ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடி: அதிர்ச்சியில் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

By நீரை மகேந்திரன்

பண்டிகைக் காலம் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் அக்டோபர் தொடங்கி ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசை கட்டி வரும் பண்டிகை நாட்களை கிட்டத்தட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் கொண்டாடுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் இந்த கொண்டாட்ட தினங்களில் தங்களை இணைத்துக் கொள்கின்றன. இந்த பண்டிகை நாட்கள்தான் பல வியாபார நிறுவனங்களுக்கு, சிறு உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார நாட்கள். இந்த நாட்களில் நமது உள்ளூர் சந்தைகளில் நடக்கும் வர்த்தகமும், பணப்புழக்கமும் ஒரு தொழில் இன்னொரு தொழிலை சார்ந்த பிணைப்பு சங்கிலியால் ஆனது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமும் அதுதான்.

ஆனால் இந்த ஆண்டின் பண்டிகை நாட்களில் உள்ளூர் சந்தைகளின் வர்த்தகம் கடுமையாக குறைந்துள்ளது. பல சிறு விற்பனையாளர்கள் விற்பனை குறைந்துள்ளதாக கூறுகின்றனர். முன்பைவிட பணப்புழக்கம் குறைந்துள்ளது என்றும் வருத்தப்படுகின்றனர். இந்த வர்த்தக பின்னடைவுக்கு பின்னால் இ-காமர்ஸ் நிறுவனங்களை கைகாட்டுகின்றனர். அது உண்மையும்கூட.

வழக்கத்தைவிட இந்த பண்டிகைக் காலத்தில் சகட்டுமேனி விளம்பரங்கள், சலுகைகள் மூலம் இறங்கி அடித்திருக்கின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். சமீபத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்த இந்திய சில்லரை வர்த்தகர்களின் கூட்டமைப்பு இகாமர்ஸ் நிறுவனங்களின் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்திய சில்லரை வர்த்தகத் துறையில் முக்கிய பெரிய குழுமமான பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி, சில்லரை வர்த்தகத் துறையின் அடித்தளத்தை, குறிப்பாக முறைப்படுத்தப்பட்ட நேரடி சில்லரை வர்த்தகம் இடெயில் நிறுவனங்களால் பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிரடியாக சலுகைகளை தள்ளுபடிகளை அறிவித்து விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இந்த விதிமுறைகளை மீறிய விளம்பரங்களால் நேரடி சில்லரை வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று இந்திய அனைத்து வர்த்தகர்களின் கூட்டமைப்பும் கூறியுள்ளது.

தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகள்படி இகாமர்ஸ் நிறுவனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருட்களின் அல்லது சேவைகளில் விலை குறைப்பு செய்யக்கூடாது. நேரடி சில்லரை வர்த்தகச் சந்தையில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. ஆனால் இந்த விதிமுறைகள் எதையும் ஆன்லைன் நிறுவனங்களான அமேசன், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.

100 சதவீத எப்டிஐ

இந்த ஆண்டு தொடக்கத்தில் இ-காமர்ஸ் சில்லரை வர்த்தகத் துறையில் 100 சதவீதம் நேரடியான அந்நிய முதலீட்டை திரட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான விதிமுறைகளில் முக்கியமானது இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது மொத்த விற்பனையில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக ஒரே விற்பனையாளரையோ அல்லது அவரது குழுமம் சார்ந்த நிறுவனத்துக்காகவோ இருக்கக்கூடாது.

இந்த முக்கியமான கட்டுப்பாட்டுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் பல உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு ஆன்லைன் சந்தையில் தளத்தை அமைத்து கொடுத்துள்ளன இந்த நிறுவனங்கள். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்ட நேரடி சில்லரை வர்த்தக சந்தையை பிடிப்பதற்கு அவர்கள் வழங்கும் தள்ளுபடிகள், சலுகைகள் மட்டுமே காரணமல்ல; வாடிக்கையாளர்களின் தேர்வும் சுதந்திரமும், நுகர்வு அனுபவத்தையும் கொடுக்க முனைப்பு காட்டுகின்றன. அதனடிப்படையில் இந்தியா முழுவதிலிருந்தும் உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்புகளை ஒருங்கிணைக்கின்றன. முக்கியமாக ஒரே இடத்தில் வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன.

