யு டர்ன் 01: நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

By எஸ்.எல்.வி மூர்த்தி

பாட்ஷா படம். எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா என்று மனித வாழ்க்கையை ரஜினி எட்டு எட்டாகப் புட்டுப் புட்டு வைப்பார்.  முதல் எட்டில் விளையாட்டு, இரண்டாம் எட்டில் கல்வி, மூன்றாம் எட்டில் திருமணம், நான்காம் எட்டில் குழந்தை, ஐந்தாம் எட்டில் செல்வம், ஆறாம் எட்டில் உலகப் பயணம், ஏழாம் எட்டில் ஓய்வு. எட்டாம் எட்டில் முடிவு.

ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் As You Like It நாடகத்தில் வாழ்க்கையை ஏழாகப் பிரிப்பார்.  முதலில், கைக்குழந்தை; இரண்டாவது, பள்ளிச் சிறுவன்; மூன்றாவது காதல் வசப்பட்ட இளைஞன்; நான்காவது போர்வீரன்;  ஐந்தாவது நீதிபதி; ஆறாவதாக வயோதிகர் ; ஏழாவதும், இறுதியானதுமாய் மரணம்.

மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் மட்டுமல்ல, நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் வாழ்க்கைச் சக்கரம் இருக்கிறது, இதில் நான்கு கட்டங்கள் என்று மேனேஜ்மென்ட் மேதைகள் சொல்கிறார்கள். இந்தக் கொள்கையின் பெயர் - தயாரிப்புப் பொருட்களின் வாழ்க்கைச் சுழற்சி (Product Life Cycle).

கம்பெனிகள் புதிய தயாரிப்புப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். அறிமுகம் ஆன ஆரம்பத்தில் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்குகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சி. பிறகு, வளர்ச்சி வேகம் குறைந்த முதிர்ச்சி.

கடைசியாக வீழ்ச்சி. சந்தையிலிருந்து காணாமல் போய் விடுகின்றன. உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மர்ஃபி ரேடியோ, டயனோரா டி.வி, சாலிடேர் டி.வி, கோடக் காமெரா, ஸோனி Walkman, பாரி (Parry) மிட்டாய், அம்புலிமாமா பத்திரிகை எனப் பல ஐட்டங்கள் பற்றிச் சிலாகிப்பார்கள்.  அவை யாவும் இறைவனடி சேர்ந்துவிட்டன. ஆகவே, தயாரிப்புப் பொருட்களின் வாழ்க்கைச் சுழற்சிக் கொள்கை வெறும் வறட்டுத் தத்துவமல்ல, காலம்காலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

கம்பெனி என்றால் என்ன? தயாரிப்புப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்று லாபம் பார்ப்பது. தயாரிப்புப் பொருட்களுக்குப் பிறப்பும், இறப்பும் உண்டு என்பதால், இந்தப் பொருட்களை நம்பியிருக்கும் கம்பெனிகளுக்கும் தோற்றம் உண்டு, மறைவு உண்டு. பிசினஸ் தொடங்கும்போது, பல நூறு ஆண்டுகள் நிலைக்கவைக்க வேண்டும் என்று தொழில் முனைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், இது பகற்கனவு என்று உலக மேனேஜ்

மென்ட் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. முதல் தலைமுறையைத் தாண்டி, இரண்டாம் தலைமுறை வரை 60 சதவிகிதக் குடும்ப பிசினஸ்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. மூன்றாம் தலைமுறை வரும்போது வெறும் 10 சதவிகிதக் கம்பெனிகளே உயிர் பிழைக்கின்றன. நான்காம் தலைமுறையில் லட்சத்துக்கு ஒன்று மிஞ்சினாலே ஆச்சரியம்.

நம்மைச் சுற்றிப் பாருங்கள்.பல்லாண்டுகளுக்கு முன்னால் சக்கைப்போடு போட்டவர்களில் வடக்கில் டாடா, பஜாஜ், நம் ஊரில் முருகப்பா குழுமம், டி. வி. எஸ் போன்ற ஒருசிலர் மட்டுமே சேதப்படாமல் மிஞ்சியிருக்கிறார்கள். நேற்றைய பிரபல பிசினஸ் குழுமங்கள் அடையாளமே இல்லாமல் போயே போயிந்தி. இவர்கள் எப்படித் தாக்குப்பிடித்தார்கள்?

