புள்ளினம் போற்றும் புகைப்படக்காரி!

By என்.கெளரி

ஒரு பறவையைப் போல நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பறக்க வேண்டும் என்ற ஆசை நம் அனைவரது ரத்தத்திலும் சின்ன வயசிலிருந்தே ஊறிப்போன ஒன்றாக இருக்கும்.

பலரையும் போலப் பறவைகளின் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்ட கோவைப் பெண் ரத்னா வர்ஷினி, பள்ளியில் படித்த பதின்ம வயதில் இருந்தே பறவைகளைப் பின்தொடர்ந்து படமெடுத்து வருகிறார். இதற்காக இந்தியாவின் பல காடுகளைத் தேடிச் சென்றிருக்கிறார்.

காட்சி தொடர்பியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கும் இவர், தற்போது கல்வி மேலாண்மையில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். உயிரினங்களைப் பின்தொடர்ந்து படமெடுப்பதுடன் நின்றுவிடாமல், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். இவர் புகழ்பெற்ற ஜி.டி. நாயுடுவின் கொள்ளுப் பேத்தி.

பறவைகள் என்ற அற்புதம்

"பறவைகளைக் கவனிக்கும் பழக்கத்தை என்னுடைய தாத்தா ஜி.டி. கோபால் ஏழு வயதில் எனக்கு அறிமுகப்படுத்தினார். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவாரத்துக்கு அருகே உள்ள கோயம்புத்தூரில் வசித்ததால் பறவைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. ஒரு முறை பள்ளி நூலகத்தில் சாலிம் அலியின் புத்தகம் கிடைத்தது. பறவைகளைப் பற்றிய ஆழமான புரிதலை அது உருவாக்கியது" என்று பறவைகள் மீது தன் ஆர்வம் திரும்பியதற்கான காரணத்தைச் சொல்கிறார் வர்ஷினி.

கோவை போட்டோ சென்டர் மருதாசலத்தின் கானுயிர் புகைப்படங்கள்தான் பறவைகளைப் படமெடுக்கத் தன்னைத் தூண்டிய தாகக் கூறும் வர்ஷினி, "பத்தாம் வகுப்பு விடுமுறையில், ஊட்டியில் வெள்ளை கண்ணி (Oriental white eye) என்னும் பறவையை ‘க்ளிக்' பண்ணியதுதான் என்னுடைய முதல் படம்.

அதற்குப் பிறகு தனது படங்களில் பறவைகளையே அதிகம் மையப்படுத்துவதற்கு வர்ஷினி சொல்லும் காரணம், பறவைகள் பாடும் விதம், நடக்கும் விதம், பறக்கும் விதம் என அவற்றின் ஒவ்வொரு அசைவுமே அற்புதம்தான். அவற்றின் வாழ்க்கை முறை என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது”.

கட்டளையிட முடியாது

காட்டுயிர்களை ஒளிப்படம் எடுப்பது சாகச அனுபவம் என்று பலரும் நம்பினாலும், அது சவால்கள் நிறைந்தது. நிறைய தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். படங்களின் அழகால் கவரப்பட்டு நீங்களும் உயிரினங்களைப் படமெடுக்க விரும்பலாம். அதில் சில எளிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உயிரினங்களுக்குப் போஸ் கொடுக்க நீங்கள் கட்டளையிட முடியாது. வானிலை போன்ற இயற்கை மாற்றங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் எந்தச் செயல்பாட்டையும் செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாத் தடைகளையும் மீறிக் களத்துக்குச் சென்று உங்கள் ஆர்வத்தை நிஜமாக்கத் தயாராக இருக்க வேண்டும்.

"அத்துடன் உயிரினங்கள், பறவைகளின் இயல்பை அறிந்துகொள்வது காட்டில் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு மட்டுமில்லாமல், ஒரு உயிரினத்தை எப்படி நெருங்க வேண்டும், அது எந்த மாதிரி அசைவுகளை எதிர்பார்க்கும் என்பது போன்ற தகவல்களும் படம் எடுப்பதற்கு உதவும்.

அரிதினும் அரிது

“மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளிலும்கூட இருவாச்சிகளை (Hornbill) அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. அந்த வகையில் பெரும்பறவைகளில் ஒன்றான மலபார் இருவாச்சியைப் படமெடுத்தது மகிழ்ச்சி தந்தது. பரத்பூரில் செந்தொண்டை ஈப்பிடிப்பானை (Red throated flycatcher) படம் எடுத்ததை மறக்கமுடியாது. ஆப்பிரிக்க வகையிலிருந்து மாறுபட்ட இந்தியக் கழுதைப்புலியை வெறும் 20 அடி தொலைவில் குஜராத்தில் படமெடுத்தது சிலிர்ப்பான அனுபவம்", என்கிறார் வர்ஷினி.

நெருங்கும் பேராபத்து

ஆனால், அழுகு மிகுந்த இந்த உயிரினங்கள் வாழும் பல பகுதிகள் நாடு முழுவதும் சுற்றுலா தலங்களாக அதிவேகமாக மாறிவருகின்றன. நிச்சயமாக இது உயிரினங்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்ற தனது வருத்தத்தையும் பதிவுசெய்கிறார் வர்ஷினி.

“மற்றொரு பக்கம் சிறந்த படம் கிடைக்க வேண்டும், விருது வாங்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இயங்கும் சிலரும் இருக்கிறார்கள். அதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. உண்மையில், உயிரினங்களின் வாழ்விடங்களைப் பற்றியும் அருகிவரும் உயிரினங்கள், அரிய உயிரினங்களைப் பற்றியும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞருக்குப் பெரும் பங்கு இருக்கிறது", என்று அக்கறையுடன் முடிக்கிறார் வர்ஷினி.

மேலும் அறிய: www.birdsofindia.net

வர்ஷினி, தொடர்புக்கு: varshini_birds@yahoo.co.in







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

17 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்