2016 - கேட்ஜெட்ஸ் ஏற்றம்? ஏமாற்றம்?

By செய்திப்பிரிவு

தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகள் நம்மை வியக்க வைக்கும் அளவு வளர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்புது கருவிகள் வந்துகொண்டே இருக்கின்றன. 2016-ம் ஆண்டு பல்வேறு நிறுவனங்களின் சாதனங்கள் விற்பனையிலும் தொழில்நுட்பத்தில் உச்சத்தை தொட்டன. அவற்றை பற்றி சில தகவல்கள்…



ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஏர்பாட்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்திய சாதனங்கள் தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டன.

இந்த ஆண்டு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் என்ற இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 32 ஜிபி ஸ்பேஸ், தண்ணீர் புகாத வடிவமைப்பு, 2 லென்ஸ் கேமரா என பல சிறப்பம்சங்கள் இந்த புதிய தயாரிப்பில் சேர்க்கப்பட்டிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

வழக்கமாக பயன்படுத்தும் ஹெட்போன் இணைப்புக்கான வசதி இந்த மாடலில் கிடையாது. அதற்கு பதிலாக ஃபோனை சார்ஜ் செய்யும் போர்ட்டில் ஹெட்ஃபோனை இணைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ப்ளூடூத் ஹெட்ஃபோன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் என்ற புதிய ஹெட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியது. வயர்லஸ் ஹெட்ஃபோனான இதனை அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளுடன் இணைத்துக் கொள்ள முடியும். ஐஃபோனில் இருக்கும் செயலியை இதன் மூலமே இயக்க முடியும். இதன் விலை 160 டாலர்கள்.

கேமிரா பிளாஷில் 4 எல்.ஈ.டி லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது இருட்டிலும் பிரகாசமான புகைப்படங்களை எடுக்க உதவும். மேலும், 7 பிளஸ் மாடலில் 2 கேமிரா லென்ஸுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்த ஆப்பிள் தயாரிப்புகள் விற்பனையிலும் கொடிகட்டி பறக்கிறது.



மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஸ்டூடியோ

தொழில்நுட்ப சாதன வர்த்தகத்தில் இந்த ஆண்டின் குறைந்த காலத்தில் அதிகம் விற்பனையானது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஸ்டுடியோ. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் காலாண்டிலேயே 30,000 வரை விற்பனை யாகியுள்ளது. இதுபோன்ற ஸ்டீரியோ சாதனங்களில் ஆப்பிள் ஐ மேக் மிகப் பிரபலம். இதற்கு போட்டியாக களத்தில் குதித்தது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஸ்டூடியோ.

தோற்றத்தில் மிக அழகாகவும் அதே சமயத்தில் தொழில்நுட்பத்தில் நவீனத்தையும் புகுத்தி வடிவமைத்துள்ளது மைக்ரோசாப்ட். 28 அங்குல திரையும் அதை 20 டிகிரி அளவுக்கு மடக்கி கொள்ளும்படி வடிவமைத்தது மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் ஆறாவது தலைமுறை ஐ7 பிராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டிலும் இதன் விற்பனை உயரும் என்பதில் சந்தேகமில்லை.



கூகுள் ஹோம்

வீட்டுச் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் பொருட்களை வெறும் பேச்சின் மூலம் இயக்கும் இந்த கூகுள் ஹோம் என்னும் ஸ்மார்ட் ஹோம் அசிஸ்டென்ட்டில் பல புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பயணத் திட்டங்கள் குறித்தும், வானிலை நிலவரம், செய்திகள், போக்குவரத்து நிலைமை போன்ற பல்வேறு தகவல்களை கேட்டவுடன் உடனடியாக இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் தரும். 6 மாத இலவச யூடூப் ரெட் சந்தாவுடன் கூடிய கூகுள் ஹோம் நவம்பர் மாதம் முதல் 129 டாலர் மற்றும் 299 டாலர் விலையில் கிடைக்கிறது.



கூகுள் பிக்ஸல்

ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அதி நவீன தொழில் நுட்ப ஸ்மார்ட்போன்களை தயாரித்துவந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதற்கு போட்டியாக இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸ்எல் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை கடந்த அக்டோபர் 4-ம் தேதி வெளியிட்டது. இதன் சிறம்பம்சம் கேமிரா. பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸ்எல் ஆகிய இரண்டும் 12.3 மெகாபிக்ஸல் பின்பக்க கேமிராவையும், 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமிராவையும் கொண்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொபைல் கேமிராக்களிலேயே இந்த பிக்ஸல் போன்களே சிறந்தது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்தது.

கூகுளின் பிரத்யேகமான பர்சனல் வாய்ஸ் அசிஸ்டென்ட் முதல்முறையாக இந்த மொபைல் களுடன் இணைத்து வெளியிட்டது.

பிக்ஸல் 2770 எம்ஏஹெச் பேட்டரி திறனும், பிக்சல் எக்ஸ்எல் 3450 எம்ஏஹெச் திறனும் கொண்டது. இந்த இரண்டு மொபைல்களும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 7 மணிநேரங்கள் பயன்படுத்தலாம் என்கிறது கூகுள்.



சாம்சங் நோட் 7

இந்த ஆண்டின் மிகப் பெரிய தொழில்நுட்ப தோல்வி சாம்சங் நோட் 7 ஸ்மார்ட்போன். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனையை எட்டிய சாம்சங், தனது நோட் -7 ஐ, ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி அறிமுகப்படுத்தியது.

முதல் வாரத்திலேயே 25 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்தன. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் இந்த போன்களின் பேட்டரி குறித்த புகார்கள் எழுந்தன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நோட்-7 வெடித்து, தீப்பிடித்த சம்பவங்களால், நோட்-7 மாடலின் விற்பனையை நிறுத்தியது மட்டுமல்லாமல் ஏற்கெனவே விநியோகம் செய்திருந்த 25 லட்சம் போன்களை திரும்ப பெற்றது.

இந்த போனை விமானத்தில் பயன்படுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஆஸ்திரேலி யாவை சேர்ந்த குவான்டாஸ், அபுதாபியை சேர்ந்த எதியாட் உள்ளிட்ட நிறுவனங் கள் உடனடியாக தடை விதித்தன.

அதுமட்டுமல்லாமல் இந்திய விமான நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த விமான நிறுவனங்களும் இந்த போன்களை விமானத்தில் இயக்குவது மற்றும் சார்ஜ் ஏற்றவும் தடை விதித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்