ஜிஎஸ்டி-யின் முன் உள்ள சவால்கள்

By பெ.தேவராஜ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நாடாளு மன்றத்தில் மிகப் பெரிய விவாதம் நடந்தது. ஜிஎஸ்டி மசோதா குறித்து கடந்த வாரம் மாநிலங்களவையில் 7 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சீதாராம் யெச்சூரி என முக்கிய எம்.பிக்கள் ஜிஎஸ்டி மசோதா கொண்டு வருவது குறித்து மிக அதிகமாக விவாதித்தனர். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 203 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்து ஒருவழியாக மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. 1991-ம் ஆண்டுக்கு பிறகு வரி அமைப்பில் செய்யப்படுகிற மிகப் பெரிய மாற்றம் இது.

ஜிஎஸ்டியின் பின்னணி

2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் முதன்முதலில் நாட்டிலுள்ள மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் ஒரு முனை வரியை கொண்டு வர முயற்சி செய்தது. இதற்காக அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஜிஎஸ்டி மசோதாவை 2010-ம் ஆண்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழு மாநிலங்களுடன் ஆலோசனைகளை நடத்தி தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்தது.

பின்பு 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோ தாவை கொண்டுவரும் பொழுது நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப் பட்டது. மாநிலங்களுக்கான வரியை பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட பேச்சு வார்த்தையால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய விற்பனை வரியிலிருந்து வழங்கு வோம் என்று அறிவித்தது.

அதையொட்டி மாநிலங்கள் ஆதரவு தந்த நிலையில் 2015-ம் ஆண்டு மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

ஜிஎஸ்டி ஏன் வேண்டும்?

நமது நாட்டில் நேரடி வரி, மறைமுக வரி என்று இரண்டு வரி அமைப்புகள் உள்ளன. நேரடி வரி அமைப்பில் வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவை இதன் கீழ் வரும். மறைமுக வரியில் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்டவை அடங்கும். ஒரு பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருவதற்குள் இவ்வளவு வரிகளை செலுத்த வேண்டி இருப்பதால் பொருட்களின் விலை கடுமையாக உயருகிறது. அதுமட்டுமன்றி பல்வேறு நிலைகளில் வரி செலுத்த வேண்டி இருப்பதால் காலதாமதம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சி தடைபடுவதோடு அந்நிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதற்கு இந்த சிக்கலான மறைமுக வரி அமைப்பு தடைக்கல்லாக இருக்கிறது.

இந்த மறைமுக வரி அனைத்தையும் ஒரே வரியாக மாற்றும் பொழுது நாடு முழுவதும் ஒரே வரி முறையை பின்பற்ற முடியும். மாநில அரசு, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒரே வரியாக செலுத்த முடியும். இதனால் தொழில்துறை வளர்ச்சி அடையும்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு பொருட்களின் விலை குறையும். உதாரணமாக எலெக்ட்ரானிக்ஸ், கார்கள் ஆகியவற்றின் விலை குறையும். அதே சமயத்தில் மொபைல் கட்டணங்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் போன்றவை உயரும். இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது ஒரு பொருளை நாம் வாங்கும் பொழுது எவ்வளவு வரி என்பதே தெரியாது. கலால் வரி, செஸ் என பல்வேறு நிலைகளில் வரி விதிப்புகள் இருக்கும். அதனால் நமக்கு எவ்வளவு வரி என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஜிஎஸ்டி கொண்டு வருவதன் மூலம் ஒரு முனை வரி விதிக்கப்படுவதால் பொருளுக்குரிய வரியை தெரிந்துகொள்ளமுடியும். வரி விதிப்பதில் ஒரு வெளிப்படைத் தன்மையை அடைய முடியும்.

அடுத்தது என்ன?

தற்போது ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களைவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதன் பிறகு மாநிலங் களவையில் செய்யப்பட்ட திருத்தங் களை மக்களவை ஏற்றுக் கொள்ள அனுப்பப்படும். திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறிய பின் குறைந்தப்பட்சம் 15 மாநில சட்டப் பேரவைகளில் அரசியல் சாசனத் திருத்தத்தை ஏற்று தீர்மானம் இயற்றிய பின் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பிறகே அமலுக்கு வரும். மத்திய அரசு 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி-யை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் அமலுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சவால்கள்

ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்த மாநில மற்றும் மத்திய பிரதிநிதித்துவத்தோடு கூடிய குழு அரசியல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் திருத்தங்களோடு ஏற்றுக் கொள்ளப்பட 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். இந்த குழு வரி விகிதம், வரிக்குட்பட்ட சரக்குகள், சேவைகள் ஆகியவற்றை பரிந்துரைக்கும். தயாரிப்பு பொருட்களுக்கு குறைந்த வரியும் சேவைகளுக்கு அதிக வரியும் விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.அரசியல் சாசன திருத்தத்தைத் தொடர்ந்து மத்திய ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டம், 29 மாநிலங்களிலும் அந்தந்த சட்டப் பேரவைகளால் மாநில ஜிஎஸ்டி சட்டம் எனப் பல சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்பட்ட பின்னரே, ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்த சாத்தியமாகும். இவை அனைத்தும் அடுத்த சில மாதங்களில் நிறைவேற்ற வேண்டும்.

வரி விகிதம்

வரி விகிதம் எவ்வளவு என்று நிர்ணயிப்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசு அமைக்கப்பட்ட குழு 18 சதவீத வரி விகிதத்தை பரிந்துரை செய்தது. இதை மாநிலங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. மாநில அரசு முழுக்க முழுக்க வரியை நம்பித்தான் இருக்கிறது. தற்போது சேவை வரி 15%, விற்பனை வரி, வாட் வரியின் மூலமாக மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது இந்த வரி வருமானம் குறைய வாய்ப்புள்ளது.

அதாவது, ஜிஎஸ்டியில் 18% என வரி விதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் மத்திய அரசு 10%, மாநில அரசு 8% என வருமானத்தை பிரித்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போது மாநில அரசுக்கு 14.5% - 15% வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமான இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமான இழப்பை ஈடுக்கட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு தொகையை வழங்கவேண்டும். இந்த தொகை எப்படி வழங்க வேண்டும் என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை.

பொதுவாக சில மாநிலங்களில் உற்பத்தி அதிகமாக இருக்கும். சில மாநிலங்களில் நுகர்வு அதிகமாக இருக்கும். உற்பத்தி அதிகமாய் உள்ள மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாய் குறைவாக இருக்கும்.

நுகர்வு மூலம் இருக்கும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வருவாய் அதிகமாக கிடைக்கும். இதனை கணக்கில் கொண்டு மத்திய அரசு மாநிலங்களுக்கு வரியை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவை உள்ளது.

அதே நேரத்தில் ஜிஎஸ்டியை நாட்டில் அமல்படுத்துவதற்கு பல நிலைகளில் தயாராக வேண்டியுள்ளது. மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகளை அமைக்க வேண்டும். வரி விதிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நிறுவனங்களை விரைவாக ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆனால் 20 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கு உதாரணமாக ஜிஎஸ்டி மசோதா பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலங்களின் சுய ஆட்சி பாதிக்கப் படுவதாகவும் கட்சிகள் கூறி வரு கின்றன.

இதுபோன்று பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஜிஎஸ்டி முன் உள்ள சவால்களை களைந்து விரைவில் ஜிஎஸ்டியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சீர்த்திருத்தத்தால் ஏற்படப் போகும் மாற்றங்கள் இன்னும் சில வருடங்களில் நமக்குத் தெரிந்துவிடும்.

devaraj.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

வலைஞர் பக்கம்

5 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

11 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்