தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 03: இயற்கை என்னும் பேராசான்

By பாமயன்

‘‘கானகத்து மரங்களைப் பாருங்கள், அவற்றுக்கு நீர் ஊற்றுவதில்லை, உரம் இடுவதுமில்லை, களை எடுப்பதுமில்லை. ’’

பண்ணை வடிவமைப்பில் முதன்மையானது நமது உற்றுநோக்கும் பண்பு. அது கூர்மையானதாக இருக்க வேண்டும். குறிப்பாக இயற்கையிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும். வேளாண்மைக்கான அடிப்படை விதிகளைக் காட்டிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பாழ் நிலம் எப்படி மெல்லச் மெல்ல சோலையாக மாறுகிறது. இயற்கை எவ்வாறு அதை உருவாக்குகிறது என்பதைக் கற்றறிந்துகொள்ள முடியும்.

பட்டினி போடாத இயற்கை

நல்ல உயிர்த்துடிப்பான ஒரு காட்டைப் பார்க்கும் போது பல உண்மைகள் தெரியவரும். நெடி துயர்ந்த மரங்கள், அவற்றுடன் எண்ணற்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள், செடிகள், கொடிகள், கிழங்குகள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் - இப்படிக் கணக்கற்ற உயிர்கள் பசி மறந்து ஒத்திசைந்து வாழ்கின்றன. மனிதர்களை எடுத்துக்கொண்டாலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை பழங்குடிகள் பசியின்றியே இருந்தனர். அவர்கள் காட்டிலிருந்து பெற்றுக்கொண்டனர், புதிதாகக் கற்றும் கொண்டனர்.

ஆனால் முன்னேறிய மனித இனம், நிலவுக்கும் மற்றக் கோள்களுக்கும் பயணம் செய்யும் ஆற்றல் பெற்ற மனித இனம், இன்றும் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறது. இயற்கை தான் படைத்த யாவற்றுக்கும் தேவையான உணவையும், உடுப்பையும், வாழிடத்தையும் வஞ்சகம் இன்றி வழங்கியுள்ளது. ஆனால், மனிதனின் பேராசையை மட்டும் நிறைவு செய்ய இயலாமல் அது தவிக்கிறது.

மண்ணைப் பஞ்சு போல மாற்றி

நிலத்தை வளமாக்கும் பணியில் முதன்மையானது நிலத்தை இலை தழைகளால் மூடி வைப்பது. ஏனெனில் பாதுகாக்கப்படாத மேல் மண், மண் அரிமானத்தால் நிலத்தைப் பாறை போல மாற்றிவிடும். எனவே, மண் அரிமானத்தைத் தடுத்து மேல் மண்ணைப் பாதுகாக்க வேண்டுமானால், நிலத்தை மூடி வைக்க வேண்டும். மரங்களில் இருந்து உதிரும் இலைகளைக் கொண்டும், மண்ணிலிருந்து முளைத்து வரும் கொடிகளைக் கொண்டும், நிலத்தை இயற்கை மூடி வைக்கிறது. இதனால் வளமான காட்டில் மண் அரிமானம் ஏற்படுவதில்லை. இதையே பண்ணையத்தில் பின்பற்ற வேண்டும்.

தொடர்ச்சியாக விழும் இலைகள், ஏற்கெனவே உள்ள மட்குகள் மண்ணில் நீர்ப்பிடிப்பை அதிகரிக்கின்றன. இதனால் காட்டு நிலம் பஞ்சுபோல மாறிவிடுகிறது. சிறிதளவு மழை பெய்தாலும் நிலம் நீரைப் பிடித்து வைத்துக் கொள்கிறது. இதையே பண்ணையத்தில் தாவரக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் மண்ணின் மேல் மூடாக்குகளாக மூடி வைத்தோமானால், நிலம் பஞ்சுபோல மாறும், மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மண்புழுக்கள் அமைக்கும் துளைகள் மூலமாக மண்ணுக்குள் நீர் புகுந்து நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும். எனவே, நீர்ப்பாசன வசதி செய்ய வேண்டிய வேலை குறையும்.

இதைப் பண்ணையில் பின்பற்ற முடியும், அதிக அளவு மூடாக்குகளை (இலை/தழைகளை) சேர்த்தால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை மேம்படும். எடுத்துக்காட்டாகத் தென்னந்தோப்புகளில் கிடைக்கும் மட்டைகளையும் பன்னாடை போன்ற எண்ணற்ற கழிவையும் எரித்துவிடாமல், வெளியே தூக்கி எறிந்துவிடாமல் தோப்புக்குள்ளாகவே போட்டுவைத்தால், நீர்ப்பாசனம் செய்ய வேண்டிய அளவு குறைந்துவிடும். பொள்ளாச்சி/ஈரோடு பகுதி இயற்கைவழி பண்ணையாளர்கள் இதைச் செய்துகாட்டி உள்ளனர்.

(அடுத்த வாரம்: உள்ளேயே இருக்கிறது ஊட்டம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

வாழ்வியல்

5 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்