இந்தியா பைக் வாரம்!

By செய்திப்பிரிவு

தலைப்பைப் பார்த்தவுடன் இது ஏதோ டி.வி. விளம்பர வாசகம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் பைக் பிரியரா, நீண்ட தூர பயணங்களை விரும்புபவரா, அப்படியெனில் இந்த பைக் வாரம் பற்றிய தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா பைக் வாரம் (ஐபிடபிள்யூ) நான்காவது ஆண்டாக கோவாவில் சமீபத்தில் (பிப்ரவரி 19 மற்றும் 20-ம் தேதி) நடந்து முடிந்துள்ளது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்து மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலிருந்தும் பைக் பிரியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வாக சர்வதேச அளவில் இது பிரபலமாகி வருகிறது. செவன்டி ஈவன்ட் மீடியா குழுமம் (எஸ்இஎம்ஜி) இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடத்தியுள்ளது.

இந்தியா பைக் வாரம் மோட்டார் சைக்கிள் பிரியர்களின் சொர்க்க புரி என்று சொன்னால் அது மிகையல்ல. மோட்டார் சைக்கிளைப் பற்றியும், விதம் விதமான மோட்டார் சைக்கிளைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அதை ஓட்டுபவர்களின் அனுபவத்தைத் தெரிந்து கொள்ளவும் இது ஒரு வாய்ப் பாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இதில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதிலிருந்தே இதற்கு மவுசு அதிகரித்து வருவதை புரிந்து கொள்ள முடியும்.

போட்டிகளில் பங்கேற்பது ஒரு வகை என்றால் இதை பார்ப்பதே மகிழ்ச்சியான அனுபவம்தான். மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கு இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை அளித்தது நிச்சயம். ராக் இசை நிகழ்ச்சி, பைக் பிரியர்கள் தங்களது ரசனைக்கேற்ப வடிவமைத்த மோட்டார் சைக்கிள்களின் கண்காட்சி, சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திய இளைஞர்கள் என விழாவே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

முதல்நாள் இந்தியா ஹாக் ராலி எனும் பைக் பேரணி பிற்பகலில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து டிஎஸ்கே பெனெலி மோட்டார் சைக்கிள் பேரணியும், அதையடுத்து டிரையம்ப் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பும், இறுதியாக டுகாடி பைக் வீரர்களின் அணி வகுப்பும் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது. பைக்கில் சாகசம் செய்வோரின் சாகச நிகழ்ச்சி, ஒற்றை சக்கர சாகச பேரணி உள்ளிட்டவையும் தொடக்க நாள் நிகழ்வாக நடைபெற்றன. மாலையில் இந்தியா பைக் வார திரைப்பட விழாவும் இடம்பெற்றது.

டிஎஸ்கே பெனெலி, டிரையம்ப், டுகாடி, ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களின் புதிய மோட்டார் சைக்கிள்களும் இங்கு அறிமுகமாயின.

இரண்டாம் நாளன்று பழங்கால மோட்டார்சைக்கிளின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. மோட்டார் சைக்கிளில் உலகை வலம் வருவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வீரர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

சாகச பயணம் அதாவது மலை, சறுக்கு தளம், காடு போன்றவற்றில் ஓட்டும் திறனை சோதிக்கும் டர்டி 20 என்டியூரோ போட்டியும் நடத்தப்பட்டது.

அதிக ஓசையெழுப்பும் மோட்டார் சைக்கிளுக்கான பந்தயமும் நடைபெற்றது. காதைப் பொத்திக் கொண்டு இதை ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் பலர்.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பைக் வாரம் என்பது டெல்லிவாசிகள் மட்டுமோ அல்லது மும்பையைச் சேர்ந்தவர்கள் மட்டுமோ அல்லது கோவாவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பங்கேற்கும் நிகழ்ச்சியல்ல. மராத்தியர்களுக்காகவோ அல்லது வங்காளிகளுக்காகவோ அல்லது தமிழர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியல்ல. இது மோட்டார் சைக்கிள் பிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.

இங்கு மொழி, இன, நாடு என்ற பாகுபாடு கிடையாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளது இதைத்தான் நிரூபித்தது. இவர்கள் அனைவருமே மோட்டார் சைக்கிள் பிரியர்கள் என்பதை பறைசாற்றுவதாக இந்த நிகழ்வு அமைந்தது.

அடுத்த ஆண்டு எப்போது இந்த பைக் வாரம் நடக்கும் என்ற ஏக்கம் பலரிடமும் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்