ஒக்கி புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து குமரி, சென்னையில் மத்திய குழு ஆய்வு: மாயமான மீனவர்களை மீட்குமாறு குடும்பத்தினர் கதறல்

By செய்திப்பிரிவு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் மற்றும் வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி ஒக்கி புயல் தாக்கியது.

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய உள்துறை இணைச் செயலாளர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் தலைமையிலான குழுவினர், நேற்று காலை 11.45 மணிக்கு குமரி மாவட்டம் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர். இக்குழுவில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், மத்திய மின்துறை துணை இயக்குநர் சுமன், மத்திய கப்பல்துறை அதிகாரி பரமேஸ்வர் பாலி, மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குநர் மனோகரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மத்தியக் குழுவினர், தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து கலந்தாலோசனை செய்தனர். தமிழக அரசின் சார்பில், முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், முதன்மைச் செயலர் மற்றும் மின் உற்பத்தி பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் சாய்குமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். புயல் பாதிப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் மத்தியக் குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தூத்தூர் புனித ஜூட்ஸ் கல்லூரியில் மீனவர்களுடன் மத்தியக் குழுவினர் கலந்துரையாடினர்.

காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.

வள்ளவிளை மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர், 3 குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்கள் நிறைந்துள்ள மருந்துகோட்டை, சுருளோடு, கல்படி, ஈசாந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் பயிர் சேதங்களையும், மின் சேதம், சாலை சேதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மாலையில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆய்வு குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்தியகோபால் கூறியதாவது: தற்போது சென்னை மற்றும் குமரியில் மத்தியக் குழுவினரின் ஆய்வு நடக்கிறது. விவசாயம், மின்சார கட்டமைப்பு மற்றும் மீனவர் பாதிப்பு குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அரசு முதல்கட்டமாக புயல் நிவாரணமாக ரூ. 133 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்பு கூடுதல் தொகை ஒதுக்கப்படும்.

குமரியில் 170 பேர் மாயம்

இதுவரை, 220 மீனவர்கள் புயலால் மாயமாகி உள்ளனர். இதில், 170 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காணாமல்போன மீனவர்கள் மற்றும் பிற பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்போம். சுனாமி பாதிப்பின்போது சிறப்பு அரசாணை நிறைவேற்றி நிவாரணம் அளிக்கப்பட்டது. அதுபோல், புயல் பாதிப்புக்குத் தேவைப்பட்டால் சிறப்பு அரசாணை நிறைவேற்றி நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

சென்னையில்...

சென்னையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் தலைமையில் மத்திய நிதித்துறை செலவினப் பிரிவு துணை இயக்குநர் முகேஷ்குமார், மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக முதுநிலை ஆலோசகர் எஸ்.சி.சர்மா, கோவையில் உள்ள மத்திய நீர்வளம், காவிரி மற்றும் தென்னக நதிகள் சங்கத்தின் இயக்குநர் ஜி.நாக மோகன் ஆகியோர் வந்தனர். இதில், ஜிண்டால் தவிர மற்ற மூவரும், நேற்று காலை, தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறைச் செயலர் பி.சந்திரமோகனுடன் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின், ராயபுரம் எம்.எஸ்.கோவில் சாலை, பேசின் பாலம் பவர் ஹவுஸ் சாலை, ஈவிகே சம்பத் சாலை, வேப்பேரி ஜெர்மியா சாலை, வியாசர்பாடி மூர்த்திங்கர் சாலை என மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு சாலைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, ஸ்டீபென்சன் பாலம் பகுதியில் ,ஓட்டேரி நல்லா கால்வாயில் சேதமடைந்த பகுதி, போக்குவரத்து பாதிப்புகள் குறித்தும், கொன்னூர் நெடுஞ்சாலை, அண்ணா நகர் 3-வது அவென்யூ, புது ஆவடி சாலை பாதிப்புகளையும் ஆய்வு செய்தனர்.

அதன்பின் பிற்பகல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு தர்காஸ் ரோடு, பெருங்களத்தூர் ஸ்ரீராம் நகர், சர்வீஸ் சாலை அமுதம் நகர், முடிச்சூர் கிருஷ்ணா நகர், கீழ்க்கட்டளை சந்திப்பு, நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர். அங்குள்ள பொதுமக்களிடமும் சேத விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் மழை வெள்ள பாதிப்புகளை விளக்கும் புகைப்படக் காட்சிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

அப்போது மத்திய நீர்வள இயக்குநர் நாகமோகன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘புகைப்படங்களை பார்க்கும்போதே காஞ்சிபுரம் மாவட்ட பாதிப்புகளை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வுக்குப் பின் விரைவில் முழுமையான அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்போம்’’ என்றார். இன்றும் ஆய்வு தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

உலகம்

22 mins ago

ஆன்மிகம்

20 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்