கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன?- கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதும் நடிகை கஸ்தூரியின் கருத்தும்

By செய்திப்பிரிவு

கந்துவட்டி கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நவம்பர் 5-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நெல்லை தீக்குளிப்புகளை மையப்படுத்தி ஓவியர் பாலா வெளியிட்ட கேலிச்சித்திரம் பேரதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அதைத்தான் பாலாவும் எதிர்பார்த்திருப்பார், விரும்பியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இவரின் பல முந்தைய சித்திரங்களும், பொது நாகரிகத்தின் எல்லைகளை அறவே நிராகரிப்பவை. கூச்சநாச்சம் பார்க்காதவை. கருத்துக்களை வாழைப்பழ ஊசி போலோ, இல்லை ஆழம்பொதிந்த நையாண்டியாகவோ சொல்வது ஒரு வகை என்றால், பொளேரென்று முகத்தில் அறைந்தாற் போல் உரைப்பது இன்னொரு வகை. இதில் எங்கே எல்லை மீறப்படுகிறது, அப்படி மீறப்படும் எல்லைதான் எது என்பதெல்லாம் விவாதத்துக்குரிய விஷயம்.

நெல்லை ஆட்சியாளர் சந்தீப் நந்தூரி மனநிலை புரிகிறது. அரசியல்வாதிகளுக்கு விமர்சனங்களும், எதிர்ப்பும் பழக்கம். அதிகாரிகள் பொதுவாக ஊடக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதில்லை. பாவம், ஏற்கனவே நான்கு உயிர்கள் கண் முன்னே துடிதுடித்து இறந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்னரே, மிக மோசமான மானக்கேட்டையும் சந்திக்கும் சூழல். ஆட்சியாளர் சந்தீப் ஒரு நல்லவர், பொறுப்புள்ள அதிகாரி என்பது உண்மையானால், வீண் பழி சுமத்தப்படும் போது, அதிலும் மிக ஆபாசமாக அது சித்தரிக்கபடும்போது, பதறித்தான் போயிருப்பார். அவர் போலீஸை நாடியதில் ஆச்சரியமில்லைதான். ஆனால், அது அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றே நான் பார்க்கிறேன்.

இப்படி உங்களுக்கு நடந்தால் சும்மா இருப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல எனக்கு முழு தகுதியும் மனப்பக்குவமும் உண்டென்று நினைக்கிறேன்.

நடிகைகளை ஆபாசமாக போட்டோஷாப் செய்து வெளியிடும் எத்தனையோ இணையதளங்கள் உண்டு. இவை சிலரால் மட்டுமே பார்க்கப்படுகிற விளிம்பு நிலை ஊடகங்கள், கோர்ட் கேஸ் என்று போனால் அதுவரை சிலர் மட்டுமே பார்த்த கேவலமான தவறான சித்தரிப்புகள் பொதுவெளிக்கு வரும்.

அரெஸ்ட் ஆகும் வரை, பாலா என்பவரையும் அவரின் அந்தக் கார்டூனையும் சொற்பமானவர்களுக்கே தெரியும். இப்பொழுதோ, நாடு முழுவதும் வைரல் ஆகிவிட்டார். தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை தானே விளம்பரப்படுத்திவிட்டார். கலெக்டர் நந்தூரி, போதாததற்கு இன்னும் இருவரையும் சேர்த்து செய்தியாக்கிவிட்டார்.

அவதூறு கிளப்புபவர்களை எதிர்கொள்வது எப்படியென்று என்னைக் கேளுங்கள். ஒரு நடிகையாக நான் சந்திக்காத வதந்தியா, அவதூறா? சொல்லப்பட்ட பழி பொய்யென்று நிரூபியுங்கள், பழித்தவரை பழி வாங்காதீர்கள். விமர்சனங்களுக்கு எதிர்வினையாக விளக்கங்களை, விவரங்களை எடுத்து வையுங்கள்; விமர்சித்தவருக்கு விளம்பரம் தேடித் தராதீர்கள். மாண்ட உயிர்களுக்கு பதில் சொல்வதை விடுத்து, மானம் போச்சே என்று மலைக்காதீர்கள். உங்களை குறிவைத்த அந்த சித்திரம் ஆபாசமான, விகாரமான, கீழ்த்தரமான ஒன்று தான். அதில் மாற்று கருத்தில்லை. அதில் கூறப்பட்ட கருத்து பொய்யாகவும், உங்களை காயப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டதாகவும் கூட இருக்கலாம். அதற்காக சமூகம் அந்த ஓவியனை தூற்றத் தயாராக இருந்தது. அவசரப்பட்டு அடக்குமுறையை அவிழ்த்துவிட்டதால் உங்கள்பால் வந்திருக்கக்கூடிய பச்சாதாபம் திசைமாறிவிட்டதே என்று ஆதங்கப்படுவதைத் தவிர இப்போது வேறு எதுவும் செய்வதற்கில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 min ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்