கிரேக்க, எகிப்திய இதிகாசங்களில் ஃபீனிக்ஸ் (Phoenix) என்னும் பறவை உண்டு. இது அக்னி தேவனின் உருவம். மிக அழகான பறவை. ரத்தச் சிவப்பு நிறம், தங்கமாய்த் தகதகக்கும் இறகுகள். கழுகின் கம்பீரம். தோற்றம் மட்டுமா அழகு? குயிலைத் தோற்கடிக்கும் இனிமைக் குரல். கடவுள் இத்தோடு நீண்ட ஆயுளும் கொடுத்தான். ஃபீனிக்ஸ் பறவையின் ஆயுள் 500 ஆண்டுகள். இந்த அற்புதப் படைப்பில் இன்னொரு  அதிசயம், ஒரே சமயத்தில் உலகத்தில் ஒரே ஒரு ஃபீனிக்ஸ் பறவை மட்டும்தான் வாழும்.

தன் இறுதிக் காலம் எப்போது வருகிறது என்று ஃபீனிக்ஸ் பறவைக்குத் தெரியும். அப்போது நறுமணம் கமழும் தாவரத் தண்டுகள், வாசனைப் பொருட்கள் ஆகியவற்றால் கூடு கட்டும். அந்தக் கூட்டைத் தீயிடும். எரியும் நெருப்பில் குதிக்கும். சாம்பலாகும். அப்போது நடக்கும் ஒரு ஆச்சரியம். கனன்று கொண்டிருக்கும் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் எழுந்து வரும், அதிக அழகோடு, அதிகத் தகதகப்போடு. இதை ஃபீனிக்ஸின் எழுச்சி (Rise of the Phoenix) என்று சொல்வார்கள்.

நம் ஊரிலும் இதேபோல் ஒரு கதை இருக்கிறது. கழுகின் கதை. முப்பது வயதில் கழுகுகளுக்கு இறக்கைகள் உதிரும், நகங்களும் அலகும் பலம் இழக்கும். இது முடிவா அல்லது புது வாழ்வின் தொடக்கமா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி அந்தக் கழுகுக்கு மட்டுமே உண்டு. உடலோடு ஒட்டிய வயோதிக இறக்கைகளைத் தானே பிய்த்துப் போட வேண்டும், தேய்ந்திருக்கும் அலகையும் நகங்களையும் கல்லில் மோதி மோதி உடைக்க வேண்டும்.

இப்படித் தன்னைத் தானே சித்திரவதை செய்துகொண்டால் அலகு, இறக்கைகள், நகங்கள் ஆகியவை புத்தம் புதிதாய் முளைக்கும். கழுகு மீண்டும் வானத்தில் உயர உயரப் பறக்கும். மகிழ்ச்சியாக 70 வருடங்கள் இளமை வாழ்க்கை வாழும். இல்லாவிட்டால், வயோதிக நோய்களுக்குப் பலியாகும். வாலிபத்தைத் திரும்பப் பெறக் கழுகு தரும் விலை, அந்தச் சுய சித்திரவதை.

டாடா, பஜாஜ், முருகப்பா குழுமம், டி. வி. எஸ் போன்றவர்கள் எல்லோருமே வீழ்ச்சிக் காலங்களைச் சந்தித்தவர்கள். ஆனால், அந்த வேளைகளில் ஃபீனிக்ஸ் பறவைபோல், கழுகுகள் போல், தங்களை வருத்திக்கொண்டார்கள், புதுப்பித்துக் கொண்டார்கள். மறுபிறவி எடுத்தார்கள். பேரிடர்களைத் துணிச்சலோடு, வித்தியாச யுக்திகளோடு எதிர்கொண்டு பழம்பெருமையை மீட்டார்கள்.  இதுதான் யூ- டர்ன். மேனேஜ்மென்டில் “டேர்ன் அரவுன்ட்” (Turnaround)  என்று அழைக்கப்படுகிறது.

