உன்னால் முடியும்: வாடிக்கையாளர்களே கற்றுக் கொடுத்தனர்

By நீரை மகேந்திரன்

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். பள்ளிப் பருவத்தில் ஆர்வமாக தொடங்கிய அலங்கார மீன் வளர்ப்பு இன்று அவரது முழு நேரத் தொழிலாகியுள்ளது. அடை யாறு பகுதியின் மையமான கஸ்தூரிபா நகரில் வாடகைக் கட்டிடத்தில் கடந்த எட்டு வருடங்களாக அலங்கார மீன் வளர்ப்பு விற்பனை மையத்தை நடத்தி வருகிறார். இந்த துறையில் ஒரு தொழில் முனைவோராக வளர்ந்துள்ள அவரது அனுபவத்தை இந்த வாரம் ``வணிக வீதி’’யில் பகிர்ந்து கொள்கிறார்.

அலங்கார மீன்களை வளர்க்கும் கண்ணாடி தொட்டியை எப்படி ஒட்டுவது என்பதுகூட ஆரம்பத்தில் தெரியாது, ஆனால் இன்று கான்செப்ட் அடிப்படையில் அலங்கார மீன் தொட்டியை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்றால் எனது வாடிக்கையாளர்கள்தான் காரணம். தொழில் முனைவோராக அவர்களுக்கு எனது முதல் நன்றி என்று தனது அனுபவத்தை ஆரம்பித்தார்.

பிளஸ் 1 படிக்கும்போது எனது தம்பி வீட்டுக்கு ஒரு சிறிய மீன் தொட்டியை வாங்கி வந்தார். அதை அவ்வப்போது பராமரிப்பேன். தம்பி படிக்கவில்லை என்பதால் அலங்கார மீன் வளர்ப்பு தொட்டியை அக்கம் பக்கத்தினருக்கு வாங்கிக் கொடுப்பது, ஆலோசனை சொல்வது என விளையாட்டுத்தனமாக இந்த துறையில் எங்களையுமறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.

நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது தம்பி சிறிய அளவில் ஆரம்பித்த அலங்கார மீன் வளர்ப்பு விற்பனையில் பெரிய விற்பனையில்லை. நஷ்டமும் அடைந்தார். அப்போதெல்லாம் எனக்கு மீன் தொட்டி கண்ணாடியை ஒழுங்காகக் ஒட்டக்கூட தெரியாது. பினிஷிங் இருக்காது. தொட்டியில் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்க வேன்டும், அதற்கான உணவுகள் என்னென்ன? வாங்கி விற்பதில் ஏற்படும் நஷ்டங்கள் என ஓடிக் கொண்டிருந்தது.

பிகாம் முடித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ தொலைவழிக் கல்வியில் படித்துக் கொண்டே ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இந்த தொழிலை பிரதானமாக யோசிக்கவில்லை. எம்பிஏ முடித்திருந்ததால் வேறு நிறுவ னங்களுக்கு வேலைக்கு செல்வதும் திட்டமாகத்தான் இருந்தது.

அதே நேரத்தில் எனது ஓய்வு நேரம், அலுவலகத்தில் கிடைக்கும் நேரங்களில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த செய்திகளை இணையத்தில் தேடி தெரிந்து கொள்வதும் வழக்கமாக இருந்தது. இதற்கு காரணம் வாடிக்கையாளர்கள்தான். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஒவ்வொன்றாக நம்மிடம்தான் கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல, தெளிவுபடுத்த வேண்டும் என்றால் அந்த விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் நேரத்தை ஒதுக்குவேன். இந்த நேரத்தில்தான் ஐடி துறை நெருக்கடி ஆரம்பித்தது.

இதனால் வேலையிலிருந்து விலகி அலங்கார மீன் வளர்ப்பையே தொழிலாக எடுத்துச் செய்யலாம் என முழு முயற்சியோடு இறங்கிவிட்டேன்.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு இந்த தொழில் சாதாரணமாகத்தான் தெரியும். ஒரு தொட்டி, கொஞ்சம் மீன், தண்ணீர் மாற்றுவது, மீன் உணவு இவைதான் என்று வாடிக்கையாளர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் அவ்வளவு மிகுந்த வாய்ந்த தொழில் இது. பத்து ரூபாய் மீன் குஞ்சு முதல் பல லட்சம் வரையிலான அலங்கார மீன் வகைகள் உள்ளன. தவிர தொட்டியில் வளர்வது ஒரு உயிர், அது நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப சில முறைகளும் உள்ளன. மீனின் வகைக்கு ஏற்ப தொட்டியின் அளவு, நீந்துவதற்கு ஏற்ற தண்ணீர் அளவு, ஆக்சிஜன் என எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு உள்ளது.

தற்போது இந்த அலங்கார மீன் வளர்ப்பு முறையில், கான்செப்ட் முறையில் அமைத்து கொடுப்பது வளர்ந்து வருகிறது. வீட்டுக்குள்ளேயே சிறிய பூங்கா போன்ற அமைப்பில் அலங்கார மீன்களை வளர்க் கலாம்.

செல்ல பிராணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்த முறையை விரும்புகின்றனர். கிட்டத்தட்ட ஒரு இயற் கையான சூழலில் மீன்கள் இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கேட்கும் அமைப்பில் செய்து கொடுக்கிறேன். இதில் ஐந்து பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். தொழிலில் அடுத்த கட்டமாக சென்னை நீலாங்கரையில் பெரிய அளவில் ஒரு விற்பனை மையத்தை திறப்பதற்கான முயற்சிகளில் உள்ளேன்.

நஷ்டம்தான் நமது அனுபவம். அடுத்த முறை சரியாகச் செய்ய அதுதான் கை கொடுக்கிறது. இந்த துறையில் மேலும் மேலும் வளர நான் செய்த தவறுகளும், அடைந்த நஷ்டமுமே எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறது என்றார் இம்ரான். உண்மைதான் விழுவது எழுவதற்குத்தான் என்பதுதானே தொழில் முனைவோர்களுக்கு அடிப்படை பாடம்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்