காபி டே-யின் புதிய அத்தியாயம் மாளவிகா!

By எம்.ரமேஷ்

அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யம். அதன் மீதான 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை. அதை சமாளிக்க வழி தெரியாமல் கணவர் மேற்கொண்ட தற்கொலை நிகழ்வு. மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இத்தகைய நிகழ்வுகள் பேரிடியாக இறங்கியிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தொழில் சாம்ராஜ்யம் அவ்வளவுதான், அப்படியே திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டு வெளியேறிவிடுவார் என நினைத்த பல்லாயிரக்கணக்கானோரின் எண்ணங்களைத் தகர்த்து அந்த தொழில் சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்துள்ளார் மாளவிகா ஹெக்டே.

காபி டே என்ற மாபெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் அவரது கணவர் வி.ஜி. சித்தார்த்தா. கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மத்தியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணாவின் மகள்தான் மாளவிகா ஹெக்டே. காபி டே உருவாக்கம் எந்த அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியதோ அதே அளவுக்கு அது சரிவிலிருந்து மீண்டு எழுந்ததும் கார்ப்பரேட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் எழுச்சி பெண்களின் மன வலிமைக்கும், தைரியம், துணிச்சலுக்கும் உத்வேகமளிக்கும் என்பது நிச்சயம்.

உருவானது ஓர் சாம்ராஜ்யம்

1990-களின் பிற்பாதியில் காபி ரெஸ்டாரென்ட் கலாச்சாரத்தில் புதிய அத்தியாயத்தை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியது காபி டே என்றால் அது மிகையல்ல. தங்களது சொந்த காபி தோட்டத்தில் விளைந்த காபிக் கொட்டைகளை பதமாக வறுத்து மிக அருமையாக காபி தயாரித்து அதை சுவைபட அளித்ததில் காபி டே-யின் பங்கு பிரத்யேகமானது. அதுவே அதன் பிரபலத்துக்கும் காரண
மாக அமைந்தது. ரெஸ்டாரென்ட்களின் வடிவமைப்பு, அதில் உள்ள நாற்காலிகள் மற்றும் மேஜைகளின் பிரத்யேக வடிவமைப்பு ஆகியவையும் பலரை ஈர்த்தது. 1996-ம் ஆண்டில் பெங்களூருவில் முதலாவது காபி டே ரெஸ்டாரென்ட் தொடங்கப்பட்டது. அந்நாளில் சாதாரணமாக காபி விலை ரூ.5 ஆனால் காபி டேயில் ஒரு கோப்பை காபியின் விலை ரூ.25. தொழில் ரீதியிலான சந்திப்புகள், வார இறுதி நாள்களில் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க மிகச் சிறந்த இடமாக காபி டே மாறியதுதான் அதன் வெற்றியின் ரகசியம். 15 ஆண்டுகளில் அதாவது 2011-ல் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேலான ரெஸ்டாரென்ட்களோடு அது செயல்பட்டது.

சரிந்தது சாம்ராஜ்யம்

காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது, அதைப்போல காபி டே சந்தித்த ஏற்றம் ஒரு கட்டத்தில் சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. காபி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சித்தார்த்தாவே கலங்கிப் போகும் அளவுக்கு நிறுவன கடன் சுமை கை மீறிப்போனது. கடன் சுமை ஒருபுறம், முதலீட்டாளர்களின் நெருக்குதல் மறுபுறம் அனைத்துக்கும் மேலாக வருமான வரித்துறையினரின் கெடுபிடிகள் என பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளான சித்தார்த்தா, மிகவும் மோசமான முடிவைத் தேர்ந்தெடுத்தார். நேத்ராவதி ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கார்ப்பரேட் உலகை உலுக்கியது.

மீட்டெடுக்கப்பட்டது சாம்ராஜ்யம்

கணவரின் உடலைக் காணக் கூட திராணியின்றி அழுதபடியே விலகி ஓடிய மாளவிகாவைக் கண்டு கலங்காதவர்கள் இருக்கவே முடியாது. அன்று அலறித் துடித்து கலங்கிப் போன மாளவிகாதான், தனது கணவரின் சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் தன்னந்தனியாக. கணவர் இருந்த காலத்தில் பொறுப்புகள் ஏதுமில்லாத இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருந்த அவர் நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரம் பணியாளர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் சிறிதும் அசராமல் தொடர்ந்து உழைத்து பிரச்சினைகளை உணர்ந்து அதற்கு நிதானமாக தீர்வு கண்டதன் மூலம் கடன் சுமையை ரூ.7,200 கோடியிலிருந்து ரூ.1,731 கோடியாகக் குறைத்துள்ளார்.

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடனேயே தனது பணியாளர்கள் 25 ஆயிரம் பேருக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக கடிதம் எழுதிய மாளவிகா, அதில் நிறுவனத்தின் கடன் சுமையை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படியே நிறுவனத்தின் சில சொத்துகளை விற்றும், சில முதலீடுகளை மேற்கொண்டதன் மூலம் ஊழியர்களிடையே நம்பிக்கையை விதைத்தார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் பல்வேறு புதிய முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். வருமானத்தை அதிகரிக்க காபியின் விலையை அவர் உயர்த்தவேயில்லை. மாறாக வருமானம் தராத ரெஸ்டாரென்ட்களை அவர் மூடினார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் உரிய வழிமுறைகளை முறையாக பின்பற்றி ரெஸ்டாரென்ட்கள் செயல்படுவதில் அவர் உறுதியாக இருந்தார். இப்போது நாடு முழுவதும் 572 காபி டே ரெஸ்டாரென்ட்கள் லாபகரமாக செயல்படுகின்றன. இது தவிர 36 ஆயிரம் காபி விநியோகிக்கும் இயந்திரங்கள் பல்வேறு நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக உயர் ரக அராபிகா காபிக் கொட்டை ஏற்றுமதியிலும் அவர் கவனம்செலுத்தினார். 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளையும் இந்த காபி ரகத்துக்கு வெளிநாடுகளிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிட்டியது.

இன்று காபி டே- நிறுவனத்தின் புதிய அடையாளமாக பரிமளிக்கிறார் மாளவிகா. மிகவும் பிரபலமான காபி டே-வுக்கு புதிய முகம், அது வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்த பெண்மணியின் வெற்றித் திருமுகம். பலருக்கு உத்வேகம் அளிக்கும் இரும்புப் பெண்மணியாகத் திகழும் மாளவிகாவை பாராட்ட வார்த்தைகள் ஏது!

தொடர்புக்கு: ramesh.m@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்