கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

By கி.மகாராஜன் 


மதுரை: கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம் ஆகிவருவதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் பழைய தேர் பழுதான நிலையில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டம் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதிய தேர் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோயில் விழாக்களில் தேரோட்டம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கு முடிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அறநிலையத் துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கோயில் புதிய தேர் தயாராக உள்ளது. பல பிரிவினர் பிரச்சினை செய்வதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. அதனால், வெள்ளோட்டம் சம்பந்தமாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பதற்றமான சூழல் காரணமாக சமரசக் கூட்டம் நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து நீதிபதி, “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் பல பிரிவினர் ஒற்றுமையில்லாமல் இருப்பது வேதனையானது. பிரச்சினைக்குரிய பிரிவினர்களை அழைத்து அரசால் ஒரு கூட்டம் கூட போட முடியாதா?

தெருவில் நிற்க வைக்கவா பல கோடி ரூபாய் செலவில் தேரை செய்தது? அரசின் நடவடிக்கை திருப்தியாக இல்லை. மாநில அரசால் தேர் வெள்ளோட்டம் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவனத்தினரை கொண்டு வெள்ளோட்டம் நடத்த உத்தரவிடலாமா? அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறுவதை ஏற்கிறோம். நவ.17-ல் தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

15 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

34 mins ago

மாவட்டங்கள்

54 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்