இந்த வியூகத்துக்குத் தனிச் சூத்திரமோ, விளக்கக்கையேடோ கிடையாது. இது  ஐ.சி.யூவில் இருக்கும் நோயாளிக்கு  ஒரு டாக்டர் வைத்தியம் பார்ப்பது மாதிரி. சோதனை முடிவுகளைத் தன் அறிவு, திறமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து நோயின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், நோயாளியின் உடல்நிலையை எடைபோடவேண்டும், மருந்தா, அறுவைச் சிகிச்சையா என்று முடிவு செய்யவேண்டும், உலகில் பல நிறுவனங்கள் இப்படிப் புனர்ஜென்மம் எடுத்திருக்கிறார்கள்.

``நான் திரும்பி வந்துட்டேன்” என்று கம்பீரமாக முழங்கும் இவர்களை வரும் வாரங்களில் நாம் சந்திக்கப்போகிறோம்.

இவர்களை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? வால்ட்டர் கானன் என்னும் மேதை 1927- ம் ஆண்டில், போராடு அல்லது ஓடு (Fight or flight) என்னும் தத்துவத்தை உருவாக்கினார். இது என்ன சித்தாந்தம்? சில உதாரணங்கள் சொல்கிறேன்.

பள்ளியிறுதித் தேர்வு. இரண்டு மாணவர்கள் தோற்றுப்போகிறார்கள். ஒருவன் விஷம் குடிக்கிறான். மற்றவன் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதி நல்ல மார்க் வாங்குகிறான். காதலில் தோற்கும் ஒருவன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று தேவதாஸ் ஆகிறான். மற்றவன், புதிய அத்தியாயம் தொடங்குகிறான்.

கம்பெனியில் ஆள் குறைப்பு. ஒருவன் மனம் இடிந்து போகிறான். அடுத்தவன் மனத்தைத் தேற்றிக்கொண்டு புதிய வேலையில் சேருகிறான். மூன்றுவிதமான பிரச்சினைகள். ஆனால், பாருங்கள், எந்தப் பிரச்சினையையும் இரண்டே இரண்டு வழிகளில்தான் சமாளிக்க முடியும். ஒரு வழி நேருக்குநேராக எதிர்மோதிப் போராடுவது. அடுத்த வழி பிரச்சினைகளிலிருந்து எஸ்கேப் ஆவது.

எந்த எதிர்வினையை  மேற்கொள்கிறோம் என்பதை நம் மூளைதான் தீர்மானிக்கிறது. ஆனால், “தாண்டுடா ராஜா தாண்டு” என்று மனக்குரங்கை (மூளையை) நாம் பழக்கமுடியும். மூளையைப் பழக்கும் முறைகளில் ஒன்று, யூ டர்ன் அடித்தவர்களின் வரலாற்றைப் படிப்பது, பாடம் கற்றுக்கொள்வது.

பிசினஸ் ஒரு பரமபதம். எத்தனைதான் திட்டமிட்டாலும், பகடை எப்போதும் பன்னிரெண்டு போடாது. திடீரெனச் சறுக்கல்கள் வரும். நீங்கள் தொழில் முனைவரா, அரசிலோ, தனியார் நிறுவனத்திலோ வேலை பார்ப்பவரா, மாணவரா? சாதிக்கும் ஆசை கொண்ட யாரானாலும், முயற்சிகள் செய்யும்போது தோல்விகள் வரும்.

கீழே விழும் நீங்கள் உடனே எழுந்து நிற்கிறீர்களா அல்லது உடல் தளர்ந்து, மனம் உடைந்து, வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறீர்களா? நம்மில் பலர் ஓடித்தான் போகிறோம். அந்த வேளைகளில் இந்த ஐ.சி.யூ. டாக்டர்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். உங்கள் மூச்சில் சக்தி பிறக்கும். நாடி நரம்புகளில் புது ரத்தம் பாயும். தடைகள் அத்தனையும் தூள், தூள்.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்