மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், மதுசூதனன் இனி தேர்தலில் நிற்கக் கூடாது என்ற ஒரு நிலையை நிச்சயமாக தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இன்றைக்கு வெளி வந்திருக்கிறது. அந்த இரண்டு மாநிலங்களில் குறிப்பாக ஏற்கெனவே குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற நிலையில் வெற்றி பெற்றிருக்கும் அந்த இரண்டு மாநிலங்களைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், அதே நேரத்தில் நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டியிருக்கிறது. தேர்தல் ஆணையம் சந்தேகத்து அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பது திமுகவின் அசைக்க முடியாத கருத்து.

நேற்றைய தினம் நானும், திமுகவின் முதன்மைச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட மூவரும் சென்று ஏற்கெனவே லக்கானியிடத்திலும், அதேபோல சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியிடத்திலும் நேரில் சந்தித்து ஆர்.கே.நகரில் நடைபெறும் பணப் பட்டுவாடா குறித்து புகார் மனுவை அளித்து எங்கள் குற்றச்சாட்டுகளை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதே மனுவை, வலியுறுத்தும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து விளக்கமாக விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரையில் ஆளுங்கட்சியான அதிமுகவும், அதிமுகவில் இருந்து பிரிந்து மற்றொரு அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தினகரன் அணியைச் சார்ந்தவர்களும் தேர்தலில் செய்து கொண்டிருக்கும் தில்லு முல்லுகளை, பணப் பட்டுவாடா விவரங்களை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக மதுசூதனன் இனி தேர்தலில் நிற்கக் கூடாது என்ற ஒரு நிலையை நிச்சயமாக தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டுமென மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தகையும் பாதிப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தாது. குஜராத், இமாச்சல் பிரதேசங்களைப் போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் சொல்லி இருக்கிறார். அது சகோதரி தமிழிசைக்கு இருக்கும் ஆசை. அந்த ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை.

ஆர்.கே.நகரில் போலீஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு போலீஸ் வாகனத்திலேயே பணத்தைக் கொண்டு வந்து பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். அதற்கு இங்கிருக்கின்ற தேர்தல் ஆணையமும் உடந்தையாக உள்ளது'' என்று ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்