10 கோடி வாடிக்கையாளர்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்கள் 10 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பிளிப்கார்ட் இந்த அளவை எட்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் அமேசான், ஸ்நாப்டீல் ஷாப்குளூஸ், இபே, ஜபாங் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாடிக்கையாளர்கள் யாவரும் நேரடி சில்லரை வர்த்தகத்தின் வாடிக்கையாளர்கள் என்பது நமக்கு தெரிந்ததே. இதற்கிடையில் பிளிப்கார்ட் நேரடி விற்பனையிலும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஆன்லைன் மூலமான விற்பனை அதிகரித்துள்ளதும் கவனிக்க வேண்டும். 2011 டிசம்பர் முதல் 2015 டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த துறையின் வளர்ச்சி 30 சதவீதம்தான். ஆனால் 2015 டிசம்பருக்கு பிறகு இதன் வளர்ச்சி 65 சதவீதமாக உள்ளது. டிசம்பர் 2015ல் ரூ.1,25,732 கோடியாக இருந்த ஆன்லைன் சந்தை மதிப்பு, 2016 டிசம்பருக்குள் ரூ.2,11,005 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய அளவில் முக்கிய எட்டு பெரு நகரங்களிலும் உள்ள 16 முதல் 34 வயது இடையிலான பிரிவினரில் பெருன்பான்மையானவர்கள் ஆன்லைன் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என நான்கு நகரங்களில் 26 சதவீதம் பேரும், இதர நகரங்களில் இருந்து 29 சதவீதமும், சிறு நகரங்களில் 16 சதவீதம் பேரும் ஆன்லைன் சந்தைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர் என்கிறது ஆய்வுகள். முறைப்படுத்தபட்ட நேரடி சில்லரை வர்த்தக தொழிலின் 25 சதவீத சந்தையை 2020-ம் ஆண்டுக்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பிடித்துவிடும் என்கிறது கூகுள் மற்றும் ஏடி கிரானே நடத்திய ஆய்வு.

கேஷ் ஆன் டெலிவரி

பல ஆன்லைன் நிறுவனங்கள் ‘கேஷ் ஆன் டெலிவரி’ வாய்ப்பை வழங்குகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு எல்லை யில்லா சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ஒரு பொருளை பல ஆன்லைன் சந்தைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்கவும், கையில் பணம் இல்லையென்றாலும் அவற்றை வாங்கும் வாய்ப்பையும் வழங்குகின்றன. ஆரம்பத்தில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மட்டுமே ஏற்றுக் கொண்ட ஆன்லைன் சந்தையில் இப்போது கேஷ் ஆன் டெலிவரி 76 சதவீதமாக உள்ளது. கிரெடிட், டெபிட் கார்டுகளின் சதவீதம் இப்போது 10 சதவீதத்துக்குள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டர்நெட்

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சுமார் 35 கோடி மக்களிடம் இணைய தொடர்பு உள்ளது. அதில் 13 கோடி மக்கள் சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ளனர். சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் சுமார் 10 கோடி பேர் சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கின்றார் என்று 2015ல் ஒரு ஆய்வு தெரிவித்தது. 120 கோடி மக்கள் கொண்ட மாபெரும் சந்தையாக இருந்தாலும், 20க்கும் மேற்பட்ட மொழிகள் கொண்ட சிக்கலான பண்பாடு, பிராந்திய பழக்கங்களை கொண்டதாக இருந்தாலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு இதுவும் காரணம்.

முறைப்படுத்தப்பட்ட நேரடி சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்களது உத்தியை மாற்ற வேண்டிய நேரம் இது. வர்த்தகத்தில் தாக்கம் செலுத்துகின்றன என்று இ-டெயில் நிறுவனங்களை குறைகூறிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் ஆன்லைன் கடைகள் வெற்றி பெறுவதற்கு சலுகைகள் மட்டுமே காரணமல்ல; மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனநிலை, தொழில்நுட்பம் போன்றவையும் காரணமாக உள்ளன.

சில்லரை வர்த்தகம் மற்றும் இகாமர்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியினால் நேரடி சில்லரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த துறையினரின் வருத்தம். உண்மையில்லாமலும் இல்லை. இந்த பண்டிகைக்காலம் அதை தீவிரமாக உணர்த்தியுள்ளது. இடெயில் நிறுவனங்கள் மற்றும் நேரடி சில்லரை வர்த்தக தொழிலுக்கு இடையில் சீரான வர்த்தகத்தை நிலைநாட்டும் கொள்கை கள் உடனடியாக வகுக்கப்பட வேண்டி யது அவசியம் என்பதையும் இந்த பண்டிகைக் காலம் உணர்த்தியுள்ளது.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்