும் போது மின்வெட்டு நேரமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாநிலத்தின் மின்நிலைமை கவலையளிக்கும் வகையில் இருக்கும்போதிலும் அதை சரி செய்ய வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும். மின்வெட்டு தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்திருந்த அமைச்சர் விஸ்வநாதன், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், 26.07.2013 அன்று ஒப்பந்தப் புள்ளியும், 05.02.2014 அன்று விலைப்புள்ளியும் பிரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு அதன்பின் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை பணி ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கும் ஒப்பந்தப்புள்ளி மற்றும் விலைப்புள்ளி பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் ஒப்பந்தம் வழங்கப்பட வில்லை.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் 1000 மெகாவாட் மின்திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் மின்னுற்பத்தியை தொடங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் முடிவடையப்போகும் நிலையில், அங்கு மின்னுற்பத்தி தொடங்குவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.

மின்வெட்டை சமாளிக்க ஆகஸ்ட் மாதத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தாலும் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக வாங்கப்படவில்லை. மின்வெட்டை சமாளிப்பதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் ஆகும்.

மின்னுற்பத்தியை அதிகரித்து, மின்வெட்டை போக்குவதற்கு பதிலாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் தமிழக அரசின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதாக கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஜெயலலிதா அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இனியாவது மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடாமல், உண்மையான அக்கறையுடன் மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்