யு டர்ன் 12: ஜெனரல் எலெக்ட்ரிக் – முரட்டுக்காளை

By எஸ்.எல்.வி மூர்த்தி

சிறுவயது முதலே ஜாக் வெல்ஷ் (Jack Welch) துறுதுறுப்பானவன். அப்பா ரெயிலில் கண்டக்டர். தினமும் 14 மணி நேரங்கள் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். இரவு வீட்டுக்கு வரும்போது, பயணிகள் ரெயிலில் விட்டுச் சென்ற நாளிதழ்களைக் கொண்டுவருவார். மகனோடு சேர்ந்து வாசிப்பார்.

வாழ்நாள் முழுக்க ஜாக் கடைப்பிடித்த கடும் உழைப்பும், நாளிதழ் படிக்கும் பழக்கமும் அப்பா உபயம், ஜாக் சிறு வயதிலேயே பொறுப்பானவன். மாட்ச்கள் நடக்கும்போது பந்து பொறுக்கிப் போடுதல், வீட்டுக்கு வீடு பேப்பர் டெலிவரி, ஷூ கடையிலும், ஒரு தொழிற்சாலையிலும் பகுதிநேர வேலை என்று  குடும்பத்துக்கு உதவும் பல முயற்சிகள்.

ஜாக் திக்குவாய். இதனால், சக மாணவர்கள் கேலி செய்வார்கள். அதனால் அவர்களிடமிருந்து விலகித் தனிமையை நேசிக்கத் தொடங்கினான். அவன் அம்மா துணிச்சல்காரி. தனிமை மகனுக்கு நல்லதல்ல என்று நினைத்தார். அவனிடம் அடிக்கடி சொல்லுவார்.

``நீ உன் கிளாஸ்மேட்களைவிட அதி புத்திசாலி. உன் நாக்கைவிட மூளை அதிவேகமாக வேலை செய்கிறது. இதனால், நீ நினைக்கும் வேகத்தில் பேச்சு வரவில்லை.”

இது உண்மையோ அல்லது மகனைச் சமாதானம் செய்ய அம்மா சொன்ன பொய்யோ, தெரியவில்லை. ஜாக் நம்பினான். தாழ்வு மனப்பான்மை பறந்தது, தன்னம்பிக்கை பிறந்தது. விளையாட்டுகளில் பங்கேற்றான். படிப்பில் ஜொலித்தான். பள்ளியின் ஹாக்கி டீம் கேப்டன் ஆனான். சக மாணவர்களின் ஹீரோ ஆனான். அதன்பிறகு திக்குவாயை ஒரு குறையாக அவன் என்றுமே நினைக்கவில்லை. மேற்படிப்புகளுக்கும், பதவி உயர்வுகளுக்கும், இது தடையாகவே இருக்கவில்லை.

அம்மாவின் இன்னொரு பாடம், தோல்விகளை எதிர்கொள்ளும் துணிச்சல். அவன் கேப்டனாக இருந்த பள்ளி ஹாக்கி டீம் தொடர்ந்து ஆறு மேட்ச்களில் தோல்வி கண்டது. ஏழாவது மேட்ச். எப்படியும் ஜெயிக்கும் வெறியோடு ஜாக் அணி களத்தில் இறங்கினார்கள். அதுவும் தோல்வி. ஜாக் கோபத்தோடு ஹாக்கி மட்டையைக் கீழே வீசினான்.

ஆட்டம் பார்க்க வந்திருந்த அம்மா ஓடி வந்தார். எல்லோர் முன்னாடியும் திட்டினார், ``உதவாக்கரைப் பயலே, தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாவிட்டால், ஜெயிப்பதும் உனக்குத் தெரியாது. இப்படியே இருந்தால், நீ விளையாடவே வேண்டாம்.”

ஜாக் மனதில் பசுமரத்தாணியாக இந்த அனுபவம் பதிந்தது. போட்டி மனப்பான்மை வளர்ந்தது. தோல்வியையும், வெற்றியையும் சமநிலையோடு ஏற்கும் பக்குவம் வந்தது. 25 வயதில், அர்பானா ஷாம்பேன் அட் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் (University of Illinois at Urbana-Champaign) கெமிக்கல் எஞ்சினீரிங் துறையில் டாக்டர் பட்டம்.

உடனேயே, 1960 - ல் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் (சுருக்கமாக ஜீஈ - GE) ஜுனியர் எஞ்சினீயராகச் சேர்ந்தார். ஜெனரல் எலெக்ட்ரிக் பாரம்பரியப் பெருமைகள் பல கொண்டது. இதை நிறுவியவர் மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன். 1878 -ல், இவர், எடிசன் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி தொடங்கினார். எலெக்ட்ரிக் பல்ப், வீட்டுக்கு வீடு மின்சார சப்ளை ஆகியவற்றால், கஜானாவில் பொன்மழை.

