உன்னால் முடியும்: புதியவர்கள் உள்ளே வரவேண்டும்

By செய்திப்பிரிவு

நோய் கண்டறிதல் துறைக்கு தேவை யான உபகரணங்களில் 90% இப்போதும் இறக்குமதிதான் செய்து வருகின்றனர். இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் ஏராளமிருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு களுக்கான சந்தையில்தான் இங்குள்ள பெரு வர்த்தகர்கள் கவனம் செலுத்து கின்றனர். ஆனால் அந்த வர்த்தகர்களோ துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் கணேசன். மருத்துவ ஆய்வகங்களில் மாதிரி சேகரிப்பு குடுவைகள் உள்ளிட்ட நோய் கண்டறிதல் துறைக்குத் தேவையான உபகரணங்களை தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பம்தான். குடும்பத்தில் முதல் பட்ட தாரியும் நான்தான். எம்எஸ்சி பயோ டெக்னாலஜி படித்து முடித்ததும் ஒரு ‘லேப்’பில் வேலை கிடைத்தது. பத்தாண்டு கள் அங்கு பணியாற்றினேன். அந்த அனுபவத்தைக் கொண்டு சொந்தமாக லேப் தொடங்க ஆயத்தமானேன். ஆனால் அதற்கு ரூ. 25 லட்சம் வரை முதலீடு தேவையாக இருந்தது. அப்போது என்னால் அவ்வளவு முதலீடு திரட்ட முடியாத சூழ்நிலையில் லேபுக்கு தேவையான கருவிகள், உபகரணங்களை வாங்கி விற்கலாம் என முடிவெடுத்தேன்.

லேப்-இல் வேலைபார்த்துக் கொண்டே சொந்த தொழிலில் இறங்கினேன். வர்த்தகம் ஓரளவு வளரத் தொடங்கியதும் வேலையிலிருந்து விலகினேன். ஆனால் அதற்கிடையில் எனக்கு உபகரணங்களை அனுப்பும் பெரு வர்த்தகர்களோ இதே பொருட்களை கோவையில் விற்பனை செய்ய பலருக்கும் ஏஜென்சி வழங்க தொடங்கினர். இதனால் எனக்கு விற்பனை குறையத் தொடங்கியது. தவிர எனக்கு நன்றாக அறிமுகமானவர்களோடும் தொழிலில் போட்டிபோட வேண்டிய சூழல் உருவானது. அப்போதுதான் இந்த உபகரணங்களை சொந்தமாக தயாரிக்கும் யோசனை உருவானது.

ஆய்வக அனுபவம், வர்த்தக அனுபவம் இருந்தாலும் இவற்றை தயாரிப்பதற்கான இயந்திரங்களை சீனாவிலிருந்து கொண்டுவர வேண்டும். அதற்கு பதில் அவற்றை நாமே செய்தால் என்ன என தோன்றியது. கோவையில் உள்ள நண்பர்கள் துணையோடு மோல்டிங் இயந்திரங்களை வடிவமைத்தோம். ஆனால் இதற்கான மூலப் பொருட்கள் உரிமையும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஒரு சில மொத்த வர்த்தகர்களிடம்தான் இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட சிலவற்றை இறக்குமதி செய்தோம்.

என்னதான் முயற்சிகள் செய் தாலும் நமது தயாரிப்புகள் சர்வதேச தரத்துக்கு இருக்க வேண்டும். அது தான் இந்த துறையில் முக்கியம். தொடர்ச்சி யாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இது தொடர்பான வேலைகளை செய்தோம். அவ்வப்போதைய முதலீட்டு தேவை களுக்கு நண்பர்களும் உறவினர்களும் உதவிகள் செய்தனர்.

எனது ஆரம்ப முயற்சிகள் எல்லா வற்றுக்கும் கோவையில் உள்ள மைக்ரோ லேபாரட்டரீஸ் இயக்குநர் மணி பக்கபலமாக இருந்தார். அதன் பிறகு கோவையில் உள்ள மருத்துவமனைகள், லேப்களில் கொடுத்தோம். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்பு என்று தயங்கியவர்கள் பிறகு, சர்வதேச தரம், ஒப்பீட்டளவில் குறைந்த விலை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து ஆர்டர்களை கொடுக்கத் தொடங்கினர். இப்போது தமிழ்நாடு, கேரளா என தென்னிந்திய மாநிலங்களில் நெட்வொர்க்கை உருவாக்கியதுடன், ஆர்டர்களுக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளோம். உற்பத்தியை அதிகரிக்கும் ஆட்டோ மேட்டிக் இயந்திரத்துக்கான வடிவமைப்பு செய்து வருகிறோம்.

இந்த துறையில் இறங்குவதற்கு புதியவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஏனென்றால் இப்போதும் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்துவது வெளிநாட்டு தயாரிப்புகள்தான். பயிற்சியும், அனுபவமும் இருப்பவர்கள் தாராளமாக இறங்க வேண்டும். அடிப்படையான விஷயம் புதுமையாக யோசிக்க வேண்டும். ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் நமக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் இழப்புகளுக்கு தாக்கு பிடித்து நிற்க வேண்டும். இது எல்லாவற்றையும் தாண்டிதான் இப்போது ஒரு தொழில் முனைவோராக நிற்கிறேன்.

25 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப் பும், பலருக்கும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளேன். முக்கியமாக சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளுரில் தொழில் நடத்து வது எளிதானதல்ல, அதற்கு முக்கிய காரணம் எங்களது விலை 15% வரை குறைவாக இருக்கிறது. அரசின் கட்டுப் பாடுகள் குறைந்து, ஊக்குவிப்புகள் அதி கரிக்கும்பட்சத்தில் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாகும் தொழிலாக இது இருக்கும் என்கிறார் கணேசன்.





தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்