உன்னால் முடியும்: மரியாதை கொடுத்த மதிப்பு கூட்டு தொழில்

By நீரை மகேந்திரன்

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை விவசாயி. இப்போது பல கோடி பரிவர்த்தனை செய்யும் தொழில் முனைவர். தென்னையில் மதிப்புக் கூட்டு தொழிலில் இறங்கிய பிறகு இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்கிறார். விவசாயியாக இருந்த காலத்தில் கடன் தராத வங்கிகள் இப்போது லட்சக்கணக்கில் கடன்தர தயாராக இருக்கின்றன. இதுதான் மதிப்புக் கூட்டு தொழிலில் நான் கற்றுக் கொண்ட பாடம் என்கிறார். தேங்காயின் மதிப்பு கூட்டு பொருளான தேங்காய் பவுடர் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

குடும்பத் தொழிலே விவசாயம்தான். அப்பா கர்நாடகாவுக்கு வேலைக்குச் சென்று செட்டிலானவர். 8-வது வரைதான் படித்தேன். நானும் பதினைந்து வயதில் விவசாய வேலைகளில் இறங்கியவன். தேங்காய், இளநீர் மொத்த வியாபாரிகளுக்கு காய்களைப் பறித்து அப்படியே கொடுத்து விடுவோம். பராமரிப்பு, ஆட்கள் செலவு எல்லாம் போக கணக்கு பார்த்தால் எதுவும் மிச்சமிருக்காது.

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் நடந்தபோது தப்பித்து சொந்த ஊருக்கு வந்தோம். எங்களுக்கு அங்கு விவசாய நிலங்கள் இருந்ததால் இங்கும் இருக்க முடியாது, அங்கு சென்றும் தங்க முடியாது. இது போன்ற சூழ்நிலையில்தான் இப்படியே இருப்பதைவிட புதிய தொழில் முயற்சிகளில் இறங்க வேண்டும் என திட்டமிட்டோம்.

நாங்கள் கர்நாடகாவில் இருந்தபோது அங்கு ஒரு தேங்காய் பவுடர் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தேங்காய் சப்ளை செய்து கொண்டிருந்தோம். அவர்கள் தேங்காய் பவுடர் எடுத்து ஏற்றுமதியும் செய்து வந்தனர். எனக்கு தேங்காய் குறித்து நன்றாக தெரியும் என்பதால் அந்த தொழிலை செய்ய திட்டமிட்டேன். பொள்ளாச்சியில் நஷ்டம் காரணமாக மூடிக் கிடந்த ஒரு தேங்காய் பவுடர் தயாரிக்கும் ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தலாம் என முடிவு செய்தேன்.

இது போன்ற வேலைகளுக்கு தென்னை வாரியம் உதவி செய்கிறது என்பதை அறிந்து கொண்டு தமிழ்நாடு தென்னை வாரிய அதிகாரிகளை அணுகி னேன். அவர்களிடமிருந்து முறையான உதவியும் பயிற்சியும் கிடைத்தது. மேலும் வங்கிக் கடன் கிடைக்க வழியும் ஏற்பட்டது. 2005-ல் இந்த தொழிலைத் தொடங்கினேன்.

தேங்காய் பவுடர் ஏற்றுமதி வாய்ப்பு கள் குறித்து ஏற்கெனவே தெரியும் என்றாலும் உடனடியாக ஏற்றுமதியில் இறங்கவில்லை. முதலில் மொத்த விற் பனைதான் செய்து வந்தேன். நிறுவனம் தொடங்கி இரண்டு மூன்று ஆண்டுகளில் நல்ல நிலைமை உருவானதும் குத்தகைக்கு எடுத்த அந்த இடத்தையே சொந்தமாக வாங்கிவிட்டோம். 2011-ல் தான் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தேன்.

இப்போது நாங்களே பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும் மொத்த விற்பனையாளர்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கிறோம். இந்த தேங்காய் பவுடர்களுக்கு வட இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. இப்போது 60 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளோம். தவிர எனது மகள் அருண்யா பிடெக் ஐடி படித்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக தொழிலில் உதவி வருவதுடன், தனியாக ஒரு தேங்காய் பவுடர் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஒரு டன் உற்பத்தியில் இறங்கி இன்று ஒரு நாளைக்கு சுமார் 15 டன் வரை உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.

படிக்கவில்லையே நமக்கு என்ன தெரியும் என்று யோசிக்காமல், கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் நமக்கான தொழிலை உருவாக்கிக் கொள்ள முடியும். தொழில்தான் எனக்கு எல்லாம் கற்று கொடுத்தது. ஹிந்தி, மலையாளம் தெலுங்கு, கன்னடம் என இதர மொழிகளையும் எனக்கு தொழில்தான் கற்று கொடுத்தது. விவசாயியாக இருந்த காலகட்டத்தில் எனது வாழ்க்கை முறைக்கும், இப்போது தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிற காலத்தில் வாழ்க்கை முறைக்கும் பல மடங்கு வித்தியாசம் உள்ளது.

இப்போதும் விவசாயிகளாக உள்ளவர்களின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லைதான். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் விவசாயிகள் மதிப்பு கூட்டு தொழில்முனைவர்களாக உருவாக வேண்டும். அதுதான் எனக்கு மரியாதையையும், அடையாளத்தையும், இந்த வாழ்க்கையும் கொடுத்துள்ளது என்றார். விவசாயிகள் நிலைமை மாற இவரது அனுபவம் நல்ல பாடம்.

- நீரை மகேந்திரன்
maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

50 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்