பத்து வகைகளில் பட்டையைக் கிளப்பும் புதிய மாருதி எர்டிகா

By செய்திப்பிரிவு

இந்திய கார் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி தனது புதிய எர்டிகா மாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எப்போதுமே தனது போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் விற்பனையில் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னரே சந்தையில் இறங்கும் மாருதி இப்போதும் அதை உறுதி செய்துள்ளது. புதிய எர்டிகா முன்பதிவு துவங்கிய ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பேர் புதிய எர்டிகாவுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

2012ல் வெளியான எர்டிகா மாடலின் மேம்பட்ட இரண்டாம் தலைமுறை ஃபேஸ்லிப்ட் மாடலாக இந்தப் புதிய எர்டிகா வெளிவந்துள்ளது. அதுவும் பத்து விதமான வகைகளில் அட்டகாசமான டிசைனில் வெளிவந்துள்ளது. டீசல் வேரியன்ட்களில் நான்கு மாடல்களும், பெட்ரோல் வேரியன்ட்களில் ஆறு மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக பெட்ரோல் மாடல்களில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ள இரண்டு மாடல்கள் இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் புதிய எர்டிகா கார் 4,395 எம்எம் நீளம், 1,735 எம்எம் அகலம், 1,690 எம்எம் உயரம் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய மாடலை விட சற்று நீளமாகவும், அகலமாகவும் இருப்பதால் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் இடவசதி பயணத்தை மேலும் சொகுசாக்குவதாக இருக்கிறது.

இதன் வெளிப்புற வடிவமைப்பு மிக அம்சமாக உள்ளது. ஃபேஸ்லிப்ட் வடிவமைப்புடன், முன்புறம் உள்ள ஸ்டட்டட் கிரில் அமைப்பும், புரொஜக்டர் டபுள் பாரல் ஹெட்லைட்டும், புதிய ஸ்போர்ட் பம்பர் வடிவமைப்பும் காருக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கிறது. பின்புறம் உள்ள 3டி டெயில் லைட்களுடன் எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் காரின் கோட்டிங் மற்றும் பினிஷிங் அனைத்து பகுதிகளிலும் விளம்புகளிலும் கச்சிதமாக இருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தைத் தருவதாக இருக்கிறது.

வெளிப்புறம் மட்டுமல்ல, உட்புறத்திலும் வடிவமைப்பும், வசதிகளும் பிரீமியம் கார்களுக்கு எந்தக் குறைச்சலும் இல்லாமல் இருக்கிறது. டூயல்-டோன் இன்டீரியர்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் என அனைத்தும் மிக நவீன தொழில்நுட்பங்களுடன் உள்ளன.

முக்கியமாக இதில் மூன்றாவது வரிசை இருக்கையையும் ரெக்லைனஸ் வசதியாகக் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. பின்பக்கம் பைகளை வைக்கவும் போதுமான இடவசதி உள்ளது. முந்தைய மாடலில் பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு இடவசதி போதுமானதாக இல்லை. மேலும் பின்பக்கம் பைகளை வைக்கவும் இடவசதி மிகவும் குறைவாகவே இருந்தது. இந்தக் குறைகளையெல்லாம் இந்தப் புதிய எர்டிகா காரில் சரிசெய்திருக்கிறது.  

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை மாருதி எர்டிகா மாடலில் முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள் தரப்பட்டுள்ளன. பிரேக்குகள், ஏபிஎஸ் இபிடி தொழில்நுட்பத்துடன் உள்ளன. முன்பக்கம் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் லீடிங் ட்ரெய்லிங் பிரேக்கும் உள்ளது.  ரிவர்ஸ் பார்க்கிங் கேமராக்கள், ஸ்பீட் அலெர்ட்கள், சீட்-பெல்ட் ரிமைன்டர் மற்றும் சைல்டு-சீட் மவுன்ட்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய எர்டிகா காரின் ஹார்ட்டெக் பிளாட்பார்ம் புதியது. இதில் 16 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஸ்விப்ட் மாடலில் உள்ளதுபோல கோடுகள் கொடுக்கப்பட்டிருப்பது பார்ப்பதற்கு ஸ்டைலாக உள்ளது. இதில் மலைப்பகுதிகளில் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான ஹில் ஹோல்டு டெக்னாலஜி உள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் வசதி கார் ஸ்கிட் ஆவதைத் தடுக்கிறது.

இந்தப் புதிய மாருதி எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாருதி சியாஸ் மாடலில் கொடுக்கப்பட்டிருந்த K-சீரிஸ் ஸ்மார்ட் ஹைபிரிட் என்ஜினாகும். இந்தப் புதிய பெட்ரோல் என்ஜின் 105 பிஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் செயல்திறன் கொண்டது. இவற்றில் 5 மேனுவல் அல்லது 4 ஆட்டோமேடிக் ஸ்பீட் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 90 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் கொண்டதாக உள்ளது. இது 5 மேனுவல் ஸ்பீட் கியர்பாக்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய எர்டிகா கார், பேர்ல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பேர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பேர்ல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜினில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 19.34 கிமீ, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் 18.69 கிமீ மைலேஜ் தருவதாகவும், டீசல் என்ஜின் லிட்டருக்கு 25.47 கிமீ மைலேஜ் தருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

7 இருக்கை வசதி கொண்ட மல்டி பர்பஸ் கார் பிரிவில் இந்தப் புதிய மாருதி எர்டிகா விலை குறைவாக இருப்பதுடன் இடவசதி, பாதுகாப்பு, ரம்யமான பயண அனுபவம், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது.

மாருதி சுசூகிக்கு இந்தியாவில் இப்போது வரை 2 கோடிக்கும் மேலானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஒரு மாதத்துக்கு 14 லட்சம் கார்களை சர்வீஸ் செய்கிறது. 3200 பிரத்யேக ஷோரூம்களை வைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்