வீட்டுக்குள் காத்திருக்கும் புதிய எமன்

By ந.வினோத் குமார்

‘காற்றைக் குடித்துக் கொண்டாவது உயிர் வாழ்ந்துவிடுவேன்' என்பது கிராமத்துச் சொலவடைகளில் ஒன்று. ஆனால், நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் சுவாசிக்கக்கூட முடியாத நச்சுத்தன்மையுடன் காற்று மாறிவிட்டதுதான் இன்றைய நடைமுறை யதார்த்தம்!

நோய் சுமை

கடந்த 2010-ம் ஆண்டு உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த 500 ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அதன்படி ‘உலக நோய் சுமை-2010' எனும் பட்டியல் தயாரானது. அதில் தெற்காசிய நாடுகளில் ஏற்படும் நோய்களுக்குக் காற்று மாசுபாடுதான் மிக முக்கியக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போன்றதொரு பட்டியல் 2013-ம் ஆண்டும் வெளியானது. அதில் ஒரு சராசரி இந்திய ஆணுடைய வாழ்நாள் 64.2 ஆண்டுகளாகவும், பெண்ணுடைய வாழ்நாள் 68.5 ஆண்டுகளாகவும் இருந்தது. குறிப்பிட்ட இந்த காலக்கெடுவுக்கு முன்பு ஒருவர் இறந்துவிட்டால், அது ‘அகால மரணம்' எனப்படுகிறது. அப்படிப்பட்ட அகால மரணங்களை ஏற்படுத்தும் நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றுக்கு அடிப்படையாகக் காற்று மாசுபாடு இருக்கிறது.

தொழிற்சாலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்தும் வெளிப்படும் புகையாலும், வீடுகளில் சமையல் செய்யும்போதும் வெளிப்படும் புகையாலும் காற்று மாசுபடும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மேற்கண்ட மூன்றின் விகிதங்கள் கூடவோ குறையவோ செய்யலாம்.

சமையல் மாசு அதிகம்

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், தொழிற்சாலைப் புகையால் ஏற்படும் மாசுபாட்டைவிட வீடுகளில் சமையல் செய்யும்போது வெளிப்படும் புகையால் ஏற்படும் மாசுபாடு அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி (பார்க்க: பெட்டி செய்தி).

வீடுகளில் ஏற்படும் புகையால் காற்று மாசுபடுவது குறித்துச் சமீபகாலமாகத்தான் அக்கறை உருவாகியுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவது பற்றி 70-களில் தேசிய அளவில் கவனம் திரும்பியது. பிறகு, வாகனங்களால் ஏற்படும் மாசுபாடுகளுக்கும் அந்தக் கவனம் விரிவடைந்தது.

இதன் காரணமாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ‘காற்று தர நிர்ணயம்' எனும் விதி ஒன்றை 1982-ம் ஆண்டு கொண்டுவந்தது. பின்னர் 1994 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அந்த விதி திருத்தப்பட்டது.

என்ன பிரச்சினை?

தொழிற்சாலைகள் இந்தக் காற்றுத் தரநிர்ணய விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க ‘தேசியக் காற்றுக் கண்காணிப்புத் திட்டம்' உருவாக்கப்பட்டது. அதன் கீழ் தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் வெளியாகும் சல்பர் டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, காற்றில் மிதக்கும் துகள்கள் (suspended particulate matter) மற்றும் சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் (respirable suspended particulate matter) ஆகிய நான்கு அம்சங்கள் அளவிடப்படுகின்றன.

இதில் சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனவே, அதை பி.எம். 10 என்கிறார்கள் (PM 10). இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே வேண்டும் என்பது உலகச் சுகாதார அமைப்பு விதி.

சில காலத்துக்கு முன்புவரை உலகின் பெரும்பான்மையான நாடுகள் பி.எம். 10 அளவைக்கொண்டுதான் நோய்த் தொற்றுக் காரணவியல் ஆய்வுகளை (epidemiology) மேற்கொண்டுவந்தன.

ஆனால், சமீபகாலமாக 2.5 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்கும் சுவாசிக்கக்கூடிய அளவுடைய துகள்கள் பற்றி ஆய்வுகள் நடத்தப் பட்டுவருகின்றன. இந்த அளவை பி.எம். 2.5 (PM 2.5) என்கிறார்கள். இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே வேண்டும் என்பது விதி.

எவ்வளவுக்கு எவ்வளவு துகள்களின் மைக்ரான் அளவு குறைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

நோய்கள் அதிகம்

எனவே, பி.எம். 2.5 அளவைக் கொண்டு நோய் தொற்று காரணவியல் ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்மூலம் காற்று மாசுபாட்டால் என்னென்ன நோய்கள் தோன்று கின்றன, பரவுகின்றன என்பது குறித்துத் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தற்சமயம் பி.எம். 2.5 அளவு கண்காணிக்கப் படுவதில்லை. எனினும் இந்த அளவை அடிப்படையாகக்கொண்டு, வீடுகளில் உருவாகும் காற்று மாசுபாட்டைப் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது (பார்க்க: பெட்டி செய்தி).

