குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க கோரும் திமுக வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில், சிபிஐ அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குட்கா முறைகேடு விவகாரத்தில் முறையாக விசாரணை நடக்க சிபிஐ விசாரணை நடக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன் தொடர்ந்து நடந்து வந்தது. இதில் அரசு தரப்பு, வருமானவரித்துறை தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, உணவுப் பாதுகாப்புத்துறை தரப்பு, திமுக தரப்பு என பலரும் கடும் வாதங்களை எடுத்து வைத்தனர்.

சிபிஐ விசாரணை கேட்டு திமுக தரப்பில் வாதம் வைக்க, வருமான வரித்துறை தரப்பும் அதற்கு ஆதரவாக வாதத்தை வைத்தது. சிபிஐ தரப்பு விசாரணை கூடவே கூடாது என அரசு தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கடும் வாதங்கள் வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள் அமர்வு, ''நீங்கள் 3 பேரும் சிபிஐ விசாரணையை எதிர்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி இன்னும் ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது'' என்று கருத்து தெரிவித்தனர்.

''இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பது ஏன்? சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தகுந்த ஒத்துழைப்பை ஏன் வழங்கக்கூடாது?'' என்றும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்களை இருதரப்பு வக்கீல்களும் தாக்கல் செய்யலாம். என்று விசாரணையை ஜனவரி 30-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக வழக்கின் வாத விபரம்:

அரசு தரப்பு வாதம்:

அரசு தரப்பில் குட்கா ஊழல் தொடர்பான மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை.

மாநில போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாமல் சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்துவது மிகவும் கடினம். வேண்டுமென்றால் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணையை இந்த நேரடியாக கண்காணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் தரப்பு வாதம்:

குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களின் தடையை முறையாக அமல்படுத்தி வருகிறோம். அதையும் மீறி விற்கப்படும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை உடனுக்குடன் பறிமுதல் செய்து அழித்து வருகிறோம்.

இதுவரை 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக தடை செய்யப்பட்ட புகையிலை அழிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று வாதிடப்பட்டது.

மாநிலஊழல்தடுப்புகண்காணிப்புஆணையர்தரப்பு வாதம்:

மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு. இதன் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகிறது. மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணையில் எந்த தொய்வும் இல்லை; அப்படியிருக்கும்போது சிபிஐ விசாரணை தேவையில்லை இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வலியிறுத்தப்பட்டது.

மத்தியகலால்வரிதுறைபதில்மனு:

சுகாதாரத் துறை அமைச்சருக்கு எம்.டி.எம். குட்கா உற்பத்தியாளர் 56 லட்சம் பணம் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும், இது தொடர்பாக விசாரணை கோரி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அப்போதைய டிஜிபி எழுதிய ரகசிய கடிதத்தின் அசல், அவரது சசிகலா அறையில் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 கோடி ரூபாய் ஹாவாலா பணப்பரிமாற்றம் நடந்தத்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர்ஜெ.அன்பழகன்தரப்பு வாதம்:

''குட்கா ஊழல் வழக்கை ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தான் விசாரித்து வருகிறார். அவர் இந்த விசாரணைக்காக தன்னுடைய மேல் அதிகாரியாக டிஜிபி, உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி சம்மன் அனுப்புவார்? அவர்களிடம் பயம் இல்லாமல் ஊழல் குறித்து எப்படி விசாரணை நடத்துவார்? இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்ற, பாதுகாக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் நினைக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் குட்கா ஊழல் வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது என்று அட்வகேட் ஜெனரல் கூறினார். ஆனால், இந்த வழக்கில் இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லையே? அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து ஜனவரி 25-ம் தேதி வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

23 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்