உச்ச நீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன்பாகவே ஜெயலலிதா கைரேகை ஆவணங்கள்: சீலிட்ட உறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் - பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி மோகன்குமார் ஆஜர்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் தடை விதி்ப்பதற்கு முன்பாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகைகள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் குறுந்தகட்டினை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை ஜெயிலர் சீலிட்ட கவரில் நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பி.சரவணன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருந்தார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் மற்றும் இரட்டை இலை சின்னத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையத்தின் படிவம் ஏ மற்றும் படிவம் பி-யில் உள்ள ஜெயலலிதாவின் கைரேகைகள், அவர் சுயநினைவுடன் இருந்தபோது பெறப்பட்டதா? என்பது குறித்து சந்தேகம் கிளப்பி டாக்டர் சரவணன் கூடுதல் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஏற்கெனவே மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் வில்பிரட், டாக்டர் பாலாஜி உள்ளிட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது அவரிடம் பெறப்பட்ட கைரேகைகள் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடக சிறைத் துறைக்கும், ஜெயலலிதாவின் ஆதார் ஆவணங்களை தாக்கல் செய்ய ஆதார் ஆணையத்துக்கும் நீதிபதி வேல்முருகன் கடந்த நவம்பர் 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடந்தது. அப்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை ஜெயிலர் மோகனகுமார் நேரில் ஆஜராகி, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது அவரிடம் பெறப்பட்ட கைரேகைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பதிவுகள் தொடர்பான குறுந்தகடு ஆகியவற்றை நீதிபதியிடம் சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

அதேபோல ஆதார் ஆணையத்தின் துணை தலைமை இயக்குநர் ஒய்.எல்.பி.ராவ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் ஆணைய சட்ட விதிகளின்படி தனிநபர்களின் கைரேகைகள் உள்ளிட்ட அந்தரங்க தகவல்களை யாரிடமும் பகிர முடியாது. அதேநேரம், பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை பகிர எந்தத் தடையும் இல்லை என்றார்.

அப்போது நீதிபதி, ஜெயலலிதா ஆதார் அட்டை பெற்றுள்ளாரா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த வழக்கறிஞர், முறைப்படி ஆதார் அட்டை பெற்றுள்ளார் என்றார். அந்த ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் அஷ்ரப்அலி, இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அப்போது நீதிபதி, உச்ச நீதிமன்றம் எதற்கு தடை விதித்துள்ளது என்பது குறித்து தெரியவில்லை. கைரேகை சம்பந்தமாக உத்தரவு பிறப்பித்து இருந்தால் அந்த உத்தரவு பயனற்றதாகி விடும் என்றார். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தாக்கல் செய்ய அதிமுக வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

உச்ச நீதிமன்றம் தடை

ஜெயலலிதாவின் கைரேகைகள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய பரப்பன அக்ரஹார சிறைத் துறைக்கும், ஆதார் ஆணையத்திற்கும் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தனிமனித அந்தரங்க உரிமைக்கு எதிரானது.

எனவே அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ ஜெயலலிதா கைரேகை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், மேலும் இதுதொடர்பாக டாக்டர் பி.சரவணன் 8 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சட்டத்தில் இடம் இல்லை

நாடு முழுவதும் பொதுமக்களின் 10 விரல் ரேகை பதிவு மற்றும் கருவிழி படலம் ஆவணமாக மாற்றப்பட்டு ஆதார் பதிவின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று போலீஸ் தரப்பிலும், ஆர்வலர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. குற்றங்களை கண்டுபிடிக்கவும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்கு பயன்படுத்தவும் இந்த விவரங்களை பயன்படுத்த முடியாவிட்டால், இந்த தகவல்கள் இருந்தும் பலனில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு போய் சேர்க்கவே ஆதார் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக கடந்த ஆண்டு ஆதார் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்ட விதிகளின்படி, உயிரோடு இருக்கும் ஒருவர், அனுமதி அளித்தால் மட்டுமே அவரது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் வேறு நபருக்கோ, நிறுவனத்துக்கோ வழங்கப்படும்.

ஆனால் கைரேகை மற்றும் கண் கருவிழி படலம் போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் எப்போதும் வழங்கப்படுவதில்லை. இறந்த ஒருவரின் பயோமெட்ரிக் விவரங்களை வழங்குவது தொடர்பாக ஆதார் சட்டத்தில் சரத்துகள் இல்லை. மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்