கூடி வாங்கும் கடனில் கோடி நன்மை

By ஆனந்த் கல்யாணராமன்

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘Love per Square Foot’ என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் நாயகன், நாயகியான சஞ்சய், கரினா இருவரும் மும்பையில் வீடு வாங்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தேவையான அளவுக்குக் கடன் கிடைக்கவில்லை. இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்வதன் மூலம் இணைந்து கூட்டு வீட்டுக் கடன் வாங்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது படத்துக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவி சேர்ந்து வாங்கும் கூட்டு வீட்டுக் கடன் சிறப்பான ஒன்றாகவே இருக்கிறது.

பலன்கள்

ஒன்று, கூட்டு வீட்டுக் கடனில் கடன் தொகை அதிகமாகக் கிடைக்கும். காரணம், கடன் வழங்குபவர் இருவருடைய நிதி நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கடன் தொகையை நிர்ணயிக்கிறார். உதாரணத்துக்கு, உங்களுடைய ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் என்று வைத்துக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் உங்களுக்கு ரூ. 50 லட்சம் கடன் வழங்க முடியும்.  ஆனால், உங்களுக்கு ரூ. 75 லட்சம் கடன் தேவை. அந்தச் சமயத்தில் நீங்கள் உங்கள் துணைவியுடன் சேர்ந்து கூட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுடைய துணைவியும் உங்களைப் போல வருமானம் ஈட்டுகிறார் என்றால் நீங்கள் எதிர்பார்த்த கடன் தொகையைப் பெற முடியும். அதன் மூலம் நீங்கள் விரும்பிய இடத்தில் அழகான பெரிய வீட்டை வாங்க முடியும். இரண்டாவது, கூட்டுக் கடன் என்று வரும்போது, உங்களுடைய துணைவருடைய உதவியால் உங்களுடைய மாதாந்திர நிதி சுமையைக் குறைத்துக்கொள்ள முடியும்.

மேலும், கூட்டு வீட்டுக் கடனில் கூடுதலான வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. ஏனெனில், வீட்டுக் கடன் திருப்பி செலுத்துவதில் இருவருமே பங்கெடுத்துக்கொள்வதால் இருவருமே வரிச் சலுகைக்குத் தகுதியானவர்களாக இருக்கிறீர்கள். பிரிவு 80 சியின் கீழ் இருவருமே தனித்தனியாக ரூ. 1.5 லட்சத்துக்கு வரிச்சலுகைப் பெறலாம். சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட வீடு எனில் செலுத்தும் வட்டியில் ரூ. 2 லட்சம் வரை விலக்கு பெறலாம். வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும் வாடகை வருமானம் வருடத்துக்கு ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக இல்லாத பட்சத்திலும் செலுத்தும் வட்டியில் விலக்குப் பெற முடியும்.

கூட்டு வீட்டுக் கடன் வாங்கும்போது, இணைக் கடனாளர், இணை உரிமையாளர் இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இவற்றின் அடிப்படையில் வரிச் சலுகைகளில் மாற்றங்கள் உண்டு. இரண்டுமே ஒருவராக இருப்பது நல்லது என்று கடன் வழங்குபவர்கள் அறிவுறுத்துகிறார்கள். உதாரணத்துக்கு, கணவன் மனைவி இருவரும் வீட்டுக்கு உரிமையாளர்கள் எனில், கடன் வழங்குபவர்கள் இருவரின் பேரில் கூட்டுக் கடனை வாங்கும்படி அறிவுறுத்துகிறார்கள். ஆனால் கணவரின் சகோதரர் தனது சகோதரருக்கு உதவும் பொருட்டு கடனில் பங்கெடுத்துக்கொள்வதாகக் கூறுகிறார். இவருடைய நிதி நிலை நன்றாக இருக்கும்பட்சத்தில் கடன் வழங்குபவர் தாராளமாகக் கடன் வழங்குவார். ஆனால், இவருக்கு வீட்டின் உரிமையில் எந்தப் பங்கும் இல்லை.   

ஒரு கூட்டு வீட்டுக் கடனில் அதிகபட்சமாக ஆறு பேர் வரை கடன்தாரர்களாக இருக்கலாம். ஆனால், நண்பர் ஒருவர் உதவுகிறேன் என்று இணை கடன் தாரராகச் சேர்ந்துகொள்ள முன்வந்தால் அதனை கடன் வழங்குபவர்கள் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், கடன் வழங்குபவர்கள் குடும்ப உறவினர்களாக இருந்தால் மட்டுமே இணை கடன்தாரர்களாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். என்ஆர்ஐகளும் இணை கடன்தாரர்களாக ஆகலாம். 18 வயதுக்குட்பட்டவர்களைக் கடன்தாரர்களாகச் சேர்த்துக்கொள்ள முடியாது.

கடன் திருப்பிச் செலுத்துவதை கூட்டாகவும் செய்யலாம், தனி ஒருவராகவும் செய்யலாம். கூட்டுக் கடனில் பங்குதாரர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு உள்ளது. கணவன் மனைவி சேர்ந்து வாங்கிய கூட்டுக் கடன் எனில், கணவன் எதிர்பாராதவிதமாக இறக்கும் பட்சத்திலோ அல்லது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குச் சென்றாலோ, அந்தக் கடனை அடைக்கும் பொறுப்பு மனைவிக்கு உண்டு. அதேபோல் கணவரின் சகோதரர் கடனில் பங்குதாரராக இருந்தால், அவர் வீட்டுக்கு உரிமையாளராக இல்லாதபட்சத்திலும், அவர் அந்தக் கடனை அடைக்க வேண்டிய பொறுப்புடையவராகிறார்.

எனவே, கூட்டுக் கடனில் இணை கடன்தாரராக உங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு முன், குறிப்பாக வீட்டுக்கு உரிமையாளர் இல்லாதபட்சத்தில், கவனமாக இருங்கள்.

வரிச் சலுகைகள்

வரிச் சலுகைகள் பெறும் தகுதி, சொத்தில் உரிமையுள்ள, வாங்கிய கடனைத்திருப்பி செலுத்துவதில் பங்கெடுத்துக் கொள்கிற இணை கடன்தாரர்களுக்கு மட்டுமே உண்டு. ஒரு ஆண்டுக்கு, வீட்டின் உரிமையாளர்களான கணவன் மனைவி இருவரும் கடனை 60:40 என்ற விகிதத்தில், கணவன் ரூ. 1.8 லட்சமும், மனைவி ரூ. 1.2 லட்சமும் அசலில் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதில், கணவனுக்கு 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும். மேலும் செலுத்தும் வட்டியில் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வரிச்சலுகைப் பெறலாம்.

கடனில் பங்குதாரராக இருப்பவர் வீட்டின் உரிமையாளராக இல்லாதபட்சத்தில் வரிச்சலுகை இல்லை. உதாரணமாக, கடனில் பங்கெடுத்துக்கொண்ட கணவரின் சகோதரர் வீட்டின் உரிமையாளர் இல்லையென்பதால் அவருக்கு வரிச்சலுகைப் பெறும் தகுதி இல்லை. 

மேலும், வீட்டின் மதிப்பில் கணவன் மனைவி இருவருக்கும் சமபங்கு இருந்தாலும், கடனை முழுவதுமாக மனைவி செலுத்தினால் வரிச்சலுகை பெறுவதற்கு மனைவிக்கு மட்டுமே தகுதி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

32 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்