மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மீண்டும் நேரடி தேர்தல்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதன் விவரம்:

மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் அந்தந்த மாமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டம் 2016, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 2016-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதே சிறந்த முறையாக இருக்கும் என்றும் அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் சிறப்பாகவும் அமைதியாகவும் நடக்கும் என்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். அதேபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், துறை அதிகாரிகளும் இதையே வலியுறுத்தினர்.

மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அவர்களை தேர்ந்தெடுத்த வார்டுகளின் வளர்ச்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவர். மற்ற வார்டுகள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதால் அவர்களால் தனித்து இயங்கி மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த சுயமாக முடிவெடுக்க முடியாமலும் போகும்.

இவற்றையெல்லாம் அரசு கவனமாகப் பரிசீலித்து மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடியாக மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற தீர்மானித்தது. இதன்மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நல்ல நிர்வாக முறையைக் கொண்டு வர முடியும். மக்களுக்காக உள்ளாட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள இயலும். இந்த நோக்கங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான சட்டங்களை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

தனி அலுவலர்கள் பதவிக்காலம்

உள்ளாட்சி மன்ற தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவும் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

எல்லைகள் வரையறை தொடர்பாக கட்சிகள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வார்டு வரையறைகளை செய்து முடிப்பதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு அதன் மீதான பரிந்துரைகள் வரும் 31-ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பப்படும். அதன் மீதான நடவடிக்கை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும். இந்த தொடர் வேலை காரணமாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. இதன்காரணமாக உள்ளாட்சி மன்றப் பணிகளை மேற்கொண்டு வரும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அப்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடக்காததால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் டிச.28-ம் தேதி ஒப்புதல் அளித்தார். தற்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடப்பதால் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த இந்த இரண்டு மசோதாக்களையும் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிமுக நிலையிலே எதிர்த்தனர்.

இருப்பினும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

35 mins ago

வணிகம்

50 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்