கண்காணிப்பு இல்லை

மேற்கண்ட, நான்கு பொருட்களின் அளவுகளைக் கண்காணிக்க இந்தியா முழுவதும் 342 கண்காணிப்பு மையங்கள் இருக்கின்றன. சென்னையில் எட்டு இடங்களில் இந்த மையங்கள் இருக்கின்றன. இந்த மையங்களில் இரண்டில் மட்டுமே பி.எம். 2.5 கணக்கிடப்படுகிறது. அப்படி இந்த அளவை கணக்கிடும் அடையாறு மற்றும் அண்ணா நகர் பகுதிகள் குடியிருப்புப் பகுதிகள்தானே தவிர, தொழிற்சாலைப் பகுதிகள் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகள் மிகுந்த மணலி போன்ற பகுதிகளிலாவது இந்த அளவைக் கண்காணிப்பதற்கு ஒரு மையம் ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதை வலியுறுத்து வதற்குக் காரணம், மணலியில் 2004 முதல் 2012-ம் ஆண்டுவரை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பி.எம்.10 கூடிக்கொண்டே போவது தான். அப்படியென்றால், சென்னையில் வேறு எந்தப் பகுதியையும்விட மணலி மிக ஆபத்தான வளையத்துக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.

இது குறித்துத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது, "மேற்கண்ட இரண்டு இடங்களில் பரீட்சார்த்த முயற்சியாகத்தான் பி.எம். 2.5 அளவுகளைக் கண்காணித்துவருகிறோம். இந்த அளவைக் கணக்கிடுவதற்கு மிகுந்த பொருட்செலவு ஏற்படும்" என்றார்.

செலவு அதிகம் ஆகும் என்பதற்காக மக்களின் உடல்நலன் குறித்து அரசு அக்கறை காட்டாமல் இருப்பதை நியாயப்படுத்த முடியுமா?

வீட்டில்தான் பிரச்சினை அதிகம்!

மாசுபாட்டை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிப்புறக் காற்று மாசுபாடு (Ambient Air Pollution), மற்றது உட்புறக் காற்று மாசுபாடு (Indoor Air Pollution).

காற்று

சமீபகாலமாக, வெளிப்புறக் காற்று மாசுபாட்டைக் காட்டிலும் உட்புறக் காற்று மாசுபாடு, அதாவது வீடுகளுக்குள் ஏற்படும் மாசுபாடு அதிகமாக இருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகம் இதில் மோசமாக இருக்கிறது என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம்.

சென்னை போரூர்  ராமசந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதாரப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்தான் மேற்கண்ட தகவல் கிடைத்துள்ளது.

விறகு அடுப்பு

அந்த ஆய்வு குறித்துப் பகிர்ந்துகொண்டார் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் எஸ்.சங்கர்:

"வெளிப்புற அல்லது சுற்றுப்புறக் காற்று மாசுபாட்டுக்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம். உட்புற அல்லது வீடுகளில் உருவாகும் காற்று மாசுபாட்டுக்கு மிக முக்கியக் காரணம் சமையல் எரிபொருட்கள்தான்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். அவர்கள் சமையல் செய்வதற்கு விறகு அடுப்புகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால் பெருமளவு புகை உண்டாகிறது.

குழந்தைகளுக்குப் பாதிப்பு

இவர்களுடைய வீடுகளில் காற்றோட்டமும் சரியாக இருப்பதில்லை. ஆகவே, அடுப்புப் புகை வீட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதனால் நுரையீரல், சுவாசக் கோளாறுகள் முதற்கொண்டு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

முக்கியமாக ஐந்து வயதுக்குக் கீழே இருக்கும் குழந்தைகள் எப்போதும் தாயுடன் இருப்பதால், சமையல் செய்யும்போது ஏற்படும் புகையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கடந்த 2009-ம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்திக்கான மத்திய அமைச்சகம் வீடுகளில் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 15 புதிய வகை அடுப்புகளை அங்கீகரித்து, அறிமுகம் செய்தது.

ஆனால் அதிக விலை, நீடித்து உழைக்காமை, பழுதானால் உதிரி பாகங்கள் கிடைக்காமை போன்ற குறைபாடுகளால் பல மாற்று அடுப்புகள் தோல்வியைச் சந்தித்தன. அதேநேரம், இத்தகைய மாற்று அடுப்புகளால் வீடுகளில் புகை குறைந்து, உட்புறக் காற்று மாசுபாடும் குறைவது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாற்று அடுப்பு நல்லது

இந்தக் காற்று மாசுபாட்டை பி.எம். 2.5 அளவை வைத்து நாங்கள் கணக்கிட்டோம். அதன்படி மரபுவழி விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும்போது, மாசுபட்ட காற்றை மக்கள் அதிக அளவில் சுவாசிக்கிறார்கள். ஆனால், மாற்று அடுப்புகளில் இந்தப் பிரச்சினை குறைந்த அளவில் இருந்தது. இருந்தபோதும், அவை வெளியிடும் புகையின் அளவும், உலகச் சுகாதார அமைப்பு அனுமதித்த அளவைவிட அதிகமாகவே உள்ளது.

தமிழகத்தில் சுற்றுப்புறக் காற்று மாசுபாடு, விறகு அடுப்புகளால் ஏற்படும் உட்புறக் காற்று மாசுபாடு ஆகியவற்றைப் பி.எம். 2.5 அளவை வைத்துக் கணக்கிட்டபோது உட்புறக் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்குத் தீர்வாக காஸ் சிலிண்டர், பயோ காஸ், இண்டக் ஷன் அடுப்பு, மின்சார அடுப்பு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். மாற்று அடுப்புகள் மற்றும் மாற்று எரிபொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்போது, ஓரளவு சுத்தமான காற்றைச் சுவாசிக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

மாசை குறைக்கும் மாற்று அடுப்பு







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்