குறள் இனிது: வார்த்தை தவறலாமா குமார்..?

By சோம.வீரப்பன்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (குறள்: 538)



எனது நண்பர் ஒருவருடன் அவரது வங்கியின் திருச்சி கோட்ட அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் அங்கு கடன் வழங்கும் துறையில் இருந்தவரிடம், தான் 10 நாட்கள் முன்பு கிளையிலிருந்து அனுப்பிய விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கொடுத்தாயிற்றா என்று கேட்டார்.

நீங்கள் விரும்புவதால் அவரை குமார் என்றே அழைப்போம். எங்களை நிமிர்ந்து பார்க்காமலேயே உட்காருமாறு சைகை செய்தார் குமார்!

நான் பொறுமை இழந்து கிளம்பி விட்டேன். ஒருவழியாய் அவர் நண்பரை என்ன வேண்டும் எனக் கேட்கவே 3 மணி நேரம் ஆகிவிட்டதாம்.

பின்னர் , இனிமேல் தான் அவ்விண்ணப்பத்தை அவர் பார்க்கவே போகிறாரென்றும் புதன்கிழமை வரும்படியும் கேட்டுக் கொண்டாராம்.

எனது நண்பர் புதன் அன்று திருவாரூரிலிருந்து திருச்சி வந்து குமாரைப் பார்க்கப் போனார்.

இம்முறை 1 மணி நேரத்திலேயே குமாருடன் பேச முடிந்ததில் நண்பருக்கு மகிழ்ச்சி. ஆனால் குமாரோ தன்னிடம் பணிபுரியும் ஒரு புதிய அதிகாரிதான் தாமதத்திற்குக் காரணம் என்றும் அடுத்த புதனுக்குள் பரிசீலித்து விடுவதாகவும் கூறினாராம்!

குமார் ஒன்றும் யோசித்துச் சொல்லிய நாளல்ல புதன்கிழமை. வாடிக்கையாளரை அன்று வரச்சொல்லும் முன்பும் சரி, பின்பும் சரி அவர் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

ஏதோ தட்டிக் கழிப்பதற்குச் சொல்லியதுதான் அது!

பின்னர் என்ன? அடுத்த வாரம் அவசியம் முடித்து விடலாம் வாங்க என நண்பரை அனுப்பிவிட்டார்.

தொலைக்காட்சி நெடுந்தொடர் போல நண்பரது படையெடுப்புத் தொடர்ந்தது! இந்தக் குமார் எப்பொழுதும் இது ஆகாது எனச் சொல்லமாட்டார்.

ஒவ்வொரு முறையும் அடுத்த தடவை எல்லாம் இனிதே முடிந்து விடும் என நம்புகிற மாதிரிப் பேசுவார்!

பாவம் வாடிக்கையாளர். தான் சிறுகச் சிறுகச் சாகடிக்கப்படுவது புரியாமல் மீண்டும் மீண்டும் ஏமாறுவார். நம்பகத் தன்மை என்பது பணியிடத்தில் மிகவும் அத்தியாவசியமானது இல்லையா?

ஒரு சங்கிலியின் பலம் அதன் நலிந்த பாகத்தைப் பொறுத்தது என்பார்கள். எந்த நிறுவனத்திலும் சேவை ஒரு கூட்டு முயற்சி தானே!

இந்த வேலையை நாளைக்கு முடித்துத் தருகிறேன் என்றால் எப்பாடு பட்டாவது முடிப்பவர் தானே நல்ல பணியாளர்?

தரம் குறித்தும் நேரம் குறித்தும் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பொழுது நாம் பெரும் வேதனை அடைகிறோம் !

தையல்காரர் சொன்ன தேதியில் கொடுக்காவிட்டால் எவ்வளவு ஏமாற்றமும் கோபமும் ஏற்படுகிறது!

நீங்களே சொல்லுங்கள். நல்லதைச் செய்யாவிட்டால் தவறு; நல்லதைச் செய்வேன் என நம்ப வைத்துவிட்டுச் செய்யாவிட்டால் அதிகத் தவறு இல்லையா?

‘இவரை நம்பி எந்த வேலையையும் கொடுக்க முடியாது எனும் பெயரை வாங்கி விடுங்கள்; பின்னர் ஒருவரும் உங்களைச் சீண்ட மாட்டார்கள்' என்கிறார் பால் தெராக்ஸ்!

போற்றப்பட்ட செயல்களை மறவாது செயல் வேண்டும்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எப்பொழுதும் தாழ்வுதான் என்கிறது குறள்!

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

வணிகம்

19 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்