உன்னால் முடியும்: வித்தியாசம் காட்டினால் வெற்றி நிச்சயம்

By நீரை மகேந்திரன்

சென்னை, பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. பிஎஸ்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. சொந்த தொழில் செய்துவரும் தனது தந்தைக்கு உதவும் பொருட்டு அவரது தொழிலுக்குத் தேவையான அட்டை பெட்டிகளைத் தயாரிக்க இறங்கியவர். தற்போது பல வெளி நிறுவனங்களுக்கும் தயாரித்து வருகிறார்.

பீட்சா, பாப்கார்ன், மருந்துகள் அடைக்க என பல வடிவிலான சிறிய அட்டைப் பெட்டிகளைத் தயாரித்து வருகிறார். தொழிலில் இறங்கியபோது இவருக்கு வயது 23. கடந்த ஏழு ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோராக வெற்றிகரமாக நிலைத்து நிற்கிறார். அவரது தொழில் அனுபவத்தை இந்த வாரம் ``வணிகவீதி’’ பகுதிக்கு பகிந்து கொண்டார்.

படித்து முடித்தபின், சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் யோசனை. ஏனென்றால் எனது குடும்பத்தினர் அனைவரும் சுயதொழில்தான் செய்து வருகின்றனர்.

முதலில் அப்பாவுக்கு உதவி செய்யத்தான் சென்றேன். அப்பா செய்து வரும் தொழிலுக்கு சிறு சிறு அட்டை பெட்டிகளை வெளியிலிருந்து வாங்கி வந்தார். இந்த தொழிலை செய்தால் அப்பாவுக்கு உதவியாக இருக்குமே என்கிற யோசனையோடு தனியாக இறங்கினேன்.

எங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தினரிடமே சில மாதங்கள் வேலைக்குச் சேர்ந்து தொழிலைக் கற்றுக் கொண்டதுடன், சிறு தொழில் பயிற்சிகளும் எடுத்தேன். முதலில் தேவைக்கு ஏற்ப வெளியில் ஆர்டர் கொடுத்து வாங்கி பிறகு தொழில் பழகியதும், வங்கி கடனுதவி மூலம் இயந்திரம் போட்டேன்.

வீட்டில் ஊக்கம் கொடுத்தனர் என்றாலும், எல்லாமே எனது சொந்த முயற்சிகள்தான். ஒருநாள் சோர்வாக இருக்கிறது என்று வீட்டில் படுத்தாலும் அப்பாவோ அம்மாவோ விரட்டுவார்கள். நீ விரும்பி மேற்கொள்ளும் தொழில் இது. சொந்த தொழிலில் சோர்வு என்கிற பேச்சே இருக்கக்கூடாது என்று உற்சாகம் கொடுத்து வேலைக்கு அனுப்பிவிடுவார்கள்.

என்னைவிட மூத்தவர்கள், அனுபவசாலிகளிடம் வேலை வாங்க வேண்டும். மார்க்கெட்டிங் வேலைகளையும் கவனிக்க வேண்டும். இதெல்லாம் சவாலான விஷயம்தான். அதுவும் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் இந்த தொழிலில் பெண் தொழில்முனைவோராக ஈடுபடுவது இந்த சவால்களை மேலும் அதிகமாக்கியது.

தரமாகவும் குறித்த நேரத்திலும் டெலிவரி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த துறையில் முக்கியமானது. எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் அவர்களிடமிருந்து வித்தியாசப் படத்தான் செய்வோம். வித்தியாசம் காட்ட வேண்டும் அப்போதுதான் நிலைக்க முடியும். அனுபவங்களே இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது.

காலையில் சப்ளை செய்ய வேண்டிய ஆர்டர்களுக்கு நைட் ஷிப்ட் வேலை செய்து கொண்டிருப்பார்கள், மிஷின் ரிப்பேர் ஆகிவிடும். எழுந்து ஓடுவேன்.

பொருளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள். சின்ன பெண் என்பதால் கொஞ்சம் சத்தம் போட்டு பேசுவார்கள். இந்த தொழிலிலேயே பல வருடங்களாக இருக்கும் ஆண்களின் அவதூறுகள் என எல்லாவற்றையும் கடக்க வேண்டும்.

இது போன்ற சமயங்களில் வீட்டினர் பக்கபலமாக இருந்தனர் சொந்த தொழிலில் இவையெல்லாம் நடக்கும், அதை சமாளிக்க கற்றுக்கொள் என்பதுதான் அப்பாவின் அறிவுரை.

திருமணத்துக்கு பிறகு கூடுதல் பொறுப்புதான். வீட்டு வேலைகளை தட்டி கழிக்கவில்லை என்றால் எங்களுக்கு சிக்கல் இல்லை என்று கணவரது வீட்டிலும் சொல்லிவிட்டனர். அதனால் தொழில் தடைபடவில்லை.

குழந்தை பிறந்த பிறகு இன்னும் அதிக வேலை பளு... ஆனாலும் பத்து பேருக்கு வேலை கொடுத்து வருகிறேன், சொந்தமாக வருமானம் வருகிறது, பத்துபேர் மதிக்கும் தொழில்முனைவர் என்கிற தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள் என்னை சோர்ந்து போகவிடாமல் இயக்குகிறது. குழந்தையை தூங்க வைக்க இரவு பணிரெண்டு மணியாகும், என்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து சாப்பாடு செய்வது முதல் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பி விடுவேன்.

நேரடி ஆர்டர்கள் தவிர ஆன்லைன் மூலமானவும் ஆர்டர்கள் பிடிக்கிறேன். பெரிய நிறுவனங்கள், பாப்கார்ன் பெட்டிகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் சில அரசு துறை நிறுவனங்களுக்கான தொடர்ந்து சப்ளை செய்து வருகிறேன்.

பெண் என்பதற்காக எந்த சலுகைகளும் எதிர்பார்ப்பதில்லை. தொழில் கொடுக்கும் தன்னம்பிக்கை என்னை மேலும் பல முயற்சிகளை எடுக்க வைக்கும் என்று நம்பிக்கையோடு பேசினார். இவரது உழைப்பு இவருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கட்டும். பலருக்கு பாடமாகட்டும்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

25 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

49 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்