1879 –ல், தன் பல நிறுவனங்களை ஒன்றிணைத்து ‘எடிசன் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி’ என்னும் குழுமமாக்கினார். 1892. தாமஸ் ஹூஸ்ட்டன் (Thomas Houston) என்னும் மின்சாரத் துறை மேதையும் கை கோர்த்தார்கள். புதிய நிறுவனத்துக்கு ‘ஜெனரல் எலெக்ட்ரிக்’ என்று பெயரிட்டார்கள். விஞ்ஞானிகள் தொடங்கிய கம்பெனி. ஆகவே, ஆராய்ச்சிக்கும், புதிய பொருட்கள் கண்டுபிடிப்புக்கும் முக்கியத்துவம் தந்தார்கள்.

மின்விசிறி, இஸ்திரிப் பெட்டி, ஃப்ரிஜ், சமையல் அடுப்புகள், மிக்ஸி, வாஷிங் மெஷின், வாக்வம் க்ளீனர், ஏர் கண்டிஷனர், ரேடியோ என வரிசை வரிசையாக அன்றாட வீட்டுவசதிக் கருவிகள் அரங்கேறின. ஜீஈ, அமெரிக்காவில் ஒவ்வொரு வீடும் அறிந்த பிராண்ட் ஆனது.

1939– ல் தொடங்கி, 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போர், ஜீஈ வரலாற்றில் ஒரு திருப்புமுனை. போர்விமான எஞ்சின்கள், அணு ஆலைகள், கம்ப்யூட்டர்கள், மெடிக்கல் கருவிகள் என அதி நவீனத் தொழில்நுட்பத் தயாரிப்புகள். ஆமாம், அடுக்களையிலிருந்து அணு ஆலைகளுக்கு அசுரப் பாய்ச்சல்!

நல்ல கம்பெனி, நல்ல சம்பளம். பெருமையோடு சேர்ந்த ஜாக் விரைவில் பல பிரச்சினைகளைச் சந்தித்தார். அவர் ஒரு வெள்ளந்தி. பேச்சில் ஒளிவுமறைவே கிடையாது. மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். பொறுமையே இல்லாதவர். தன் கடமையைச் செய்யாதவர்களிடம் கோபப்படுவார், கத்துவார்.

இதனால், ஆரம்ப நாட்களில் பலரோடு உரசல் வந்தது. ஆனால், அவரின் நேர்மை, திறமை, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைச் சீக்கிரமே உணர்ந்தார்கள். ‘கரடுமுரடான’ அவரை அவராக ஏற்றுக்கொண்டார்கள்.

முதல் வருட இறுதி. ஜாக்குக்கு 10 சதவிகித சம்பள உயர்வு. திறமையைக் கணக்கிடாமல், மானாவாரியாக எல்லோருக்கும் இதே உயர்வு கொடுத்திருப்பதை அறிந்தார். நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று முழங்கும் பயமே இல்லாத போராளி, தன் மேனேஜரிடம் போனார்.

ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்தார். ஜாக்கின் திறமையை அறிந்த அவர், ஏற்க மறுத்தார். தன் தவறை ஒப்புக்கொண்டார், விரைவில் திருத்துவதாகச் சொன்னார். சொன்னதைச் செய்தார். ஜாக் வேலையில் தொடர்ந்தார்.

1963... ஜாக் ஜீஈ-ன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் சோதனைச்சாலையின் பொறுப்பாள ராக இருந்தார். ஒரு நாள். திடீரென, குண்டு வெடித்ததுபோல் சப்தம். கூரை வெடித்துப் பறந்தது. ஜன்னல்களின் கண்ணாடிகள் சிதறின. எங்கும் புகை. இன்னொரு பகுதியில் இருந்த ஜாக் உடல் நடுங்க ஓடோடி வந்தார்.

நல்ல காலம், உள்ளே இருந்தவர்கள் வெளியே ஓடி வந்துவிட்டார்கள். சின்னக் காயங்கள். உயிர்ச் சேதமில்லை. மேனேஜர் சார்ல்ஸ் ரீட் (Charles Reed). அவரிடமிருந்து ஜாக்குக்கு அவசர போன் - ‘‘உடனே வந்து என்னைப் பார்’’. ஜாக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை. ரீட் வார்த்தைகளால் வறுத்தெடுப்பார். சீட்டைக் கிழிப்பார். தன் ஜீஈ கதை முடியப்போகிறது.

ரீட் அவர், உட்காரச் சொன்னார். அமைதியாகப் பேசினார். என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று விசாரித்தார். ஜாக் எதையும் மறைக்காமல் விவரங்களைச் சொன்னார். ரீட் கேட்டார், ``இந்த ப்ராஜெக்டில் தொடர விரும்புகிறாயா?”

``ஆமாம்.”

``அப்படியானால், இத்தகைய விபத்துகள் மீண்டும் நடக்காமலிருக்க என்னென்ன செய்வாய்?”

ஜாக் மனதில் திட்டம் தயார். விளக்கினார். ரீட் அசந்துபோனார்.

``இந்த விபத்து சில மாதங்களுக்குப் பின் நடந்திருந்தால், நிச்சயம் உயிர்ச்சேதம் ஆகியிருக்கும். ஓக்கே, குட்லக்.”

நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்த ஜாக் மனதில் நடந்ததை நம்பவே முடியாத ஆனந்த அதிர்ச்சி. மாபெரும் நஷ்டம் உண்டாக்கிய இளம் ஊழியரைத் தண்டிக்காமல், அவரை முன்னேற்ற முயற்சிகள் செய்யும் கம்பெனியா, உயர் அதிகாரியா? தன் உழைக்கும் நாட்கள் அத்தனையும் ஜீஈ-க்குத்தான் என்று முடிவெடுத்தார்.

ரீட் கற்றுக்கொடுத்த மேனேஜ்மென்ட் கொள்கை வாழ்க்கையின் கலங்கரை விளக்கமாயிற்று. தவறுகளும், தோல்விகளும், முயற்சியின் அடையாளங்கள். தோல்வியே காணாதவன், முயற்சிகள் செய்யாத சோம்பேறி. ஆகவே, ஒருவர் தவறு செய்தால், அவர்களைத் தண்டிக்கக்கூடாது. அவர்கள் அணுகுமுறையைத் திருத்தி, இன்னும் முயற்சிகள் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

தன் முதல் மேனேஜ்மென்ட் ஆசான் ரீட் கற்றுக்கொடுத்த பாடத்தைப் பின்பற்றத் தொடங்கியபின் ஜாக் அலுவலக வாழ்க்கையில் ஏறுமுகம். ஐந்தே வருடங்களில் பிளாஸ்டிக்ஸ் பிரிவின் வைஸ் பிரசிடென்ட் ஆனார். அப்போது வயது 33. முப்பதுகளில் இந்தப் பதவிக்கு வந்தவர் ஜாக் மட்டுமே. 1981-ல் ஜீஈ குழுமத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ. ஆமாம், இருபத்தி ஒன்றே வருடங்களில் அடிமட்ட ஜுனியர் எஞ்சினீர் பதவியிலிருந்து உச்சப் பதவி.

1981 – ல், ஜாக் குழுமத் தலைவரானபோது, ஜீஈ 140 வெவ்வேறு துறைகளில் பொருட்கள் தயாரித்தது. பெரும்பாலானவை, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத துறைகள். ஒன்றில் சரிவு வந்தால், இன்னொரு துறை சிகரம் தொட்டது. மொத்தத்தில் லாபம். மேனேஜ்மென்ட் மேதைகள், முதலீட்டு ஆலோசகர்கள், ஊடகங்கள் இந்த யுக்தியை வானளாவப் புகழ்ந்தார்கள்.

இது பலமல்ல, பலவீனம். அகலக் கால் வைக்காமல், தனித்துவம் கொண்ட துறைகளில் மட்டுமே ஜீஈ தொடரவேண்டும் என்று ஜாக் உறுதியாக நம்பினார். ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து காமெரா, டிவி, கால்க்குலேட்டர்கள் எனப் பல்வேறு துறைகளில் ஏராளமான போட்டியாளர்கள் தரமான பொருட்களை நம்பவே முடியாத குறைந்த விலைகளில் தந்தார்கள். அமெரிக்காவின் முதுகெலும்பான கார் தயாரிப்பு முதலில் பாதிக்கப்பட்டது.

நிஸான், டொயோட்டா, ஹோண்டா போன்ற ஜப்பானியக் கார்கள் அமெரிக்க விற்பனையில் 23 சதவிகிதத்தைப் பிடித்தன. அமெரிக்கக் கார் உலக ஜாம்பவான்களான ஜெனரல் மோட்டார்ஸ். ஃபோர்ட், க்ரைஸ்லர் (Chrysler) ஆகிய கம்பெனிகளில், தொழிலாளர் சம்பளம், நிறுவனச் செலவு ஆகியவை ஜப்பானைவிடப் பன்மடங்கு அதிகம். ஆகவே, விலையைக் குறைக்கவே முடியாத நிலை. திணறினார்கள்.

இந்தக் கையறுநிலை ஜீஈ-க்கும் வரும் என்று ஜாக் கணித்தார். தலைவர் பதவி ஏற்றவுடன் சொன்னார், “நான் புரட்சி கொண்டுவரப்போகிறேன்.”

எங்கும், நம்பவே முடியாத அதிர்ச்சி. கம்பெனி பிரச்சினையே இல்லாமல் ஓடுகிறது, தொடர்ந்து லாபம் காட்டுகிறது. முரட்டுக் காளை கண்ணாடிப் பொருட்கள் விற்கும் கடையில் நுழைந்தால், அத்தனையையும் தவிடுபொடியாக்கும், அதேபோல், இல்லாத நோய்க்கு வைத்தியம் பார்க்கப்போகும் ஜாக் ஆட்சியில் எடிசன் கம்பெனியின் 102 வருடப் பாரம்பரியம், குரங்கு கைப் பூமாலையாகிவிடுமோ? அனைவர் மனங்களிலும் பயம், பயம்.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்